நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் ஐதேக

பரந்தளவிலான கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது வரும் டிசெம்பர் 07ஆம் நாள் தீர்ப்பு அளிக்கப்படவுள்ள நிலையில், இரண்டு கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

ஐதேக இம்முறை புதியதொரு பெயர் மற்றும் சின்னத்தில் பரந்தளவிலான கூட்டணி ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுடன், ஏனைய சிறிய கட்சிகள், அமைப்புகளையும் உள்ளடக்கியதாக கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஐதேக ஈடுபட்டுள்ளது.

இந்தக் கூட்டணி, வைரம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், இதுகுறித்து உயர்மட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதேவேளை புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது மற்றும் அதனைப் பதிவு செய்து கொள்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஐதேக மற்றும் அதன் பங்காளிக் கட்சிகள் நேற்றுமுன்தினம் கலந்துரையாடியுள்ளன.

இதனிடையே, வைரம் சின்னத்தை சம்பிக்க ரணவக்க தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்திருப்பதாகவும் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், ஐதேகவுடனோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சி அல்லது சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனோ, ஜேவிபி கூட்டணி அமைக்காது என்று அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் நிகால் கலப்பதி தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்