காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகளை பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவித்தல் – அனந்தி

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவித்திட்டத்துக்கு விண்ணப்பிக்குமாறு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்
வடமாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான உதவிகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் சீரான முறையில் உதவிகள் தேவைப்படுகிறவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் சென்றடைவது குறைவாகவே உள்ளது.

சரியான தரவுகள் பெறப்படாத காரணத்தினால் பயனாளிகளை தெரிவு செய்வதிலும் பாரிய வேறுபாடுகளும் சிக்கல்களும் ஏற்படுகின்றன.

எனவே வடபகுதில் காணாமல் போனவர்களுடைய உறவினர்களின் விபரங்கள் ஒழுங்கு முறையில் பெறப்பட்டு அவர்களின் தேவைகளை பெற்று ஒரு விசேட திட்டத்தின் கீழ் உதவித்திட்டத்தினை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

அத்துடன் இந்த விபரங்கள் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகள் வேறுபாடுகள் இன்றி தேவையானவர்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள் தமது தரவுகளை சரியான முறையிலும் தேவைகளை உரிய முறையில் தெளிவுபடுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

அதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புங்கங்குளத்தில் அமைந்துள்ள வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்திலும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்திலும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினத்தின் அலுவலகத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் அலுவலகத்திலும், மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பி.சீறாய்வா ஆகியோரின் அலுவலகத்திலும் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிகமான விண்ணப்ப படிவங்களை பெற்று ஏனையவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் அந்தந்த அலுவலகங்களில் மேலதிகமான விண்ணப்பப்படிவங்களை பெற்று சென்று ஏனையவர்களுக்கு உதவ முடியும்.

அல்லது ஒவ்வொரு பிரதேசங்களில் உள்ள சமூக சேவை அமைப்புக்களும் இந்த விடயத்தில் கவனமெடுத்து குறித்த விண்ணப்பப்படிவங்களை பெற்று உறவுகளுக்கு உதவ முடியும்.

குறித்த விண்ணப்ப படிவங்களை விரைவாக பெற்று பூர்த்தி செய்து எதிர்வரும் செப்ரம்பர் மாத இறுதிக்குள் அனுப்பி வைக்குமாறு மேலும் தெரிவித்துள்ளார்.

 

About இலக்கியன்

மறுமொழி இடவும்