பதவிக்காக மீண்டும் போர்க்கொடி தூக்கவுள்ள ஒபிஏஸ்?

கட்சியிலும், ஆட்சியிலும் நல்ல பதவி வகித்து வந்தாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாததால் மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கலாம் என கூறப்படுகிறது.

பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் அதிமுகவின் இரு அணிகளும் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இணைந்தன. அவை இணைந்த கையோடு துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து கட்சியில் தினகரனின் ஆட்டத்தை அடக்க இரு அணிகளும் சேர்ந்து கடந்த 12-ஆம் தேதி பொதுக் குழுவை கூட்டின. அப்போது சசிகலா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்தனர்.

அதற்கு பதிலாக பொதுச் செயலாளர் பதவிக்கு இணையான அதிகாரம் படைத்த பதவிகள் அதிமுகவின் வழிகாட்டும் குழுவில் ஏற்படுத்தப்பட்டன. அவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளாகும்.

என்னதான் துணை முதல்வராக இருந்தாலும் தன்னால் ஒரு கோப்பை கூட தனித்து நகர்த்த முடியவில்லை என்று ஓபிஎஸ் விம்மி வருவதாக தகவல்கள் கறுகின்றன. தலைமை செயலகத்தில் ஒவ்வொரு கோப்புகளும் முதல்வரின் பார்வைக்கு பிறகே ஒப்புதல் பெறுகின்றன.

மேலும் எடப்பாடியின் கண்ணசைவுக்கு கட்டுப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் துணை முதல்வர் என்ற பதவி வெறும் பெயரளவில் உள்ளது என்பதாலும் எடப்பாடியின் செயல்பாடுகளாலும் ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

ஆட்சியில் தான் தனித்து செயல்படமுடியவில்லை. சரி கட்சியில் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களை முக்கிய பதவிகளுக்கு நியமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஒருங்கிணைப்பாளருக்கான அதிகாரம் உள்ளது.

இதனால் கடும் அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ் இரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் அதிமுகவில் மீண்டும் போர்க் கொடி உயர்த்தவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு நீதிபதியை நியமிக்கும் பணியை ஓபிஎஸ் துரிதப்படுத்துவார் என்று எதிர்பார்த்திருந்த தொண்டர்கள், பதவி, அதிகாரத்துக்காக ஓபிஎஸ் மீண்டும் போர்க் கொடி உயர்த்தவுள்ளதை நினைத்து வெதும்புகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்