நாளை நான் போராட்டம் நடத்துகிறேன்.. முடிஞ்சா கைது பண்ணுங்க.. சிம்பு அதிரடி!

தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இலங்கை தொடங்கி இந்தியாவில் வரை பல பிரச்சினைகள் உள்ளதாக நடிகர் சிம்பு வேதனை தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சிம்பு இன்று தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரது பேட்டியிலிருந்து:

-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எனது வீட்டுக்கு போராட்டம் நடத்த வருவோர் வரலாம்

-இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தராவிட்டால் பிற பிரச்சினைகளில் தலையிடமாட்டேன்

-நடிகர்கள் தமிழர் பிரச்சினைக்கு வருவதில்லை என்று கூறுவோர் நாளை போராட வரட்டும்

-நான் போராட கூப்பிடுவதால் அரசியலுக்கு வரப்போகிறேன் என வதந்தி கிளப்ப வேண்டாம்

-பேப்பரில் கையெழுத்து போட்டு வேண்டுமென்றாலும் தருகிறேன், நான் அரசியலுக்கு வரமாட்டேன்

-நான் நாளை போராட்டம் நடத்துவேன். என்னை முடிந்தால் கைது செய்யட்டும்

-முடிந்தால் என்னை தடியடி நடத்தி கலையுங்கள். எல்லோரும் அவரவர்கள் வீட்டு முன்பு 10 நிமிடம் மவுனமாக நில்லுங்கள். பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல் அப்படியே 10 நிமிடங்கள் நில்லுங்கள்

-தமிழர்கள் அநாதை இல்லை என்று காண்பிக்க திரளுங்கள். உங்களுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு மக்களே. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடுபவர்களால் பத்து பைசாவுக்கு பலனில்லை. தனித்தனியாக போராடுவதால் பலன் கிடைக்காது.

-தனித்தனியாக போராடுவதால்தான் போலீசாரால் தடியடி நடத்த முடிகிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் போராட்டத்தை புது வகையில் எடுத்து செல்லுங்கள்

-தமிழன் என்று பெருமையுள்ளவர்கள் தனித்தனியாக போராடாதீர்கள். நாளை 12ம் தேதி மாலை 5 மணிக்கு என் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம். மாலை 5 மணிக்கு 10 நிமிடங்களுக்கு நான் மவுன விரதம் இருக்கப்போகிறேன்

-எனக்கு சோறுபோட்ட என் மக்கள் பிரச்சினைக்காக நான் வருவேன். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை போலீசார் அடித்திருக்க கூடாது. நமது கலாசாரத்திற்கு ஆதரவாக போராடியவர்களை போலீசார் அடித்தது தவறு. போலீசார் அன்று யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு லீவு போட்டிருக்கலாம்-சிம்பு

-மாட்டை கொடுமைப்படுத்துவதாக கூறுவோருக்கு சிம்பு சரமாரி கேள்வி. மாடு தனது கன்றுக்கு வைத்த பாலை கறந்து குடிப்பவர்களுக்கு இதை கேட்க என்ன தகுதியுள்ளது? செடி, கொடி கூட உயிரோடு உள்ள தாவரம்தான், ஏன் அதை சாப்பிடுகிறீர்கள்?

-எங்களுக்கு தெரியாதா மாட்டை துன்புறுத்தக்கூடாது என்று?நாங்கள் மனிதர்கள் இல்லையா, மனிதாபிமானம் இல்லாத ராட்சதர்களா? நம்மூரில் பிறந்த முட்டாள்கள் இப்படி கேள்வி கேட்கிறார்கள்.

-கலாச்சாரம் தெரியாமல் என்னங்க பிள்ளை வளர்த்துள்ளீர்கள்?. ஜல்லிக்கட்டு தடை என்பது வேறு லெவல் கேம். கிராமத்தில் இருந்து சிட்டிக்கு வந்ததும் உங்களுக்கு பாரம்பரியம் மறந்துவிட்டதா?

-எவனோ வெளிநாட்டிலிருந்து வந்து சொல்வதை கேட்டுக்கொண்டு பிதற்றுவதா? தமிழகத்தின் சோறை சாப்பிட்டுவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசுவதா? ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று சிலர் கேட்கிறார்கள். முதலில் தமிழ் என்றால் என்னவென்று உன் அப்பா, அம்மாவிடம் கேள்-சிம்பு

-எங்களின் பாரம்பரியத்தில் கை வைத்தால் நடப்பதே வேறு. நான் பஞ்ச் பேசுவதை போல பேசுவதாக விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை. எல்லா தமிழர்களுக்கும் போராடும் உணர்வு இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடுவது மகிழ்ச்சி

-ஜல்லிக்கட்டை தடை செய்ய சொல்வது வெளிநாட்டு அமைப்பு. ஜல்லிக்கட்டு ஒன்றும் விளையாட்டு கிடையாது. தமிழர்களை அனாதை என நினைத்துவிட்டீர்களா? வெளியே அடித்தீர்கள் பொறுத்துக்கொண்டோம், வீட்டுக்குள் வந்து விட்டீர்களே!

-நாங்கள் அநாதைகள்தான். அஜித், சிம்பு, விஜய் ரசிகர்கள், மத, ஜாதி ரீதியாக தமிழர்கள் பிரிக்கப்பட்டுவிட்டனர். இப்படி பிரிந்து கிடப்பதால்தான் தமிழர்கள் அனாதையாக்கப்பட்டுள்ளோம்.

-கர்நாடகாக்காரர்களுக்கு உணர்வு உள்ளது நம்மை அடிக்கிறார்கள். தமிழர்களுக்கு உணர்வு இல்லை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசும் அறுகதை எனக்கு உள்ளது.

-இன்று கூட நான் பேசாவிட்டால் என்றுதான் பேசுவது. மகத்தான தமிழ் எனது தாய் மொழி என்பதில் பெருமை.5ம் வகுப்புவரை தமிழில் நான் 99, 100 மதிப்பெண்கள் எடுத்தேன். நமது கலாசாரத்தில் கை வைக்கிறார்கள். நமது வீட்டுக்குள் வந்து அடிக்கிறார்கள். இதற்கு மேலும் சும்மா இருக்க போகிறீர்களா?

-காஷ்மீரில் ராணுவ வீரர் கொல்லப்பட்டால் இந்தியர் என்கிறது மீடியா. கன்னியாகுமரி மீனவர்கள் கொல்லப்பட்டால் தமிழர்கள் என்கிறது.

-நான் போராட்டம் நடத்தினால் அரசியலுக்கு வருவதாக கூறிவிடுவார்கள். நான் அரசியல்வாதி கிடையாது. நான் ஒரு நடிகர்தான். தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினை-சிம்பு

Related posts

Top