சிறீலங்கா கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க 200 தமிழக மீனவர்கள் சிறீலங்காவுக்கு பயணம்!

தமிழக மீனவர்களிடமிருந்து கடந்த 2015ம் ஆண்டு இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த 42 விசைபடகுகளை விடுவிப்பதாக சமீபத்தில் இலங்கை அரசு தெரிவித்தது. இந்நிலையில் மீன்வளத்துறையின் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் இயக்குனர் சமீரன் தலைமையில் தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா(ராமநாதபுரம்), எழிலரசன்(நாகப்பட்டினம்), விஜயக்குமார்(புதுக்கோட்டை), மற்றும் ஒரு மெக்கானிக் அடங்கிய 7 பேர் குழுவினர் கடந்த 17ம் தேதி இலங்கை சென்றனர். அவர்கள் 3 நாட்களாக தங்கி, விடுவிக்கப்பட்ட படகுகள் எந்த நிலையில் உள்ளன என ஆய்வு செய்தனர். கடந்த 20ம் தேதி தமிழகம் திரும்பிய மீனவர் குழுவினர், 9 படகுகள் மீட்க முடியாத அளவுக்கு முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவும், மீதமுள்ள 33 படகுகள் பழுது நீக்கி எடுத்து வரும் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து 33 படகுகளை தமிழகம் கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் மீன்வளத்துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக படகுகளை மீட்க இலங்கை செல்லும் மீனவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நாகை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம், காரைக்கால் மீன்வளத்துறையிடம் மீனவ பிரதிநிதிகள் வழங்கினர். இதையடுத்து மீனவளத்துறை தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு அனுப்பி இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கை நடந்து வருகிறது.
இதுகுறித்து மீனவர் சங்க பிரதிநிதி சேசுராஜ் கூறுகையில், இலங்கை செல்ல உள்ள மீனவர்களின் பெயர் பட்டியலை அளித்துள்ளோம்.

மீனவர்கள் இங்கிருந்து படகில் சென்றுதான் பழுதடைந்த படகுகளை மீட்டு வரவேண்டும். இதனால் அவர்கள் ஓட்டிச்செல்லும் படகுக்கு 4பேர், பழுதடைந்த படகை ஓட்டி வர 4பேர் என ஒரு படகுக்கு 8 பேர் வீதம் 33 படகுகளுக்கு 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை செல்ல உள்ளோம். இலங்கை செல்வதற்கான அனுமதியை அரசு விரைவில் பெற்றுத்தரவேண்டும். இன்னும் 130 படகுகள் இலங்கையில் உள்ளது. மழைக்காலத்துக்குள் அவற்றையும் மீட்டு தர மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்