ஆளுநர் பார்க்க வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை: தீபக்

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை ஆளுநர் பார்க்க வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை என அவரது அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்திகதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 72 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா எப்படியும் உயிர் பிழைத்து திரும்பி விடுவார் என்றே அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற வகையிலேயே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்திகளும் வெளிவந்தன. குறிப்பாக இட்லி சாப்பிட்டதாகவும், கவர்னர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பார்க்க வரும்போது கையசைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் நம்பிக்கையுடன் 72 நாட்களாக காத்திருந்த தொண்டர்களுக்கு, ஜெயலலிதான் மரண செய்தி அதிர்ச்சி அளித்தது.

அவர் மறைந்தபிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள், பிரிவினைகள் தேர்தல் ஆணையம் வரை சென்று இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. கட்சியை கைப்பற்றும் முனைப்பில் இரு தரப்பினரும் காய்நகர்த்தி வருகின்றனர்.

இதற்கு வலுசேர்க்கும் வகையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகின்றனர். அவ்வகையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டதாக கூறியது பொய் என்றும், சசிகலா கூறியதால் இவ்வாறு பொய் சொன்னதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவலை கூறினார்.

இது அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பி உள்ள நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தந்தி டிவிக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், ஆளுநருக்கு, ஜெயலலிதா கட்டை விரல் காட்டி சைகை செய்ததாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய் என்று தெரிவித்தார். ஆளுநர் வந்தபோது ஜெயலலிதா சுயநினைவோடு இல்லை என்றும், அந்த சமயத்தில் தானும் மருத்துவமனையில் இருந்ததாகவும் தீபக் கூறி உள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு வந்தபின்னர் மூன்று நாட்கள் மட்டுமே ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாகவும் தீபக் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்