சிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்!

நடந்து முடிந்த சிறீலங்கா அதிபர் தேர்தலை ஆறு இலட்சத்து நாற்பத்து ஒன்பதுனாயிரத்து நான்கு தமிழ் பேசும் (தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள்) மக்கள் முற்றாக புறக்கணித்துள்ளார்கள்.

இம்முறை நடைபெற்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு இருபத்தாறு இலட்சத்து இருபத்தொன்பதுனாயிரத்து எண்பது (2,629,080) தமிழ் பேசும் மக்கள் தகுதி பெற்றிருந்தார்கள்.

எனினும் இவர்களில் ஆறு இலட்சத்து நாற்பத்து ஒன்பதுனாயிரத்து நான்கு (649,004) வாக்காளர்கள் இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்களையும் நிராகரித்து சிறீலங்கா அதிபர் தேர்தலை அடியோடு புறக்கணித்துத் தமக்கு சிறீலங்காவின் ஆட்சி முறையில் அக்கறை இல்லை என்பதை உலக சமூகத்திற்கு இடித்துரைத்துள்ளார்கள்.

இத் தேர்தல் புறக்கணிப்பை மேற்கொண்ட மாவட்டங்களில் முதலாவது இடத்தில் யாழ்ப்பாணம் மாவட்டமும், இரண்டாவது இடத்தில் புத்தளம் மாவட்டமும், மூன்றாவது இடத்தில் அம்பாறை மாவட்டமும், நான்காவது இடத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளன.

தேர்தல் புறக்கணிப்பு வெறுமனவே தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மட்டுமன்றி, தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிக அளவில் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் நிகழ்ந்துள்ளன.

இதன் மூலம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், முஸ்லிம் காங்கிரஸ் உள்ளடங்கலான பிரதான முஸ்லிம் கட்சிகளுக்கும் தமிழ் பேசும் மக்கள் சாட்டையடி கொடுத்துள்ளார்கள்.

சிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருந்ததோடு, இதற்கான அறைகூவல் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழ்த் தேசிய அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்களால் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிறீலங்கா அதிபர் தேர்தலை ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள் புறக்கணித்தமை தமிழர் தாயகத்தில் நீறு பூத்த நெருப்பாகத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் வேட்கை உயிர்ப்புடன் இருப்பதையே உணர்த்துகின்றது.

மொத்த வாக்காளர்கள்: 2,629,080

யாழ்ப்பாணம் – 475,176
கிளிநொச்சி – 89,538
மன்னார் – 89,403
வவுனியா – 117,333
முல்லைத்தீவு – 75,383
திருகோணமலை – 281,114
மட்டக்களப்பு – 398,301
அம்பாறை – 503,790
புத்தளம் – 599,042

புறக்கணித்த மொத்த வாக்காளர்கள்: 649,004

யாழ்ப்பாணம் – 161,560
கிளிநொச்சி – 24,175
மன்னார் – 25,927
வவுனியா – 29,333
முல்லைத்தீவு – 18,092
திருகோணமலை – 47,789
மட்டக்களப்பு – 91,609
அம்பாறை – 100,758
புத்தளம் – 149,761

About இலக்கியன்

மறுமொழி இடவும்