சுன்னாக இளைஞர் படுகொலை, காவல்துறை நபரொருவருக்கு சர்வதேச பிடிவிறாந்து!

யாழ்ப்பாணக் காவல்துறை நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை அதிகாரிக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் நாள் சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதைக்குட்படுத்தி படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும்இ படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 25ஆம் நாள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்திருந்தனர்.

அதனையடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தில் கடமையாற்றிய 8 காவல்துறையினர்மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதில் 7பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து அவர்கள் மீதான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.

இதில் 5 காவல்துறையினருக்கெதிராக கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பான விசாரணை கிளிநொச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. அத்துடன் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 5பேர் உட்பட 8பேர் மீதான வழக்கு விசாரணை யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 பேரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

மற்றைய சந்தேக நபர் வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கெதிராக சர்வதேச பிடிவிறாந்தினை யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், சந்தேக நபர்கள் 7பேரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

Top