திருகோணமலையில் புத்தர் சிலைகள் உடைப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் நான்கு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளுக்கு இன்று காலை சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவும், இன்று அதிகாலையும் இச்சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உப்புவேலியிலுள்ள வெல்கம்வெஹெர, மொரவெவ, புல்மூட்டை மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேசங்களில் காணப்பட்ட புத்தர் சிலைகளுக்கே இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

உப்புவேலி பொலிஸ் பிரிவிலுள்ள வெல்கம்வெஹெர சந்தியில் காணப்படும் புத்தர் சிலை மற்றும் கோமரங்கடவல ஹிரியாய சந்தியிலுள்ள புத்தர் சிலை என்பவற்றின் மீது கறுப்பு எண்ணெய் வகை வீசி சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த சிலைகளை சீர் செய்யும் பணிகள் அருகிலுள்ள விகாரைகளின் தேரர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புல்மோட்டை புத்தர் சிலையின் தலைப் பகுதி உடைக்கப்பட்டுள்ளதாகவும், இது இரண்டாவது தடவையாக உடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Top