ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள்!!

சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண்டதுடன் தங்கள் தேசத்தின் மீதான பற்றுருதியை மீண்டுமொருமுறை அனைத்துலகத்திற்கு இடித்துரைத்தார்கள்.

17.09.2018 திங்கட்கிழமை அன்று சுவிஸ் நாட்டின் ஜெனிவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட பொங்குதமிழ் கவனயீர்ப்பு பேரணியானது உலகத்தமிழர்களின் ஒன்றுபட்ட உரிமைக்குரலாக ஒலிக்க, அவர்கள் தாங்கிய பதாகைகள் மூலம் வேற்றின மக்களுக்கு எடுத்துரைத்து, நகர்ந்து ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது.

பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய ஒன்றுகூடலானது தமிழீழத் தேசியக்கொடி வானுயர ஏற்றப்பட்டு, தியாக தீபம் லெப். கேணல் திலீபன், ஈகைப்பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்தலுடன் அகவணக்கம் மலர்வணக்கத்துடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
புலம்பெயர் நாடுகளில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்தாலும் தமது வேர்களைத் தேடி அதன் இருப்புக்காக உரத்துக் குரல்கொடுத்த தமிழ் இளையோர்களின் பங்கு இப்பேரணியில் சிறப்பாக அமைந்ததுடன் தமது வாழிட மொழிகளில் புலமைத்துவத்துடனும், ஆளுமையுடனும் ஆற்றிய உரைகளுடன், சமகால கருப்பொருளை உள்ளடக்கியதான வாள்ப்பாணம் கருத்துவெளிப்பாடானது மக்களின் மனதை கனக்கவைத்தது.

குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து பல நாடுகளுக்கூடாக மனிதநேயப் பிரச்சாரப் பயணங்களை ஈருருளி மற்றும் ஊர்திகள் மேற்கொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்கள் தாம் பயணித்த நாடுகளில் சந்தித்த அரசியல் பிரமுகர்களிடம் வரலாறு தங்களுக்கு வழங்கிய கடமையின் நோக்கத்தை எடுத்துரைத்ததோடு, பொங்குதமிழ் பேரணியின் போது ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் காரியாலயத்தில் அரசியற் சந்திப்பும் நடைபெற்றதுடன் பேரணி தொடர்பாக கோரிக்கைகள் அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையும், இன்றும் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் பேசப்பட்டது.

தமிழீழம் என்ற தேசம்தான் தங்கள் வாழ்வை வளமாக்கும் என்பதிலே உறுதி கொண்டிருந்த மக்கள், தேசத்தை மீட்டெடுக்க எல்லாவித அர்ப்பணிப்புக்களையும் செய்யத் தயாராக இருப்பதாக தமிழீழத் தேசியத் தலைவருக்கும், மாவீரர்களுக்கும் உறுதி வழங்கி நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்துடன,; தணியாத தாகத்துடனும் மாவீரர் நாமத்துடனும் கலைந்து சென்றனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

About இலக்கியன்

மறுமொழி இடவும்