மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி நடைபெறும் நடைபவனியில் சகல மக்களையும் கலந்துகொள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கோரிக்கை

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்றித்தருமாறு கோரி தமிழ் மக்கள் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி நடைபெறவிருக்கும் நடைபவனியில் உண்மையையும் நியாயத்தையும் சமாதானத்தையும் விரும்பும் சகல மக்களையும் கலந்துகொள்ளுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி. வி விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நடைபவனியில் தானும் பங்கேற்ப இருப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் இதுதொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்ற 1993ல் இருந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இன்றுவரை அது ஒரு வெற்றியளிக்காத முயற்சியாகவே இருந்து வந்துள்ளது. முக்கியமாகக் காணி மற்றும் நிதி அதிகாரமற்ற ஒரு உப பிரதேச செயலகமாகவே 1989ல் இருந்து இது இயங்கி வருகின்றது. இது கல்முனை தமிழ்ச் சமூகத்தைப் பாரியளவில் பாதிக்கின்றது என்பதை அண்மையில் கல்முனை சென்ற போது அறிந்து கொண்டேன். இது பற்றி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் சூழல் அதற்கு அனுசரணை வழங்குவதாகத் தெரியவில்லை. பொதுவாக வழக்குகள் இழுத்தடித்துச் செல்வதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.

இது முற்றிலும் சுயநலம் மிக்க பலம் மிக்க அரசியல் வாதிகள் சிலரின் பக்கச் சார்பான அரசியல் நடவடிக்கைகளின் பிரதிபலிப்பே. ஆகவே இதற்கு அரசியல் ரீதியான செயற்பாடுகளே அவசியம் என்பதை உணர்ந்து மக்கள் இம்மாதம் 21ம் திகதி தமது கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு நடைபவனி செல்ல உள்ளார்கள். உண்மையையும் நியாயத்தையும் சமாதானத்தையும் விரும்பும் மக்கள் யாவரும் இந்த நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும். நானும் அதில் பங்கேற்பதாக உள்ளேன்.

மூன்று முக்கிய விடயங்கள் மனதில் எடுக்கப்பட வேண்டும்.

  1. இத் தமிழ் பிரதேச செயலகம் 29 கிராம சேவையாளர் பிரிவுகளையும், 36346 மக்கள் தொகையையும் கொண்டது. இவர்களுள் 90மூ விகிதமானவர்கள் தமிழ் மக்கள். அம்பாறை மாவட்டத்தில் மிகக் கூடுதலான தமிழ் மக்கள் தொகை இங்கே காணப்படுகிறது. தமிழ் மக்கள் தமது தனித்துவத்தைப் பேண இப்பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவேண்டும். அவர்களுக்குக் காணி மற்றும் நிதி அதிகாரம் வழங்கப்படவேண்டும். இது முஸ்லிம் மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது. நடைமுறையில் இருக்கும் தற்போதைய உபசெயலக அதிகார வரம்பை முன்வைத்து எடுக்குந் தீர்மானம் எந்தவிதத்திலும் வேறெவரையும் பாதிக்காது.
  2. அம்பாறை மாவட்ட 20 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஒன்று தான் முழு அதிகாரம் இல்லாத செயலகமாக 1989ல் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரையில் தொடர்ந்து இருந்து வருகின்றது. இது மாற்றப்பட வேண்டும். இதற்கும் தரமுயர்த்தல் அளிக்கப்படவேண்டும்.
  3. இந்த விடயம் உடனே சீர் செய்யப்படாவிட்டால் தமிழ்ப் பேசும் தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே காழ்ப்;புணர்ச்சியை ஏற்படுத்தும். காலாதி காலமாக பிட்டும் தேங்காய்த் துருவலும் போல வாழ்ந்து வரும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமக்குள் சர்ச்சைப்படுவது பெரும்பான்மையினருக்கே நன்மையை ஏற்படுத்தும்;. அரசியல் வாதிகள் இவ்வாறான விடயங்கள் சம்பந்தமாக தமது சுயநலங் கருதி தீர்மானங்களை எடுக்காது வருங்கால இன ஒற்றுமையையும் இன சௌஜன்யத்தையும் கருத்திற் கொண்டு நடந்துகொள்ளவேண்டும்.

ஆகவே சகலரும் இந்த நியாயந் தேடும் நடைபவனியில் பங்குபற்றி நியாயத்தையும் இன ஒற்றுமையையும் கொண்டுவர ஒன்றுபடுவார்களாக!

இம்மாதம் 21ம் திகதி மட்டக்களப்பில் சந்தித்து கல்முனை நோக்கிப் பயணிக்கவிருக்கும் எம் மக்களின் நடைபவனியில் பங்குபற்றுமாறு எமதுறவுகள் அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்