தேசியத் தலைவர் பிறந்த நாளை கொண்டாட முற்பட்ட சிவாஜிலிங்கம் உட்பட 7 பேர் கைது!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 64 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட முற்பட்ட முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 7 பேர் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பிறந்த நாளை முன்னிட்டு காவல்துறை, இராணுவத்தினர் முற்றுகையில் தேசியத் தலைவர் இல்லம்!

தமிழினத்தின் தலை நிமிர்வு மேதகு வே.பிரபாகரன் அவர்களது 64 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லம் அமைந்திருந்த இடத்தில் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடப்பட இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

நள்ளிரவு வேளையில் பிறந்த தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம் நடாத்தப்படுவதை தடுக்கும் முகமாகவே இவ்வாறு காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசியத் தலைவர் இல்லம் அமைந்திருந்த இடத்தை துப்பரவு செய்ய முற்பட்ட நான்கு இளைஞர்கள் கைது!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 64 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீடு அமைந்துள்ள பகுதியை துப்பரவு செய்ய முற்பட்ட நான்கு இளைஞர்களை சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

இதே வேளை இன்று காலை வேளையில் தேசியத் தலைவர் இல்லம் இருந்த இடத்தை துப்பரவு செய்ய முற்பட்ட நான்கு இளைஞர்களது அடையாள அட்டைகளை பறிமுதல் செய்ததுடன் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதுடன் படமெடுத்த காவல்துறை!

தேசியத் தலைவர் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் காலை முதல் அங்கு ஊடகவியலாளர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களை அச்சுறுத்தி வெளியேற்ற முட்பட்ட போதிலும் ஊடகவியலாளர்கள் உறுதியுடன் நின்றிருந்தார்கள். இதையடுத்து தமது கைபேசிகள் மூலம் புகைப்படம் மற்றும் காணொளி பதிவுகளை மேற்கொண்டு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்கள்.

தேசியத் தலைவர் இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தடுத்த காவல்துறை!

இந்த பரபரப்பிற்கு நடுவே முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களுடன் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கருணாமூர்த்தி அவர்களும் முச்சக்கர வண்டியில் கேக் உள்ளிட்ட பொருட்களை கொண்டுவந்து தேசியத் தலைவர் இல்லம் அமைந்திருந்த இடத்தில் இறக்க முற்பட்ட போது அதை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்ய முற்பட்டது காவல்துறை.

அவர்களிடம் பறிகொடுக்காது அவ் உடமைகளை தீருவில் வெளிக்கு எடுத்துச்சென்ற சிவாஜிலிங்கம் குழுவினர் அங்கு கேக் வெட்ட முற்பட்ட போது தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டிருந்தார்கள். முச்சக்கர வண்டியில் இருந்து பிறந்த நாள் பதாகையை எடுத்துக் கொண்டுவர முற்பட்ட போது சிவாஜிலிங்கம் அவர்களை தாக்கி அப்பாதாகையை பறிமுதல் செய்து அவர்களையும் கைது செய்ததுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த கேக் உள்ளிட்ட பொருட்களையும் வல்வெட்டித்துறை காவல் துறையினர் எடுத்துச் சென்றிருந்தார்கள்.

வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சிவாஜிலிங்கம் மற்றும் நகரசபைத் தலைவர் உள்ளிட்ட மூவரை மேல் நடவடிக்கை குறித்து தெரியப்படுத்துவதாக கூறி விடுவித்திருந்த நிலையில் உடமைகளை பறிமுதல் செய்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்