வட மாகாண சபைத் தீர்மானத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டு!

சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறும், இலங்கைத்தீவில் தமிழினச் சிக்கலுக்கு நிலையான தீர்வு காண ஐநா ஏற்பாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்துமாறும் ஒருமனதாகத் தீர்மானம் இயற்றியுள்ள வட மாகாண சபைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறிலங்கா அரச படையினாரால் கொலையுண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கும், பாலியல் வல்லுறவுக்கு ஆளான நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களுக்கும் நீதி கிடைக்கச் செய்வதற்கான இத்தீர்மானத்தை இயற்றியுள்ள உங்களைப் போற்றி வணங்குகிறோம்.

அனைத்துலக சமூகத்தை ஏமாற்ற சிறிலங்கா அரசாங்கம் முயன்று வருவதையும், தமிழர் தாயகத்தை சிறிலங்கா அரச படைகள் ஆக்கிரமிப்புச் செய்திருக்கும் புறச்சூழலையும் கடந்து, தமிழ்த் தேசத்தின் விருப்பங்களைத் தெரிவிக்கும் இத்தீர்மானத்தை இயற்றியுள்ளீர்கள்.

இலங்கைத்தீவு உள்ளேயும் வெளியேயும் தமிழர்களின் அரசியல் வேணவாக்கள் ஒன்றே என்பதை இத்தீர்மானம் மெய்ப்பிக்கிறது. ஒன்றுபட்டு நிற்கையில் நாம் இலங்கை தீவை மையப்படுத்திய இந்தியப் பெருங்கடல் மூலோபாய அரசியலில் நாம் ஒரு சக்தியாகவும், ஒரு தரப்பாகவும் ஆற்றல் பெறுவோம்.

வட மாகாண சபை உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக, இத்தீர்மானத்தை முன்மொழிந்த திரு எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு நன்றி சொல்லகின்றோம்.
எதிர்க்கட்சித் தலைவர் திரு எஸ். தவராஜாவும், அவை உறுப்பினர் திரு அயூப் அஸ்மினும் தீர்மானத்தை வழிமொழிந்தது குறிப்பிடத்தக்கது’ என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களமு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

About இலக்கியன்

மறுமொழி இடவும்