வடக்கு கிழக்கு மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா குழு அமைக்க கோரிக்கை

வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை இலங்கையில் அமைக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரனைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விக்னேஸ்வரன் இந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இராணுவமானது வடக்கு மற்றும் கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளமையானது நாட்டின் ஏனைய பகுதிகளை பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் அதன் தன்மையை விட்டுக்கொடுக்கும் வகையில் அமைகின்றது.

அதேவேளை, தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அடக்குமுறைக்குட்படுத்தும் வகையில் அவசரகால சட்டத்தை அரசாங்கம் துஸ்பிரயோகம் செய்கிறது.

இலங்கை தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை அமைப்பதற்கான அவசியம் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் உங்களிடம் விடுத்த கோரிக்கையை அவசரமாக உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்