பாசிசத்தினை ஒழிக்க பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – மே பதினேழு இயக்கம்

பாசிசத்தினை வீழ்த்த பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் எனும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

3 வாரங்களுக்கும் மேலாக சிறை உணவின் தாக்கத்தின் காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்த தோழர் திருமுருகன் காந்தி சிகிச்சை முடித்து வந்து இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார்.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள மக்கள் விரோத மசோதாக்கள் பற்றியும், இந்துத்துவ பயங்கரவாதம் ஜனநாயகத்தினை சீரழித்துக் கொண்டிருப்பதைப் பற்றியும், மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் இனி இந்த நாட்டில் தேர்தலே நடக்காத நிலை உருவாகும் என்றும் தெரிவித்தார்.

பத்திரிக்கையாளர்களிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை பின்வருமாறு;

பாசிசத்தினை ஒழிக்க பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – மே பதினேழு இயக்கம்

இந்திய ஒன்றிய அரசாக நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் அழித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியான மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றியிருக்கிறது. விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், சிறு குறு தொழில்முனைவோர் என அனைத்து தரப்பு மக்களையும் பாஜக அரசின் மசோதாக்கள் நிர்மூலமாக்கியிருக்கின்றன.

**மக்கள் விரோத மசோதாக்கள்:

கூட்டாட்சி முறையை அழிக்கும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, மாநிலங்களின் கல்வி அதிகாரத்தைப் பறித்து கல்வியை தனியார்மயமாக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை, உயர்கல்வி ஆணைய மசோதா, நீட் தேர்வு திணிப்பு, இடஒதுக்கீட்டினை அழிக்கும் நோக்கில் உயர்சாதியினருக்கு பொருளாதார ரீதியில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, மீனவர்களை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றக் கூடிய கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை 2018, சாகர்மாலா, பாரத் மாலா திட்டங்கள், திட்டக் குழுவினை அழித்துவிட்டு உருவாக்கப்பட்ட நிதி ஆயோக், விவசாய நிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்கும் வகையில் HELP கொள்கை (Hydrocarbon Exploration and Licensing Policy), நிலம் கையகப்படுத்தும் சட்டம், தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா என தொடர்ச்சியான மக்கள் விரோத மசோதாக்கள் மற்றும் கொள்கைகளை பாஜக அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்தியாவின் ராணுவத் தளவாடங்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்த அனுமதித்தும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டினை திறந்து விட்டிருக்கிறார்கள்.

**தமிழர் விரோத நிலைப்பாடு:

கீழடி வரலாற்றை அழிக்க முயலும் சூழ்ச்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து நீர்த்துப் போன ஆணையம் அமைப்பு, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு திணிப்பு, நெடுவாசல், திருக்காரவாசல் என புதுக்கோட்டை, காரைக்கால், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான அனுமதி, 15வது நிதி ஆணையக் குழுவின் நடைமுறைகளை மாற்றி தமிழகத்திற்கான நிதியினை குறைக்கும் துரோகம், உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும் ஏழு தமிழர் விடுதலையை அறிவிக்க மறுப்பு, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு என தமிழர் விரோதமாக தொடர்ச்சியாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

**பண்பாட்டு அழிப்பு:

பொருளாதார மற்றும் வாழ்வாதார ரீதியாக மட்டுமில்லாமல் பண்பாடு கலாச்சார ரீதியாகவும் அனைத்து தேசிய இனங்களின் பன்முகத்தன்மையினை அழித்து வருகிறது. இந்தி, சமஸ்கிருதத்தை தொடர்ச்சியாக திணித்து வருகிறது. இந்துத்துவ பயங்கரவாதத்தினை வளர்த்தெடுக்க ஊக்குவிப்பதன் மூலமாக சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மதக் கலவரங்களை இந்துத்துவ பயங்கரவாதிகள் ஏவி வருகிறார்கள். மாட்டுக் கறி வைத்திருந்தார்கள் என்று சொல்லி பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. குண்டு வைப்பது, மிகப்பெரும் படுகொலைகள், பாலியல் பலாத்காரம் போன்ற பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல இந்துத்துவ தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ச்சியாக சமூக அமைதியைக் குலைக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசி வருகிறார்கள். மிகப் பெரிய பாசிசம் இந்த நாட்டில் வளர்ந்து வருகிறது. இது வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும்.

**ஜனநாயக நிறுவனங்கள், அதிகார மையங்களை இந்துத்துவ மயமாக்கல்:

கல்வி, நீதித்துறை, அதிகாரவர்க்கம், ராணுவம் என அனைத்துத் துறைகளும் இந்துத்துவமயமாக்கப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்-ன் ஆட்கள் அனைத்து துறைகளிலும் தலைமைப் பதவிக்கு திட்டமிட்டு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். பல்கலைக்கழங்களின் தலைவர்களாக தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, உச்ச நீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி நீதித்துறையை காப்பாற்றுமாறு மக்களிடம் கோரிக்கை வைத்த கொடுமை இந்த பாசிச ஆட்சியில் தான் நடந்தது.

**மனித உரிமை செயல்பாட்டளர்கள் மீதான தாக்குதல் மற்றும் படுகொலைகள்:

எழுத்தாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்களும், அவர்கள் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கெளரி லங்கேஷ் என பலரும் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நாட்டின் மிகப் பிரபலமான எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகிய 5 பேர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. தேச விரோத வழக்குகள், பயங்கரவாத தடுப்பு வழக்குகள் என மோசமான வழக்குகள் அனைவர் மீதும் ஏவப்படுகின்றன. போராடுகின்ற மக்களை தாக்குவது, துப்பாக்கியால் சுடுவது என பல நிகழ்வுகள் தொடர் கதையாகியுள்ளன.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதும் குண்டர் சட்டமும், UAPA வழக்கும் ஏவப்பட்டது. இந்த இரண்டும் தவறானது என்று நீதிமன்றம் விடுவித்துள்ளது. மேலும் 35க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. பாஜக அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டின் அதிமுக அரசு மனித உரிமை செயல்பாட்டாளர்களை முடக்கி வருகிறது. நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

**பாஜகவின் கையாளாக செயல்படும் அதிமுக அரசு:

பாஜக-வின் மக்கள் விரோத மசோதாக்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்துவதற்கு உறுதுணையாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை படுகொலை செய்ததும், எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்களை சிறை செய்ததும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களையும் இளைஞர்களையும் தாக்கியது, காவல்துறையினர் மீனவ மக்களின் குடிசைகளுக்கும், ஆட்டோக்களுக்கும் தீவைத்தது, கதிராமங்கலத்தில் மக்களைத் தாக்கியது, கோவையில் மதக் கலவரத்தினை ஏற்படுத்தி இசுலாமியர்களின் கடைகளை சூறையாடியதை அனுமதித்தது என தொடர் நிகழ்வுகள் பாசிசம் தமிழகத்தில் வேறூன்றியிருப்பதன் கோரத்தைக் காட்டுகிறது. இன்னும் 5 ஆண்டுகள் இந்த பாசிச கும்பலிடம் ஆட்சியைக் கொடுத்தால் நாடு சுடுகாடாவதை தடுக்க முடியாது.

பாசிசத்தினை ஒழித்து ஜனநாயகத்தினை காப்பாற்றிடவும், மாநில அதிகாரப் பறிப்பினை தடுத்திடவும், தமிழின உரிமை மீட்டிடவும் பாஜக-அதிமுக கூட்டணி வீழ்த்தப்படவேண்டும் என்று மே பதினேழு இயக்கம் தமிழக மக்களிடம் கேட்டுக் கொள்கிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்