சுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார் என, சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவரிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் 3 நாட்களாக, 19 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணைகள் முடிவடையாத நிலையிலேயே, இது ஒரு நாடகம் என்றும், அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சி என்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்களும், பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் கூறி வருகின்றனர்.

சிங்கள ஊடகங்கள் சிலவும், குறித்த பெண் பணியாளர் பற்றிய தனிப்பட்ட தகவல்கள், படங்களை வெளியிட்டும், அவரை குற்றவாளியாக சித்திரித்தும் செய்திகள், தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

தூதரக அதிகாரி கடத்தப்பட்டது திட்டமிட்ட நாடகம் என்ற அரசாங்கத்தின் முடிவு அறிவிக்கப்பட்டு விட்ட நிலையிலேயே, விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், குறித்த அதிகாரியை பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக சிறையில் அடைப்பதற்கு திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது,

சுவிஸ் தூதரக அதிகாரி தான் கடத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை கூறியிருந்தால், குற்றவியல் சட்டத்தின் கீழ், அவருக்கு 2 தொடக்கம் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்று சட்டவாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டவாளர் யூ.ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு தவறான அறிக்கையை வெளியிடுவதற்கு யாராவது உதவி செய்திருந்தால், அவர்களும் தண்டிக்கப்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

“குற்ற விசாரணைத் திணைக்களத்தில் அறிக்கை அளிக்கும்போது, தனது தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட வேறு பெயரை அவர் பயன்படுத்தியிருந்தால், அது ஒரு குற்றமாகும்.

எந்தவொரு குடிமகனும், தேசிய அடையாள அட்டையில் உள்ள பெயர்களைத் தவிர வேறு பெயர்களைப் பயன்படுத்த முடியாது.

இந்த சம்பவம் குறித்து குற்ற விசாரணைத் திணைக்களம் அவரிடமிருந்து சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளது, அவர் கூறிய தககவல்கள் தவறானது என்று தெரியவந்தால், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் அவர் மீது குற்ற விசாரணைத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கும்.” என்றும் சட்டவாளர் யூ.ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்