பிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018 நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த 27.11.2018 செவ்வாய்க்கிழமை பாரிசு19 இல் உள்ள PARIS EVENT CENTER மண்டபத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.

பகல் 12.30 மணிக்கு பொதுச்சுடரினை தாய்த் தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த இன உணர்வாளர் திரு.கோவை இராமகிருஸ்ணன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, கல்லறைவணக்கம் நடைபெறும் துயிலும் இல்லம் அமைந்திருந்த மண்டபத்திற்கு முக்கிய பிரமுகர்கள், மாவீரர் பெற்றோர், உரித்துடையோர், அனைவரும் அழைத்துவரப்பட்டனர். தமிழீழத் தேசியத்தலைவரின் கடந்தகால மாவீரர்நாள் உரைகளின் முக்கியதொகுப்புக் காணொளி திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. 13.35 மணிக்கு அகவணக்கம் இடம்பெற்றது. துயிலும் இல்ல மணியோசை ஒலித்ததைத் தொடர்ந்து மாவீரர் சங்கரின் திருவுருவப்படத்தின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை 05.11.1999 அன்று நெடுங்கேணியில்; இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் அருளினியின் தாயார் ஏற்றிவைத்தார்.மலர் மாலையை 13.01.1994 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படைமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி சுதாஜினியின் தாயார் அணிவித்தார். சமநேரத்தில் பாரிசு துயிலும் இலத்தில் லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகியோரின் கல்லறைகளில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சார்சல் பகுதியில் அமைந்துள்ள கேணல் சங்கர் அவர்களின் நினைவுத்தூபியின் அருகில் மாவீரர் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும், கண்ணீர் காணிக்கையோடு மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர். தொடர்ந்து இரவு வரை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் தமது மலர்வணக்கத்தை மேற்கொண்டவண்ணமிருந்தனர்.
இதேவேளை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சார்சல் மாநகரசபையினதும், தமிழ்ச்சங்கத்தின் ஆதரவில் நிறுவப்பட்டுள்ள தமிழீழ தேச விடுதலைப்போராட்டத்தில் முதற்களப்பலியான மாவீரன் லெப்டினன் சங்கர் நினைவாக நாட்டப்பட்ட நினைவுக்கல்லின் முன்னபாகவும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றது. மாநகரசபை உதவி முதல்வர் Annick L’Ollivier-Langlade அவர்கள் பொதுச்சுடரை ஏற்றி வைத்ததுடன் பிரான்சு நாட்டின் கொடியையும் ஏற்றி வைக்க பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மாவீரர் பணிமனை செயற்பாட்டாளரும் கடற்கரும்புலி மேஐர் ஈழவீரனின் சகோதரர் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர்நாள் தொகுப்புகள் ஒலி வடிவில் ஒலிபரப்பப்பட்டது. 13.35 மணிக்கு துயிலுமில்ல மணிஓசையுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு 13.37 மணிக்கு ஈகைச்சுடர் துயிலுமில்ல பாடலுடன் மாவீரர் 2ம் லெப். இளந்தேவன் அவர்களுடைய சகோதரரும் சார்சல் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. மத்தியாஸ் டக்லஸ் அவர்கள் ஏற்றி வைத்தார்;. லெப் சங்கர் நினைவுக்கல்லுக்கான மலர் மாலையை தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் ஏற்றி அணிவித்தார். அவரைத் தொடர்ந்து பிரெஞ்சுப்பாராளுமன்ற உறுப்பினர் திரு. பொப்புனி அவர்கள் உதவி முதல்வர் திருமதி.Annick L’Ollivier-Langlade அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் மற்றும் மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்த மூத்தபோராளிகள் மலர் வணக்கம் செலுத்தினர். நினைவு உரையை சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.டக்லஸ் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர், உதவி முதல்வர், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களும் ஆற்றியிருந்தனர். பாராளுமன்ற உறுப்புனர் தமிழீழ மக்கள் தமது தாய்நாட்டின் மீதும், அதன் விடுதலை மீதும் வைத்துள்ள பற்றுதலை தான் அறிவேன் என்றும், அவர்கள் தமது விடுதலைக்காக உயிர் ஈந்தவர்களை நினைந்து வணக்கம் செய்யும் இந்த நிழ்வில் தான் கலந்து கொள்வது பெருமையாகவுள்ளது என்றும் மண்மீதும் தமிழ்மக்கள் வைத்திருக்கும் பற்றுதலைக்கண்டு பெருமையடைவதாகவும் தமிழீழ மக்களின் விடுதலைக்காக சுதந்திரத்திற்காக தான் எப்பொழுதும் துணையிருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

பரப்புரைப் பொறுப்பாளர் பேசும் நாம் எங்கும் எதிலும் பிரிந்து நிற்கவில்லை தலைவன் காட்டிய திசையில் சென்று வரலாறு படைத்த எங்கள் மாவீரர்தெய்வங்களின் கனவை நனவாக்க ஒருமித்து நிற்கின்றோம். தொடர்ந்தும் நிற்போம் என்றும் இங்கு முதற்களப்பலி லெப். சங்கர் நினைவுக்கல்லின் முன்பாக சபதம் எடுப்போம் என்றும் கூறியிருந்தார். வணக்க நிகழ்வுகள் நடைபெற்று முடிந்த பின் பாரிசின் மத்திய பகுதியில் நடைபெற்ற பிரான்சின் பிரதான தேசிய மாவீரர்நாள் நிகழ்வில் கலந்து கொள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிரதான விழா மண்டபத்தில் பகல் 14.00 மணிக்கு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.
தமிழர் கலைபண்பாட்டுக் கழக கலைஞர்களின் பாடல்களும், தமிழ்ச்சோலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும், மாவீரர் நினைவு சுமந்த பேச்சுப் போட்டியில் முதல் இடங்களைப் பெற்றவர்களின் பேச்சுக்களும், தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளர் திரு.கோவை இராமகிருஸ்ணன் அவர்களின் சிறப்புரை அனைவரையும் சிந்திக்க வைத்திருந்தது. அவர் தனது உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கின்றாரா, இல்லையா என்ற கேள்விகளை விடுத்து நாம் தேசியத் தலைவரின் பாதையில் பயணிக்கவேண்டும் என வலியுறுத்திக் கூறியிருந்தார். தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்களின் உரை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் திரு. சுரேஸ் அவர்களின் மனித நேயம் தொடர்பான உரை, மனிதநேய செயற்பாட்டாளர் திரு.கிருபாகரன் அவர்களின் உரை, பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களின் உரை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்திருந்த வெளிநாட்டவர்களின் பிரெஞ்சுமொழி உரை என்பனவும் இடம்பெற்றிருந்தன.
பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் வழங்கிய ‘நம்பிக்கை’ எனும் சிறப்பு நாடகம் இடம்பெற்றது. குறித்த நாடகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறான கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள், காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நிலை, புனர்வாழ்வு என்னும் பெயரில் விடுவிக்கப்பட்ட போராளிகளின் நிலை போன்றவற்றை தத்ரூபமாகக் கண்மன் நிறுத்தியது. நாடகத்தில் பங்கு பற்றிய கலைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையாக தமது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்து மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டியில் (சித்திரம், பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, ஓவியம்) வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. பரிசில்களை மாவீரர் பெற்றோர் மற்றும் செயற்பாட்டாளர்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.
வழமைபோன்று வெளியீட்டுப்பிரிவினரும் தமது வெளியீடுகளை பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். அவற்றை மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கியதையும் காணமுடிந்தது. தமிழீழ உணவகத்தினரும் பொதுமக்களுக்குத் தேவையான உணவை வழங்கியிருந்தனர். ஊடகங்கள் குறித்த நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதில் முனைப்புக்காட்டியிருந்தன. தமிழீழ மக்கள் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பினர், தமிழ் பெண்கள் அமைப்பினர், தாயக மக்களுக்கு உதவும் அமைப்பினர், ஊடகமையம் போன்ற அமைப்புக்கள் தமது காட்சிப்படுத்தலை மேற்கொண்டிருந்தனர்.
அனைத்து நிகழ்வுகளையும் திரு.றொபேட், திரு.வினோஜ்,திரு.கிருஸ்ணா,திரு.பார்த்தீபன், செல்வி துஷி யூலியன், செல்வி சோபிகா சரவணபவன் ஆகியோர் சிறப்பாகத் தொகுத்துவழங்கியிருந்தனர்.

அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்திருந்ததுடன் இறுதிவரை பெரும் எண்ணிக்கையான மக்கள் பொறுமையாக அமர்ந்து நிகழ்வுகளை அனுபவித்தமை குறிப்பிடத்தக்கது.

21.30 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் அனைத்து நிகழ்வுகளும் உணர்வோடு நிறைவடைந்தன.
வேலை நாளாக இருந்தபோதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டுவந்து மாவீரத் தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்தியதை காணமுடிந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

About இலக்கியன்

மறுமொழி இடவும்