அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும்: சுரேஸ்

மைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இதுவரை வழங்கிய ஆதரவினால் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன?

மேற்கண்டவாறு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், புதிய அரசியல் சாசனம் தொடர்பாக மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் யாழிலும் அதன் தலைவர் சம்மந்தன் மட்டகளப்பிலும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக புதிய அரசியல் சாசனம் உருவாக வேண்டுமானால் இந்த அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்கள்.
நாம் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களது பிரச்சனைகளில் தேசிய இனப் பிரச்சனை என்ற ஒன்றும், யுத்தத்திற்கு பின்னரான பிரச்சனைகள் என்றும் இரண்டு உள்ளது.

இதில் காணாமல் போனோர் பிரச்சனை, நில விடுவிப்பு, அரசியல் கைதிகளின் பிரச்சனை ஆகியன யுத்ததிற்கு பின்னரான பிரச்சனைகளாகும்.
ஆனால் கூட்டமைப்பு தற்போது இவை இரண்டையும் ஒன்றோடு ஒன்று கலந்து பேசுவது சரியான உத்தியல்ல.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின், தலமைகள் இது பற்றி பேசினால் தம்மால் இனப் பிரச்சனைக்கான தீர்வு பற்றி பேச முடியாது என்கிறார்கள்.
உண்மையில் இப் புதிய அரசாங்கத்துடன் இணக்கி செயற்பட்டதனால் இவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன ?
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரியோசனமான தீர்வு காணப்பட்டதா? காணி விடுவிப்பு இப் புதிய அரசால் எங்கு எத்தனை ஏக்கர் விடுவிக்கப்பட்டது ?
வடக்கில் 60 ஆயிரம் ஏக்கர் கைகயகப்படுத்தப்பட்ட காணிகளில் எத்தனை ஏக்கர் விடுவிக்கப்பட்டது ?. இவ்வாறான நிலையில் ஜ.நா மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு மேலதிகமாக கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்து அதனூடாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எத்தனையை நடமுறைப்படுத்த முடிந்தது ?. இந்நிலையில் இவ் அரசாங்கத்தின் இறுதி கால கட்டத்திலும் இவ் அரசை காப்பாற்றவே இக் கூட்டமைப்பு முயல்கின்றது.

மேலும் புதிய அரசியல் சாசனம் உருவாக்கம் தொடர்பில் அது அவ்வாறு நடக்காது என்றே சிங்கள தலைவர்கள் கூறுகின்றார்கள். அதேபோன்று சிறிலங்கா சுதந்திரகட்சியும்,
ஜக்கிய தேசிய கட்சியும் அதனை நிறைவேற்றுவதில் அக்கறையுடன் செயற்படவில்லை. அவர்கள் கால தாமதப்படுத்துவதன் நோக்கமே இது நிறைவேறாது என்பதற்காகவே.

எனவே இந் நேரத்திலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உண்மையை கூற வேண்டும் என்றார்.
ஆயுத போராட்டத்தை கொச்சைப்படுத்த சம்மந்தன், சுமந்திரனுக்கு அருகதை இ ல்லை..
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஆயுத போராட்டம் இடம்பெற்றிருக்க கூடாது என பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.
முன்னர் விடுதலைப் புலிகளது போராட்டத்தை ஆதரித்து பேசியவர் இப்போது அவரது சுருதி மாறியுள்ளது.

தற்போது அரசாங்கத்துடன் பேசுவதாக இருந்தாலும் சரி ஜ.நா.மனிதவுரிமை பேரவையில் பேசுவதாக இருந்தாலும் சரி, சர்வதேசத்துடன் பேசுவதாக இருந்தாலும் சரி விடுதலைப் போரட்டத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் ஏறி நின்றே பேச முடியும்.
பல்லாயிரம் இளைஞர்கள் இப் போரட்டதிற்காக தமது உயிரை தியாகம் செய்துள்ளார்கள். ஆகவே இவர்களது போராட்டத்தை கொச்சைப்படுத்த இவருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது.

மேலும் இரா.சம்மந்தன் போராட்டம் ஒன்றில் கைது செய்யப்பட்டு பனாங்கொடை முகாமில் தடுத்து வைக்கப்பட்ட போது இனிமேல் இப்படியான போரட்டங்களில் ஈடுபட மாட்டேன் என முதலாவதாக கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வந்தவர் இவர்.
ஆகவே இவர்களுக்கு அகிம்சை போராட்ட வரலாறும் இல்லை. ஆயுத போராட்டத்திற்கு அண்மையிலும் இவர்கள் வரவில்லை. இந்நிலையில் இப் போராட்டங்களை கொச்சைப்படுத்த இவர்களுக்கு உரிமை இல்லை என்றார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக..
தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் அரசியல் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?
ஜனாதிபதி மற்றும் பிரதமர் அத்தகைய நிலைக்கு வந்துள்ளார்களா என்பது அடுத்த கேள்வியாகும். இந்நிலையில் இவர்கள் இதனை சட்ட பிரச்சனையாக பார்க்கின்றார்களே தவிர அரசியல் பிலரச்சனையாக பார்க்கவில்லை.
குறிப்பாக கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரது கருத்துப்படி பார்க்கும் போது இவர்களும் தமிழ் அரசியல் கைதிகளது விடயத்தை சட்டப் பிரச்சனையாகவே பார்க்கின்றார்கள்.

அவ்வாறாயின் இவர்கள் அவர்களை அரசியல் கைதிகளாக பார்க்காது பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றார்கள்.
அவ்வாறு கூட்டமைப்பானது இவர்களை அரசியல் கைதிகளாகவே பார்க்குமாக இருந்தால் இவர்களது விடுதலை தொடர்பில் சட்ட பிரச்சனையாக பார்க்காது அதனை அரசியல் பிரச்சனையாக பார்த்து
அவர்களை விடுதலை செய்வது தொடர்பான அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும். அதனை விடுத்து இவர்கள் செயற்படுவார்களாயின் அது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமாக அமையாது என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்