எம்மோடு வாருங்கள் அருந்தவம் விடுக்கும் கோரிக்கை

அண்மையில் தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை பற்றி கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதிலும் அதுவும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அது மிக அவசியமானது என்பதிலும் மாற்றுக்கருத்துக் கிடையாது. ஆனால் அந்த ஒற்றுமையை கோருவோரிடம் நாம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம்.

இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் இன்று (29) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

எம்மிடையே இருந்து வந்த ஒற்றுமையைக் குலைத்தவர் யார்?

ஒற்றுமையாக தமிழ் மக்கள் உங்களுக்குத் தந்த ஆணையைக் கொண்டு அம்மக்களுக்கு நீங்கள் உருப்படியாக பெற்றுக் கொடுத்தது என்ன?

எல்லாம் இழந்த நிலையில் மீண்டும் உங்களின் பதவிகளை தக்க வைப்பதற்காகவே ஒற்றுமைக் கோசம் போடுகிறீர்கள் என்பது மக்களுக்குத் தெரியாது என நினைக்கிறீர்களா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை மட்டுமல்ல தமிழரசுக் கட்டசிக்குள்ளே இருந்து வந்த ஒற்றுமையை குலைத்துவிட்டு இப்போது ஒற்றுமை வேசம் போடுகிறார்கள். உங்கள் சுயநல அரசியலுக்காக பேராசிரியர் சிற்றம்பலம் உட்பட நேர்மையான தமிழ் தேசியவாதிகளை திட்டமிட்டு அகற்றிவிட்டு ஒற்றுமைபற்றி பேசுவதில் என்ன பயன்?

உங்களுக்கு மக்கள் தந்த ஆணையை புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளிற்கும் தீர்வு காணாது பொங்கல்இ திபாவளி என ஏமாற்றி காலங்கடத்தி இன்று அம்மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்துவிட்டுவிட்டு ஏன் இப்போது ஒற்றுமைக்காக ஓலமிடுகிறார்கள் என்பதை எம்மக்கள் நன்கு அறிவர்.

ஒற்றுமையை வலியுறுத்தும் நீங்கள் மனசாட்சியிருந்தால் முதலில் உங்களைச் சுய ஆய்வுக்குட்படுத்துங்கள். நீங்கள் செய்த தவறுகளுக்காக மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். அரசியல் தீர்வுத்திட்டம் நிறைவேறாவிட்டால் தான் இராஜினாமா செய்வேன் எனக் கூறிய சுமந்திரன் அதை முதலில் செய்யட்டும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிகோருவது போல புதியவர்க்கும் இளைஞர்களுக்கும் எதிர்காலத்தில் வழிவிடுங்கள். இப்படியெதுவும் நீங்கள் செய்யமாட்டீர்கள் என்பதால் தான் மாற்றணி ஒன்றின் அவசியத்தை மக்கள் கோரி நிற்கின்றனர். அதை பலமாக்கவும் அதன் பின் அணி திரளவும் மக்கள் தயாராகின்றனர். மாற்றணி காலத்தின் கட்டாயம். இவ்வணியில் மக்கள் நலன் சார்ந்து சிந்திப்போரும் செயற்படுவோருமே இணைந்து கொள்கின்றார்கள்.

இங்கு கூட்டுத்தலைமையும் ஜனநாயக ரீதியிலான தீர்மானங்களுமே இடம்பெறும். ஜனாதிபதி நந்தசேன கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் அமெரிக்க பிரஜையா அல்லது ஆபிரிக்கப் பிரஜையா என்பது தமிழ் மக்களுக்கு பிரச்சினைக்குரிய ஒன்றல்ல. அது அவரை தெரிவு செய்த மக்களுக்குரிய பிரச்சினை. எமது மக்களுக்குத் தம் இருப்பை பாதுகாப்பதே இன்றுள்ள முக்கிய பிரச்சினை.

வேண்டுமானால் அரசியல் அமைப்பை பாதுகாக்கவும் இல்லாத ஜனநாயகத்தை பாதுகாக்கவும் நீதிமன்றம் சென்ற ஜனாதிபதிச் சட்டதரணிகள் அதனைப் பர்த்துக்கொள்ளட்டும். மிகக் கவலைக்குரிய விடயம் நல்லாட்சியில் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பாதவர்கள்இ எழுப்பியவர்களையும் அடக்க நினைத்தவர்கள் இன்று அம்மக்களுக்காக குரல் கொடுக்க வெளிக்கிட்டிருக்கிறாரகள் என்பதே.

தமிழரசுக்கட்சியிலுள்ள நேர்மையான உறுப்பினர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான். உங்கள் கட்சியிலுள்ள புல்லுருவிகளையும் ஆட்சியாளரிடம் விலைபோனவர்களையும் முதலில் துரத்தியடியுங்கள் ஒற்றுமை தானாக ஏற்படும். முடியாவிட்டால் எம்முடன் வந்து கைகோருங்கள் நாம் மக்களுக்காக நேர்மையாக உண்மையாக உறுதியாக பயணிப்போம். புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவோம். – என்றுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்