புதிய மாகாண கீதம் அறிமுகம், சர்ச்சைகளுடன் நிறைவடைந்த இறுதி அமர்வு

வடக்கு மாகாண சபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடந்த கடைசி அமர்விலேயே வடக்கு மாகாண சபையின் கீதத்துக்கு சபையின் அங்கீகாரம் பெறப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூடிய மாகாண அவையில், வடக்கு மாகாணத்தின் கீதம் சபை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்துடன் மாகாண கீதமும் இசைக்கப்பட்டது.

மாகாண கீதம், சிறிலங்காவின் தேசிய கீதம் போன்று இருமொழிகளில் இருக்க வேண்டும் என்று உறுப்பினர் ஜெயதிலக விடுத்த கோரிக்கையும் இன்று அவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதேவேளை, இன்றைய அமர்வில், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு உறுப்பினர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இன்றைய அமர்வு சர்ச்சைகளின்றி அமைதியான முறையில் நிறைவுடைய வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், இன்றும் சர்ச்சைகள் இடம்பெற்றன.

சபையின் அமைச்சர் அனந்தி சசிதரன் உரையாற்றிய போது சர்ச்சைகள் ஏற்பட்டன. அவர் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து தெரிவாகியவர்.

அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர்- ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நிலையிலும், தமிழ் அரசுக் கட்சியின் மூலம் கிடைத்த மாகாணசபை உறுப்பினர் பதவியை வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியதால் இந்தச் சர்ச்சை ஏற்பட்டது.

இன்றைய அமர்வில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் உரையாற்றியாற்றினர்.

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் 30 நிமிடங்கள் உரையாற்றிய முதலமைச்சர், தமது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைந்தாலும், தொடர்ந்தும் வடக்கில் மக்களுடன் மக்களாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா உரையாற்றினார். அப்போது முதலமைச்சருக்கும் அவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

அதையடுத்து, கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் உரையாற்ற ஆரம்பித்ததும், முதலமைச்சர் சபையை விட்டு வெளியேறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்