மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்பு-சொல்வது சிங்கக்கொடி சம்பந்தன்!

புதிய அரசியல் தீர்வு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சிறிலங்காவில் இருந்து இந்தியா சென்ற குழுவில், சம்பந்தனும் பங்கேற்றிருந்தார். இந்தநிலையில், அங்கு பல்வேறு சந்திப்புக்களில் கலந்துக் கொண்ட பின்னர், சிறிலங்கா திரும்பியுள்ள அவர், ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு சென்ற நாடாளுமன்ற குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தது. இதன்போது தான், அரசியல் தீர்வு குறித்து இந்திய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டு கால ஆயுதப் போராட்டத்தால், வடக்கு கிழக்கு மாகாணங்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன. போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், இன்னும் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை.

அபிவிருத்தி நடவடிக்கைகள் மாத்திரம் இடம்பெற்றுவருகின்றன. எவ்வாறாயினும் அரசியல் தீர்வைப் பெறும் முயற்சியில் தற்போதைய அரசு ஈடுபடுகின்றது.

எனினும் இனவாதிகள் இதனைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எது எவ்வாறாயினும், புதிய அரசியல் அமைப்பு உருவாகும் என்ற நம்பிக்கை தம்மிடம் உண்டு என தெரிவித்த சம்பந்தன், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா உட்பட பன்னாட்டுச் சமூகம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்திய சிறிலங்கா ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு அமையவேண்டும். புதிய அரசியலமைப்பு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு.

இதைத் தவிர்க்க முடியாது. எனவே அரசியல் தீர்வு விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் வழங்கிய இந்திய பிரதமர், இலங்கையில் மீண்டும் போர் ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டோம் என தெரிவித்தாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் காலதாமதமின்றி அரசியல் தீர்வைக் காணவேண்டும். இதில் இந்திய அரசாங்கம் உறுதியாக உள்ளது என நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்