தினகரனின் திட்டம் தான் என்ன? தனித்து சாதிப்பாரா தினகரன்?

ஆக கடைசியில இப்போது தனித்து விடப்பட்டுள்ளவர் டிடிவி தினகரன்தான் போலிருக்கிறது.

கட்சியை இரண்டாக உடைத்து வெளியேறியபோது ஏகப்பட்ட பரபரப்பை கிளப்பி கொண்டே இருந்தார் தினகரன். தொடர்ந்து ஆர்.கே.நகர் வெற்றி வந்ததும் அவர் மவுசு கூட ஆரம்பித்தது. ஆனால் அந்த திருஷ்டியோ என்னவோ தொடர்ந்து சறுக்கல்கள், ஏமாற்றங்கள், பிரச்சனைகள் என்று வரிசை கட்டி வந்தன.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் உள்பட எல்லா இடங்களிலும் பொதுக்கூட்டங்களை நடத்தினார். மக்களை சந்தித்து நேரடியாக உரையாற்றினார். இதன் காரணமாகவும் இவரது பேச்சின் தன்மை, அதை வெளிப்படுத்தும் பாங்கு, தோல்வியை சமாளிக்கும் பக்குவம், டென்ஷன்களை வெளிக்காட்டாத போக்கு போன்றவை காரணமாக மக்களிடையே இவருக்கு செல்வாக்கு இன்னமும் உள்ளது கூடுதல் பிளஸ்!

ஆனால் கூட்டணி சமாச்சாரத்தில் டிடிவி தினகரன் கோட்டை விட்டுவிட்டாரோ, இன்னும் கொஞ்சம் முன்னாடியே இது சம்பந்தமான வேலைகளில் இறங்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 2 மாதங்களுக்கு முன்பு வரை திமுக-அமமுக ஒன்றுதான் என்று அதிமுக சொல்லி கொண்டிருந்தது. பிறகு செந்தில் பாலாஜி கட்சி தாவலுக்கு பிறகு அப்படி சொல்வதை நிறுத்திவிட்டது.

இதற்கு பிறகாவது சுதாரித்து தினகரன் கூட்டணி அமைக்க களமிறங்கியிருக்கலாம். ஏனென்றால் பாஜக, அதிமுக., திமுக இவை மூன்றும் ஆகாத கட்சி என்று முடிவாகிவிட்டது. கமலும் ஊழல் கட்சியுடன் கூட்டு இல்லை என்று சொல்லிவிட்டார். அப்படியானால் மிச்சமிருந்த அதுவும் குழப்பத்தில் இருந்த பாமக, தேமுதிக, தமாகா, கட்சிகளை தினகரன் 3-வது அணியாக உருவாக்கி இருக்கலாம்.

திருநாவுக்கரசர், ரஜினி, திருமாவளவன் போன்றோர்கள் தினகரனுக்கு நல்ல நெருக்கம்தான். திமுகவில் திருமாவளவன் குழம்பி கிடந்த போதும் அவரை அணுகியிருக்கலாமோ? அல்லது காங்கிரசிலிருந்து திருநாவுக்கரசர் பதவி நீக்கம் செய்யப்பட்டதும் அவரை அணுகியிருக்கலாமோ? அல்லது அறிக்கை வெளியிடுவதற்கு முன்பேயே ரஜினியை சந்தித்து தினகரன் பேசியிருக்கலாமோ என்றெல்லாம் எண்ண தோன்றுகிறது.

ஆனால் இப்போது தினகரன் சொல்வது என்னவென்றால், “அமமுக கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறேன். கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடுவோம்” என்கிறார். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.

தன்னை பற்றின கொள்கை, சிந்தனை, பார்வை இருந்தால் பரவாயில்லை.. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் எதிர்காலமும் இதில் அடங்கி உள்ளது. 2 வருடமாக வருமானம், பதவி, செல்வாக்கை இழந்து, இன்று கூடவே நிற்கும் அவர்களுக்கு தினகரன் எந்த மாதிரியான வருங்காலத்தை உருவாக்கி தர போகிறார் என தெரியவில்லை. இருப்பினும் கடைசி வரை பொறுமையாக இருந்து முயன்று பார்ப்பவர் தினகரன் என்பதால் அவருக்கும் ஏதாவது சிக்காமலா போகும் என்ற நம்பிக்கை அமமுகவினர் மத்தியில் நிலவுகிறதாம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்