ரணிலுக்கு வெள்ளையடிப்பதே கூட்டமைப்பின் வேலை?

தமிழ் மக்களின் பிரச்சினைக்காக நீதிமன்றத்துக்கு செல்லாத கூட்டமைப்பு ஐக்கிய தேசியக்கட்சியை காப்பாற்றுவதுக்காக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (21) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவி என்பவற்றுக்கும் தமிழ் மக்களின் பிரச்சனைத் தீர்வுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்ற கருத்து என்பது ஒரு பொறுப்பற்ற கருத்தாகவே நாம் பார்க்கின்றோம்.

அதிலும் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்போம், இனப்பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்துவோம், போர்க்குற்றவாளிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் என்று கூறினர். அதே போன்று சிங்களக் குடியேற்றங்கள், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் தற்போது என்ன நடந்தது. இவற்றில் எதனை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
அப்போது எல்லாம் இவர்கள் நீதிமன்றம் செல்லவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்ற போது நாடு நெருக்கடியில் இல்லையா, இப்போது இப்ப ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு நெருக்கடி என்றவுடன் தான் நீதிமன்றம் செல்லுகின்றனர். நாடாளுமன்றத்திலும் சர்வதேச தரப்பினர்களுக்கும் இது குறித்து விளக்கமளிக்கின்றனர். ஆகவே இவர்களது செயற்பாடுகள் என்பது ஐக்கிய தேசியக் கட்சியைக் காப்பாற்றுவதும் தங்களது தவறுகளை மறைத்து தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சியாளர்களுக்கு வெள்ளையடிப்பதாகவே காணப்படுகின்றது என்றார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்