இருண்ட யுகத்திற்குள் புதையுண்டுகொண்டிருக்கும் தாயக மண்ணையும் மக்களையும் காக்கும் புனிதப் போரில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்!

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனவெறித் தாண்டவத்திலிருந்து தமிழீழ மண்ணையும் எமது மக்களையும் காத்து எம்மினத்தின் காவல்தெய்வங்களாக விளங்கிவரும் மாவீரர்களை உலகத் தமிழர்கள் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள் இன்றாகும்.

சுதந்திர தமிழீழம் எனும் இலட்சியத்திற்காக அதி உன்னதமான தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் காலத்தால் அழிக்க முடியாத சிரஞ்சீவிகள். அவ்வாறான மாவீரர்களின் அதியுன்னத தியாகத்தின் அடித்தளத்தில் கட்டியமைக்கப்பட்டதே உலகத் தமிழர்களின் சுதந்திர வாழ்வு.

நாங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டி தமது சுவாசத்தையே நிறுத்திய அற்புதப் பிறவிகளான மாவீரர்களின் கனவான சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்கும் புனிதப் போரில் இறுதிவரை உறுதியுடன் பங்கேற்பது உலகத் தமிழர்களாகிய நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

எமது தாயக மண் முழுமையாக விடுதலையடைய வேண்டுமென்ற இலட்சியத்திற்காகவே இறுதிவரை உறுதியோடு போராடி மடிந்த மாவீரர்களின் உயிர்த்தியாகத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த தமிழர் தாயகம் இன்று எதிரிகளினதும் துரோகிகளினதும் களியாட்ட மையமாகியுள்ளது.

ஆக்கிரமிப்பு இராணுவ அரக்கனின் இருப்பை அடிப்படையாகக் கொண்டு வல்வளைப்பு செய்யப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்கள் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே கண்துடைப்பு நடவடிக்கையாக சில நூறு ஏக்கர் நிலங்கள் மீள ஒப்படைக்கும் நிகழ்வுகள் ஊடகவெளிச்சத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

தமிழர் தாயகத்தின் பொருண்மியத்தின் ஆதாரமாக விளங்கும் விளை நிலங்கள், மீன்பிடித் துறைகள், தொழிற்சாலைகள் என்பனவற்றின் மீதான ஆக்கிரமிப்பு தொடர்வதுடன் அதன் பயன்களையும் முற்றுமுழுதாக அனுபவித்து வருவதன் மூலம் எமது மக்களின் வாழ்வாதாரத்தை உறிஞ்சியெடுக்கும் இரத்தக்காட்டேறியாக சிங்கள இராணுவம் நிலையெடுத்துள்ளது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது.

இவ்வாறு வல்வளைப்பு செய்யப்பட்ட இடங்களுக்கு பாரம்பரிய உரித்துடையவர்களான எமது மக்கள் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேற முடியாது அடிப்படை வசதிகளேதுமற்ற இடைத்தங்கல் முகாம்களிலே இருபது, முப்பது ஆண்டுகளாக அகதி வாழ்வு வாழ்துவரும் நிலையில் ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் குடும்பத்தினர் என்ற போர்வையில் சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கை முழு வீச்சில் தொடர்ந்து வருகின்றது. இவை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழ் மக்களது அகதி வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கபட வேண்டும்.

தமிழர்களின் பலமாக விளங்கிவரும் அறிவுத் தளம், கலை-கலாச்சார-பண்பாட்டுத் தளம் என்பவற்றை இலக்குவைத்து சமூகவிரோத செயல்திட்டங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பிராந்தியம் தவிர்ந்த தமிழர் தாயகத்தின் மற்றப்பகுதிகள் ஏலவே சிங்கள அரசின் கொலை வலையத்திற்குள் நீண்டகாலம் நீடித்து வருகின்றது.

இந்நிலையில்தான் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பிராந்தியங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்தை இலக்கு வைத்து 2009 மே-18 இற்கு பின்னர் இச்சதித்திட்டம் அதிதீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சாவும் அழிவும் நிறைந்த போர்ச்சூழலுக்கு மத்தியில் விளக்கொளியில் கல்விகற்று இலங்கைத் தீவின் முதன்மை மாவட்டமாகி உலகெங்கும் அறிவொளிபரப்பிய யாழ்.மாவட்டம் இன்று ஏழே ஆண்டுகளில் தலைகீழ் மாறுதல் கண்டு கடைநிலை மாவட்டமாக இருள்சூழ்ந்து நிற்பதற்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் சமூகவிரோதச் செயற்பாடுகளின் ஆதிக்கமே காரணமாகும்.

வாள் வெட்டு, கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி, குழு மோதல் என அத்தனை சமூகவிரோதச் செயல்பாடுகளின் சொர்க்கபுரியாக யாழ். மாவட்டம் அலங்கோல வடிவமெடுத்து நிற்பதே யாழ். மாவட்ட அறிவுத்தளத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகும். இவை யாவற்றுக்கும் ஊற்றுக்கண்ணாகத் திகழ்வது வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள மது-போதைப் பயன்பாடேயாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகையின் போது வயது வந்தவர்களே அதுவும் குறைந்தளவானவர்களே திரைமறைவில் மது அருந்தியும் புகைப்பிடித்தும் வருமளவிற்கு சமூக ஒழுக்கம் மேலோங்கியிருந்த வடக்கு மாகாணம் சடுதியாக மது-போதை பயன்பாட்டில் முதன்மையிடத்தை எட்டிப்பிடித்துள்ளமையே ஒட்டுமொத்த சீரழிவுகளுக்கும் மூல காரணமாகும்.

2009 மே-18 வரை கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் வாசனையே படாதிருந்த வடக்கு மாகாணம் கேரளா கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் சொர்க்கபுரியாக்கப்பட்டதன் பின்னணியில் தான் வடக்கு மாகாணத்தின் இருண்ட யுகம் கட்டியமைக்கப்பட்டு வருகின்றது.

சமூக, பொருளாதார, கலை, கலாச்சரம், பண்பாடு என அனைத்துத்தளங்களிலும் ஆழ வேரூன்றி கருவறுத்துவரும் அனைத்துவிதமான சமுகவிரோதச் செயற்பாடுகளில் இருந்தும் வடக்கு மாகாணம் முழுமையாக விடுபட வேண்டுமாயின் மது-போதைப் பொருள் பயன்பாடு உடனடியாகவே முற்றிலும் ஒழிக்கப்பட்டேயாக வேண்டும். அதற்கு தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவம் முற்று முழுதாக வெளியேற்றப்படa வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஆயுதம் தாங்கிய சிங்கள இராணுவத்தினரின் இருப்பின் பின்னணியிலும் ஊக்குவிப்பிலும்தான் அனைத்துவிதமான சமூகவிரோதச் செயற்பாடுகள் இயக்கப்பட்டு வருகின்றன.. மாவீரர் நாள் உள்ளிட்ட தேசிய எழுச்சி நிகழ்வுகளை அனுட்டிப்பவர்களையும் முன்னின்று ஏற்பாடு செய்பவர்களையும் சுவரொட்டிகளை ஒட்டுபவர்களையும் எழுக தமிழ் போன்ற மக்கள் எழுச்சி நிகழ்வுகளுக்காக களப்பணியாற்றுபவர்களையும் சூட்டோடு சூடாக கைது செய்யவும் தேவைப்படும் போது சுட்டுப் படுகொலை செய்யவும் முடிந்த சிங்கள இராணுவத்தினர், புலனாய்வுத்துறையினர் மற்றும் காவல்துறையினரால் போதைப் பொருட்களை தடுத்து நிறுத்த முடியாதிருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

“தமிழ்ப்பெண்கள் எல்லாம் உங்களுக்கு ஆண்கள் எல்லாம் கடலுக்கு” என இறுதிப் போரில் ஈடுபட்ட சிங்கள இராணுவத்தினருக்கு, கோத்தபாய ராசபக்சே உத்தரவிட்ட நயவஞ்சகத்தனத்திற்கும் தமிழர்களை வேரறுக்கும் போதைப் பொருள் சாம்ராச்சியத்தின் காரணகர்த்தாக்கள் முழு சுதந்திரத்துடன் நடமாட அனுமதித்துவிட்டு தமிழ்த் தேசிய செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபடுபவர்களை கைது செய்தும் சுட்டுக் கொன்றும் அச்சுறுத்தல் நிலையை ஏற்படுத்திவருவதற்கும் வேறுபாடேதும் இல்லை.

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் தமிழர் தாயகமெங்கிலும் காணாமல் போதல்களும், கைதுகளும், சிறைவைப்புக்களும், சித்திரவதைகளும், பாலியல் வல்லுறவுகளும், படுகொலைகளும் தங்குதடையின்றித் தொடர்ந்து வருவதன் மூலம் இராணுவ அழுத்தத்தின் கீழ் தமிழர்களை அடக்கியாள வேண்டுமென்ற சிங்கள பௌத்த பேரினவாத மனோநிலையில் மாற்றமேதும் நிகழ்ந்திருக்கவில்லை என்னபதையே உணர்த்தியுள்ளது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்பதன் மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தாம் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையிற் கட்டிவிடலாம் என்பதற்காகவே தொடர்ந்தும் இராணுவ முற்றுகைக்குள் தமிழர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பின்னணியில் தான் புதிய அரசியலமைப்பு திருத்தம் எனும் பெயரிலான மோசடித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ‘சமாதானத்திற்கான போர்’ என்ற போர்வையில் முன்னைய சிங்கள அரசுகள் உலக நாடுகளுக்கு போக்கு காட்டி தமிழர்களை அழித்தொழிப்பதில் குறியாய் இருந்தன. அந்த வழியில் தமிழினப் படுகொலையில் புதிய உச்சம்தொட்டு இரத்த சரித்திரம் படைத்த மகிந்தனும் போரிற்கு பின் தமிழர்களுக்கு அரசியல் தீர்வினை வழங்குவதாக வாக்குறுதியளித்தே இன அழிப்புப் போரிற்கான ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் உலக நாடுகளிடம் இருந்து பெற்றிருந்தான்.

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டதன் பின் ஆறு ஆண்டுகள் தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி நடத்திய போதிலும் அரசியல் தீர்வுக்கான கடுகளவு முயற்சிகூட எடுக்காது மேலும் மேலும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வழங்கி ஏமாற்றுவதிலேயே காலத்தை கழித்திருந்த மகிந்த ராசபக்சேவின் அனைத்துப் பழி பாவங்களிலும் பங்காளியாக இருந்த மைத்திரி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய வடிவமே அரசியலமைப்புத் திருத்தமாகும்.

நடைபெற்ற/நடைபெற்றுவரும் தமிழினப் படுகொலைக் குற்றத்திற்கான பொறுப்புக் கூறலில் இருந்தும் தண்டனையில் இருந்தும் சிங்களத் தலைவர்களையும் இராணுவத்தினரையும் பாதுகாப்பதற்காகவே நல்லாட்சி அரசு என்ற பெயரில் அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் தேசிய அரசாங்கமானது அமைக்கப்படுள்ளது. அதன் ஓரங்கமாகவே எதிர்க்கட்சித் தலைவர் மகுடம் தமிழர் தலையில் சூட்டப்பட்டுள்ளது.

அரசியல் தீர்விற்கான முயற்சிகளிலோ இனப்படுகொலைக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கோ நடந்தவற்றிற்குப் பொறுப்புக் கூறவோ முற்படாது இலங்கைத் தீவின் கேந்திரத்தன்மையை முன்னிறுத்தி உலக நாடுகளை வசியப்படுத்திவரும் மைத்திரி-ரணில் அரசின் சூழ்ச்சிப் பொறியே அரசியலமைப்புத் திருத்தமாகும். எதிர்க்கட்சித் தலைவர் மகுடத்தின் சூட்சுமத்தின் பின்னணியில் நல்லாட்சி அரசிற்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இச்சதிக்கு உடந்தையாக இருந்து வருவது மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.

ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலமைந்த எந்த முயற்சிகளும் தமிழர்களது அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வாகாது என்பதனை வரலாறு மெய்ப்பித்தே வந்துள்ளது. இதனை உணர்ந்து அடிபணிவு அரசியல் துறந்து தமிழ் மக்களின் எதிர்கால நலனிற்காக பாடுபட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமிழர் தாயகத்தில் இன்றைய நிலையில் நடைமுறையில் இருக்கும் மாகாணசபை ஆட்சியானது இந்தியாவைத் திருப்திப் படுத்துவதற்காக அதுவும் அதிகாரக் கடிவாளத்தின் முழுக்கட்டுப்பாட்டையும் தமது கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டே சிங்களத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக வடக்கு மாகண சபை முழுக்க முழுக்க தமிழர்களால் வெற்றிகொள்ளப்பட்டதனால் குறைந்தபட்சம் எதிர்ப்பரசியல் மூலம் சிங்களத்தின் முயற்சிகளுக்கு வேகத்தடையாக இருக்க முடிகிறது. அதற்கு மேல் ஒரு துரும்பைக்கூட அசைத்துவிட முடியாதென்பதனை உணர்ந்து நிரந்தரத் தீர்விற்கான முயற்சிகளில் தாயக அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து சமரசமின்றி ஈடுபடுமாறு இப்புனித நாளில் தேச விடியலுக்காய் மரணித்த புனிதர்களின் கனவுகளைத் தோள்களில் சுமந்தவாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நான்கு தசாப்தங்களாக விடுதலை வேள்வி வளர்த்து தமிழீழ மண்ணையும் மக்களையும் காத்து நிற்கின்ற விடுதலைப் போராட்டமும் அதன்பால் வீரமரணம் அடைந்த மாவீரர்களது உயிர்த் தியாகமும் தான் ஒவ்வொரு தமிழனின் தலைநிமிர்விற்கான காரணமென்பதை அனைவருக்கும் அறுதியிட்டு உரைக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டமும் மாவீரர்களது உயிர்த்தியாகமும் இல்லையென்றால் தமிழர்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் புல் பூண்டுகள் முளைத்திருக்கும். இதனை மறப்பதற்கோ மறுப்பதற்கோ யாராவது முற்படுவார்களேயானால் அது வரலாற்றுப் பெருந்துரோகமாகும்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலர் மற்றும் கிராம சேவகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை காவல்துறை உயரதிகாரி முன்னிலையில் மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கொலைவெறியுடன் மிரட்டிப் பேசியுள்ள சம்பவம் இலங்கை தீவின் இரத்த சரித்திரத்தின் ஊற்றுக்கண்ணாக சிங்கள பௌத்த தீவிரவாதமே திகழ்ந்து வருவதனை பட்டவர்த்தனமாக நிரூபித்துள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் காவியுடையுடனிருந்த சுமணரத்ன தேரரின் கைகளில் துப்பாக்கி இருந்திருந்தால் எதிரில் நின்றிருந்த அத்தனை தமிழர்களும் உயிரற்ற சடலங்களாக சரிந்திருப்பார்கள் என்பதை அவரின் உடல்மொழியின் வெளிப்பாடு பறைசாற்றி நிற்கிறது. இது வெறுமனே ஒரு தேரரின் தனிப்பட்ட விவகாரம் என தட்டிக்கழத்துவிட முடியாது. மாறாக இது சிங்கள பௌத்த பேரினவாத ஆழ்மன உலகில் உயிர்ப்புடனிருக்கும் தமிழர் உயிர்குடிக்கும் இரத்த வெறியின் பின்புலம் கொடுத்த சிங்களத் திமிரின் வெளிப்பாடாகும். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சமாதானத்தை வலியுறுத்தும் நாடுகள் எவ்வாறு கடந்த காலங்களில் இன அழிப்புப் போரிற்கு ஆயுத, நிதி உதவிகளை அள்ளி அள்ளி வழங்கி சிங்கள அரசுகளின் போர் முன்னெடுப்புகளுக்கு முண்டுகொடுத்து நின்றதோ அவ்வாறே நல்லாட்சி அரசாங்கத்திற்கும் முண்டுகொடுத்து வருவது நீதிக்காக போராடிவரும் எமக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

உலக நாடுகளுக்கு தம்மை அமைதி விரும்பிகளாக காட்டிக் கொள்ளும் அதேவேளை தமிழர்களுக்கெதிரான இன அழிப்பு நடவடிக்கையினைத் தொடரும் கடந்தகால ஏமாற்று நாடகத்தையே இன்றைய மைத்திரி-ரணில் அரசும் மேற்கொண்டு வருகின்றது.

நடந்து முடிந்த, நடந்து வரும் தமிழ் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காகவே மகிந்த ரசபக்சே சகோதரர்களின் அமைதிப்படுத்தலின் பின்னணியில் கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது இந்த தேசிய அரசாங்கம்.

இதுவரை காலமும் இருதுருவ அரசியல் தளத்தில் நின்று தமிழர்களை அழித்தொழித்து தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த இரு பெரும் சிங்களக் கட்சிகளும் ஓரணியாக ஒன்றுபட்டு சிங்கள தேசத்தின் அதிபதிகளாக முடிசூடிக்கொண்டுள்ளார்கள். எதிர்ப்பதற்கு நாதியற்ற சூழமைவில் ஆட்சி அதிகாரங்களை முழுமையாக தமது கட்டுப்பாட்டிலேயே கொண்டுள்ள மைத்திரி-ரணில் கூட்டாட்சியானது தமிழர்களைப் பொறுத்தவரையில் பெரும் அபாயகரமான அழிவு சக்தியாகும்.

சுதந்திர இலங்கையின் 68 ஆண்டுகால வரலாறானது ஆளும் கட்சி எதிர்க் கட்சி என்ற இரு துருவ அரசியலாக முன்னகர்ந்து வந்த நிலை மாறி எதிர்க்கட்சியே இல்லாத சூழல் தமிழர்களின் பேரழிவு நிலையிலேயே தோன்றியது.

தமிழர்களை அழித்தொழித்து ஆக்கிரமிப்பது என்ற பிரதான இலட்சியத்தின் வழித்தடத்தில் பயணித்த சிங்கள அரசுகள் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட தீர்வை நோக்கிய சந்தர்ப்பங்களிலெல்லாம் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினை முன்னிறுத்தி தவிர்த்தே வந்தன.

ஆட்சிகள் மாறிய போதிலும் காட்சி மாற்றமேதுமின்றித் தொடர்ந்தே வந்தது சிங்கள அரசியல் நாடகம். இந்தப் பின்னணியில் கட்டியமைக்கப்பட்ட சிங்கள அரசியல் வரலாற்றுச் சூழமைவே அனைவரையும் ஓரணியில் ஒன்றிணைத்துள்ளது.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தை மையமாக கொண்டுள்ள உலக, பிராந்திய வல்லாதிக்க நாடுகளின் நலன்களை பொய்யான வாக்குறுதிகளின் அடிப்படையில் தமக்கு சாதாகமாகப் பயன்படுத்தி தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை பெரும் அழிவுக்குள் தள்ளியதுடன் மாபெரும் இனப்படுகொலையையும் நடத்தி முடித்ததைப் போன்றே அதற்கான பொறுப்புக் கூறலில் இருந்து தப்பிப்பதற்கும் உபாயமாகப் பயன்படுத்தி வருகின்றது மைத்திரி-ரணில் அரசு.

தமது பிராந்திய நலன்களுக்குள் பலியிடப்பட்ட 1,46,676 தமிழர்களைப் போன்றே அவர்களுக்கான நீதியும் தெரிந்தே பலியிடப்படுவதனை இனியும் அனுமதிக்காது அறம்சார்ந்த நிலையெடுத்து காலம்தாழ்த்தாது எமது நீதிக்கான போராட்டதில் துனைநின்று எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்குமாறு அனைத்துலக நாடுகளையும் இத்தருணத்தில் வேண்டிக்கொள்கின்றோம்.

புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் எமது மக்கள் தாம் வாழ்ந்துவரும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக வளர்ச்சிபெற்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாங்கு தூண்களாகச் செயற்பட்டுவரும் நிலையில் அதனை சிதைத்து பலவீனப்படுத்துவதற்கான முயற்சியில் சிங்கள அரசு தீவிரம் காட்டிவருகின்றது.

இலட்சியத்தில் ஒன்றுபட்டு, ஓரணியில் நின்று எதிரிகளையும் துரோகிகளையும் வேட்டையாடிய எமக்குள்ளிருந்தே சிலரை மடைமாற்றி புலம்பெயர் செயற்பாட்டுத் தளத்தை அழிக்கும் கருவியாக்கியுள்ளது சிங்களம். புனித இலட்சியத்திற்காய் எங்கள் கைகளில் ஏந்திய ஆயுதங்கள் இன்று அந்த இலட்சியத்தை முன்னெடுப்பவர்களையே வீழ்த்திக்கொண்டிருப்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

பிளவு நிலையில் நின்று போட்டிபோட்டு எம்மை அழித்தொழித்த சிங்களம் இன்று அந்த குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்காக ஓரணியாக ஒன்றுபட்டுள்ள போது, இருப்பவர்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் ஒருபடி மேம்பட்ட நிலையில் ஒன்றுபட்டு பலம்பொருந்திய சக்தியாக போராட வேண்டிய எமக்குள் ஏற்படும் பிளவானது ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலையைத் தடுத்து தாமதப்படுத்தும் என்பதனை அனைவரும் உணர்ந்து மாவீரர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து விடுதலைப் பணியை முன்னெடுத்துச் செல்லும் புனிதப் போரில் கரம் கோர்த்து பலம் சேர்க்குமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

யுகங்கள் கடந்து இடையறுத்தோடிக் கொண்டிருக்கும் கடலால் கூட அறுத்தெறிந்துவிட முடியாத மகோன்னத உறவின் உறவான தாய்த் தமிழக சோதரர்களே உங்கள் தார்மீக ஆதரவு எமது ஆத்மபலத்தை இரட்டிப்பாக்கும் அருமருந்தாகும். பிணங்களாக எமது மக்கள் வீழ்த்தப்பட்டபோது வீதிகளிலிறங்கிப் போரடிய நீங்கள் அனைத்துத் தளங்களிலும் ஏமாற்றமே மிஞ்சிப்போய் கையறு நிலையில் நாம் நிற்கையில் ஓய்ந்துபோயிருப்பது பெரும் உளச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

வரையறுக்கப்பட்ட எல்லையுடன் கூடிய ஆட்சி அதிகாரக் கட்டமைப்பின் கீழ் பெரும் மக்கள் திரட்சியைத் தன்னகத்தே கொண்டிருக்கும் தாய்த் தமிழகம் மௌனம் கலைத்து என்றென்றும் எமது விடுதலைப் போராட்டத்தில் தோளோடு தோளாக இருந்து ஆதரவளிக்க வேண்டுமென உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

சிங்களத்தின் கனவுகளை தவிடுபொடியாக்கி மாவீரர் கண்ட கனவை நனவாக்க சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்கும் புனிதப் போரில் இறுதிவரை உறுதியுடன் நாமெல்லோரும் அணிசேர்வோம் என சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களின் கல்லறைகள் மீது கரம்பதித்து உறுதியெடுத்துக்கொள்வோமாக.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”

Top