1 லோக்சபா தொகுதி.. 1 ராஜ்ய சபா சீட்.. திமுக – மதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டது!

திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக வேகமாக செயல்பட்டு தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. முதலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுணக்கம் காட்டிய திமுக தற்போது அடித்து ஆட தொடங்கி உள்ளது. தமிழகத்தில் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளை எல்லாம் தனது பக்கம் இழுத்து கூட்டணி அமைத்து இருக்கிறது.

திமுக தற்போது உருவாக்கியுள்ள கூட்டணியின்படி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 இடங்களில் காங்கிரஸ் 10 இடங்கள், விசிக 2 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்கள், ஐஜேகே மற்றும் ஐயூஎம்எல் கட்சிக்கு 1, கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இன்று மதிமுக கட்சியுடன் திமுக ஆலோசனை செய்தது. நேற்றே மதிமுகவிற்கு இரண்டு இடங்கள் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதை மறுத்தார். இந்த நிலையில் மதிமுக திமுக கூட்டணி இன்று இறுதியாகும் என்றார்கள்.

இதற்காக திமுக தலைவர் ஸ்டாலினும் வைகோவும் இன்று ஆலோசனை நடத்தினார்கள். இதற்காக வைகோ தற்போதுதான் திமுக அலுவலகம் வந்தார். சுமார் 3 மணி நேரமாக இந்த ஆலோசனை நடந்தது.

இரண்டு நாட்களாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 3ம் கட்ட பேச்சுவார்த்தை தற்போது சுமுகமாக முடிந்து இருக்கிறது.

திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஆலோசனையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மதிமுக அதனுடைய சின்னத்திலேயே போட்டியிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்