சிறீலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு!

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களுக்கும் , ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து மீனவர்களை கடுமையாக எச்சரித்து ஊர்காவற்துறை நீதிமன்று விடுவித்துள்ளது.

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்ற சாட்டில் ஒன்பது தமிழக மீனவர்களை கடற்படையினர் கடந்த 13ஆம் திகதி அதிகாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை அன்றைய தினம் மாலை கடற்படையினர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் அவர்கள் அன்று மாலை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.ஜூட்சன் முன்னிலையில் முன்னிலையில் முற்படுத்தினார்கள்.

அதனை அடுத்து மீனவர்கள் ஒன்பது பேரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிவான் உத்தரவிட்டநிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ. ஜூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , ஒன்பது மீனவர்களையும் கடுமையாக எச்சரித்த நீதிவான் , ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதேவேளை , மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளின் உரிமையார்கள் படகுகளின் ஆவணங்களுடன் எதிர்வரும் மார்ச் மாதம் ௦7ஆம் திகதி மன்றில் முன்னிலையாக வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டுள்ளார். தவறும் பட்சத்தில் படகுகள் அரசுடமையாக்கப்படும் என நீதிவான் அறிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்