பதவி விலகுமாறு சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் மகிந்தவிடம் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு, சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

மகிந்த ராஜபக்சவை இன்று காலை சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த கோரிக்கையை விடுத்தனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தொந்தரவு கொடுக்காமல், உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளனர்.

எனினும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் 7 ஆம் நாள் அளிக்கப்படும் வரை, பதவியிலிருந்து விலகிக் கொள்ளும் எண்ணம் தனக்கு கிடையாது என்று, மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால், தன்னை பதவியில் இருந்து நீக்குமாறு கொள்ளுமாறு சிறிலங்கா அதிபரிடம் கூறும்படியும் அவர் கூறியுள்ளார்.

பதவியில் நீடிப்பதால், மைத்திரிபால சிறிசேனவை நாட்டு மக்கள் விமர்சிப்பார்கள் என்றும் தன்னை விமர்சிக்க மாட்டார்கள் என்றும் அவர், தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்றும், பாதகமான தீர்ப்பு அளிக்கப்பட்டால், தான் 113 உறுப்பினர்களின் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்