திருவாரூரில் சாதிக்க காத்திருக்கும் தினகரன்!

திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலில் ஆர்.கே.நகர் பாணியில், திமுக, அதிமுகவிற்கு டிடிவி தினகரன் ஷாக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதையடுத்து, திமுக மீண்டும் அந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுவதை போலவே, ஆர்.கே.நகரில், டிடிவி தினகரன் வெற்றி பெற்றது போல, இந்த தொகுதியிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரதான கட்சிகளுக்கு ஷாக் கொடுக்குமா என்று கேள்வியும் சேர்ந்து எழுகிறது.

இதற்கு முக்கியமான ஒரு காரணம் தினகரனின் சொந்த ஊர் மன்னார்குடி, திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்டது என்பது தான். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக காட்டுத்தீ போல் செய்தி பரவிய நிலையில்கூட, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவரான தினகரன், ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது மிகப்பெரிய அரசியல் சாதனையாக பார்க்கப்படுகிறது. தமிழக பிரதான எதிர்கட்சியான திமுக அந்த தேர்தலில் டெப்பாசிட் கிடைக்கவில்லை.

நிலைமை இப்படி இருக்கும்போது, தினகரன் தனது சொந்த மாவட்டத்தில் உள்ள தொகுதியை எளிதில் விட்டுவிடுவாரா என்ற கேள்வி பல தரப்பிலும் எழுகிறது. அவரது அரசியல் வியூகங்களுக்கு, ஸ்டாலின் தலைமையிலான திமுக பதிலடி கொடுக்க முடியுமா என்ற ஐயப்பாடு எழுகிறது.

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பாக, சில மாதங்களாகவே அந்த தொகுதியில் தினகரன் அணியினர் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவும் திமுகவுக்கு கிலியூட்டக் கூடிய தகவல்தான். இதுகுறித்து திருவாரூர் மாவட்டத்தில், வசிக்கக்கூடிய சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

அவர்கள் கூறுகையில் “திருவாரூர் மாவட்டம் பொதுவாக திமுகவுக்கே பாரம்பரியமாக வாக்களித்து வந்துள்ளது. அதிலும் கருணாநிதி மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ள வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம் இது. கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கருணாநிதிதான். திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை என்றாலும், கருணாநிதிக்கு மக்கள் கொடுத்த அந்த ஆதரவை மறக்க முடியாது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கூட திமுகவுக்கே பாரம்பரியமாக வாக்குகளை அளித்து வருகிறார்கள். ஆர்கேநகர் போல எந்த ஒரு தந்திரத்திற்கும் திருவாரூர் மக்கள் மயங்க மாட்டார்கள் என்கிறார்கள். பார்க்கலாம்.. வரும் 31ம் தேதி தெரிந்துவிடும்.. ஜெயிக்கப்போவது தினகரனின் தேர்தல் வியூகமா அல்லது திமுகவிற்கு கிடைக்கப் போகிற பாரம்பரிய வாக்குகளா என்பது அல்லவா!

About இலக்கியன்

மறுமொழி இடவும்