சந்திரிகாவை வெளியேற்ற அவசரமாக மத்திய குழுவை கூட்டுகிறார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காப்பாளராக உள்ள, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை, அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபி சிறிலங்கா இயக்கத்துக்கு தலைமை தாங்கும், சந்திரிகா குமாரதுங்க, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே, அவரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன, வரும் செவ்வாய்க்கிழமை இரவு கட்சியின் மத்திய குழுவின் அவசர கூட்டத்துக்கு, அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், சந்திரிகா குமாரதுங்கவை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அவர் பரிந்துரை செய்யவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் நடுநிலையாகச் செயற்படவுள்ளதாக அறிவித்திருந்த மைத்திரிபால சிறிசேன, அதுவரை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கப் போவதாகவும், கூறியிருந்தார்.

எனினும், அவர் தற்போதும் கட்சியின் செயற்பாடுகளில், ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை வரும் செவ்வாய்க்கிழமை காலை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் இயக்கத்தின் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ளது. இதற்கு சந்திரிகா குமாரதுங்க தலைமை தாங்கவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, கட்சியின் அமைப்பாளர்கள், பிரதிநிதிகளுக்கு குமார வெல்கம அழைப்பு விடுத்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்