தாய்லாந்தில் கனமழைக்கு 18 பேர் பலி: 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கனமழைக்கு 18 பேர் பலியாகி உள்ளனர். ரோடுகள் ஆறுபோல் காட்சி அளிக்கின்றன. விவசாய நிலங்கள் நீரில் முற்றிலும் மூழ்கியுள்ளன. பெரும்பாலான இடங்களில் வீட்டின் முதல் மாடி வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 1500 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளன.

குறிப்பாக நகோன் ஷி தம்மராட் மாகாணம்தான் பெருமளவில் பாதிக்கப்பட்டள்ளன. இங்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வீட்டில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மீட்பு நடவடிக்கைகள் துரித முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ‘‘இந்த சூழ்நிலை இன்றும் நாளையும் மிகவும் மோசமாக இருக்கும. கனமழை நீடிக்கும்’’ என்று அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக தாய்லாந்தில் நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை வறண்ட மற்றும் குளிர்ந்த வானிலையே நிலவும். இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்துள்ளது.

Top