தள்ளாடும் தமிழகம் – ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மீண்டும் சென்னையில் மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் என அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனைப் போன்றே, சென்னையிலும், பொறியியல் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளிருப்புப் போராட்டம்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் வாசல் முன் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.

வகுப்புப் புறக்கணிப்பு

இதனைப் போன்றே அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை நடத்தினார்கள். மாணவர்கள் அனைவரும் இன்று வகுப்பைப் புறக்கணித்துவிட்டு கல்லூரி வாசலில் ஒன்று கூடினார்கள். பின்னர், மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

காளைகள் பாதுகாப்பு

ஜல்லிக்கட்டு விளையாட்டை தொடர்ந்து நடத்தப்படாமல் போகுமானால் காளைகள் இனம் அழிந்துவிடும். இதன் தொடர்ச்சியாக விவசாயமும் பாதிக்கப்படும் என்று போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

பீட்டாவுக்குத் தடை

விலங்குகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டா அமைப்பு மனிதர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மேலும், ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை என்ற நிலையில் தேவையில்லாமல் வழக்குத் தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் கோரினர்.

Top