இன்று கொழும்பு வருகிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா முகமத் குரேஷி இரண்டு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளார்.

சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், கொழும்பு வரும், இரண்டாவது வெளிநாட்டு உயர்மட்டப் பிரதிநிதி இவர் ஆவார்.

பிரதிநிதிகள் குழுவொன்றுடன் இன்றிரவு 10 மணிக்கு கொழும்பு வரும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், குரேஷி, சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட அரசாங்க உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச அதிபராக பதவியேற்றதும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு வந்து, பேச்சு நடத்தியதுடன், கோத்தாபய ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி, புதுடெல்லிக்குச் சென்று பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா அதிபர் நேற்று இரவு நாடு திரும்பியுள்ள நிலையில், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இன்றிரவு கொழும்பு வந்து அவரைச் சந்திக்கவுள்ளார்.

ஏற்கனவே கோத்தாபய ராஜபக்சவை பாகிஸ்தானுக்கு வருமாறு அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார்.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், மூலம் கோத்தாபய ராஜபக்சவை பாகிஸ்தானுக்கு வருமாறு நேரடியான அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்