அவமானப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகி விட்டதாக, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் சற்று முன்னர். இதனைத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் விஜேராம மாவத்தை இல்லத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில்,மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் தொடர்பாக அறிவித்துள்ளார்.

அந்த நிகழ்வில், அவரது ஆதரவாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில், பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, மகிந்த ராஜபக்சவுக்கு ஆசி வழங்கும் பௌத்த மத அனுஷ்டானங்கள் இடம்பெற்று வருகின்றன.

புதிய பிரதமரை சிறிலங்கா அதிபர் நியமிப்பதற்கு, இடமளிப்பதற்காகவே, தாம் பதவியில் இருந்து விலகியுள்ளதாக, மகிந்த ராஜபக்ச கூறினார் என, அவரது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஷெகான் சேமசிங்க தெரிவித்தார்.

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் இரவு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், சர்ச்சைக்குரிய வகையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, 50 ஆவது நாளில் பதவியை விட்டு விலகியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்காத- அலரி மாளிகையில் வசிக்காத – மேன்முறையீட்டு நீதிமன்றினால், பிரதமராக செயற்பட முடியாமல் தடுக்கப்பட்ட பிரதமராக மகிந்த ராஜபக்ச இந்த 50 நாட்களையும் கழித்துள்ளார்.

சற்று நேரத்தில் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்