பிரியங்க பெர்னான்டோ தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வாய்ப்பு

புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி இந்த மேன்முறையீட்டை பிரியங்க பெர்னான்டோ தாக்கல் செய்யலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும்” சைகையை காட்டி அச்சுறுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை அடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த போதும், இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து கருதி அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டார்.

எனினும் அவருக்கு இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து இருப்பதில் சந்தேகம் எழுப்பப்பட்டு மீண்டும் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

இதன்படி அவரது சைகை, அச்சுறுத்தும் வகையிலானது என்பதை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 2400 பவுண்ட் (இலங்கை மதிப்பில் 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய்) அளவில் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்