கூட்டமைப்பின் நடுநிலை மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக அமையாது – கஜேந்திரகுமார்

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டும் என கேட்பது மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக ஒருபோதும் அமையாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

அவ்வாறு கூறுகிறவர்கள் தங்களின் மாற்று திட்டம் என்ன? அதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? என்பதையும் கூறட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், “நாடாளுமன்றில் இன்று ஐ.தே.கட்சி 105 ஆசனங்கள் வைத்திருக்கின்றது. அதேபோல் பொதுஜன பெரமுன 96 ஆசனங்களை வைத்திருக்கின்றது. ஆக மொத்தத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்காவிட்டாலும் கூட ஐ.தே.கட்சி அதிகபடியான ஆசனங்களை வைத்திருக்கின்றது.

இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது ஏதோ மஹிந்த பெரும்பான்மையை பெற்றுவிடப்போகிறார், ஆகவே ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக ஜ.தே.கட்சிக்கு ஆதரவளிப்பதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு வெளிக்காட்ட நினைக்கிறது.

மேலும் மஹிந்த, ரணில், மைத்திரி ஆகிய 3 பேரும் தமிழர்களால் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். அந்த நிராகரிக்கப்படவேண்டியவர்களில் ஒருவருக்கு ஆதரவளிப்பதுடன், அவரை காப்பாற்றி அரசாங்கத்தின் அங்கமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறவர்கள். எம் மீது முன்வைக்கும் விமர்சனங்கள் குறித்து மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.” என கூறினார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்