சிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறதா?

அரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீது திரும்பியுள்ளது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சி என்ற தகைமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச நேற்று பதவி விலகிய பின்னர், அவரது தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச பணியாற்றுவார் என்று தெரிவித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகவும், தினேஸ் குணவர்த்தன பிரதம எதிர்க்கட்சி கொரடாவாகவும் செயற்படுவார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தனவும், இதனை நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எந்த உடன்பாடும் வைத்துக் கொள்ளாது என்றும், தனிநபர்களாக யாரேனும் அந்த அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாம் என்றும் சிறிலங்கா அதிபரும் கூறியிருந்தார்.

கூட்டு அரசாங்கத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இடம்பெறாவிடின், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இரா.சம்பந்தன் வகிக்க முடியாத நிலை ஏற்படும்.

எனினும், மகிந்த ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன முன்னணிக்குத் தாவியதால், அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த விடயத்தில் சபாநாயகரே முடிவெடுப்பார் என்பதால், வரும் 18ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும்போது, இந்த விவகாரம் சூடுபிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்