“அட மடையா இந்த ‘ஓம்’ ஐ கேக்கத்தான் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறன்…” ஈழத்தில் கிருபானந்தவாரியார்! – இரா.மயூதரன்!

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை அம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வரவழைக்கப்பட்டிருந்த ஒரு தருணத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் ‘அட மடையா இந்த ‘ஓம்’ ஐ கேக்கத்தான் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறன்…’ என்று கூறியிருந்தார்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மூத்தவர் அதுகுறித்து தெரிவித்ததாவது…

வல்வெட்டித்துறை அம்மன் கோயிலில் வருடா வருடம் நடைபெறும் திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் ஆன்மிக நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம். விழா உபயகாரர்களின் வல்லமைக்கேற்ப சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்படும். அவ்வாறு 1962-65 இற்கு இடைப்பட்ட ஒரு ஆண்டில் சிறப்பு அழைப்பாளராக கிருபானந்த வாரியார் அழைக்கப்பட்டிருந்தார்.

அவரது சொற்பொழிவை கேட்பதற்கு ஏராளமான ஈழத்தவர்கள் கூடியிருந்தார்கள். திருமுருக கிருபானந்த வாரியாரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப வழக்கம் போல சிறுவர்கள் முன்பாகவே இருத்தப்பட்டிருந்தார்கள். சொற்பொழிவின் இடையிடையே முன்பாக இருக்கும் சிறுவர்களிடம் கேள்விகள் கேட்பது திருமுருக கிருபானந்த வாரியாரின் வழக்கமாகும்.

அவ்வாறே முன்பாக கூடியிருந்த சிறுவர்களைப் பார்த்து கேள்வி கேட்டுள்ளார் திருமுருக கிருபானந்த வாரியார். அதற்கு ‘ஓம் ஐய்யா…’ என ஒரு சிறுவனிடமிருந்து பதில் வந்தது. நிகழ்வு ஏற்பாட்டாளர்களில் ஒருவர் பதறியடித்து அந்த சிறுவனை நோக்கி ‘ஓம் ஐய்யா…’ என்று சொல்லக்கூடாது ‘ஆமாம் ஐய்யா…’ என்று சொல்லவேண்டும் என அறிவுறுத்தினார்.

ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கின் தனித்தன்மைகளில் முதன்மையானதாக விளங்கும் ‘ஓம்’ என்பது தமிழ்நாட்டு பேச்சு வழக்கில் ‘ஆம்.. ஆமாம்..’ என்பதாகும். திருமுருக கிருபானந்த வாரியார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு விளங்கக்கூடியவாறு ‘ஆமாம் ஐய்யா…’ என்று கூறுமாறு ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கூறியிருந்தார்.

அந்த ஏற்பாட்டாளரின் இந்த அறிவுறுத்தலுக்கு மறுப்புத் தெரிவித்தே “அட மடையா இந்த ‘ஓம்’ ஐ கேக்கத்தான் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறன்…” என திருமுருக கிருபானந்தவாரியார் பதிலளித்திருந்தார்.

நாங்கள் எப்போதும் நாங்களாக இருக்கும் போதுதான் எங்கள் சுயம் காக்கப்படும். அடுத்தவர் வசதிக்காக எங்களை மாற்றிக்கொள்ளும் போது எங்கள் சுயம் இழக்கப்படும். உலகெங்கும் தமிழர்கள் பரவி வாழ்ந்து வந்தாலும் வேற்று மொழிக் கலப்பின்றி தனித்தன்மையுடன் தமிழ் வாழ்வது தமிழீழத்தில் தான்.

ஈழத் தமிழர்களாகிய நாம் எங்கிருந்தாலும் எமது இயல்புத் தமிழில் உரையாடுவோம். அது எம்மவர்களுடனான உரையாடலாக இருந்தாலும் வேறு நபர்களுடனான உரையாடலாக இருந்தாலும் சரி. அதுவே எம் தனித்தன்மையின் ஆதாரம்.

அவரவர் வயிற்றுப் பசிக்கு அவரவரே உணவுண்டாக வேண்டும். இன்னொருவர் உணவுன்பதால் அடுத்தவர் பசி தீராது. அது போலவே எமது மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் தனித்தன்மையினை நாம்தான் காப்பாற்றியாக வேண்டும்.

ஈழத்தமிழ் பேச்சில் அன்பு, பாசம், கனிவு, பணிவு போன்றன மேலோங்கி இருப்பதால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். மழலை மொழிக்கு நிகரான பெருமகிழ்வையும் தித்திப்பையும் தன்னகத்தே கொண்ட ஈழத் தமிழ் பேச்சு வழக்கை அதன் சுவை குன்றாது நாம் உரைப்போம் எப்போதும்.

ஈழத்தமிழ் பேச்சு வழக்கில் அம்மா-மகள்-மகன் இடையேயான உரையாடல்…

அம்மா : பிள்ளை என்னணை செய்யுது…?
மகள் : ஒண்டுமில்லையணை…
அம்மா : நான் அப்பவும் சொன்னான் பனி’க்க திரிய வேண்டாமெண்டு… தம்பி… தம்பி…
மகன் : என்னணையம்மா…?
அம்மா : ஒருக்கா இஞ்ச வந்திட்டு போடா…
மகன் : ஓமணை வாறன்…
மகன் : என்னம்மா…
அம்மா : உங்கால போய் கொஞ்ச தேசிக்காயிலை ஆஞ்சு கொண்டுவாவன்… அக்காக்கு சளி பிடிச்சுப்போச்சு…
மகன் : சரியணை ஆஞ்சு கொண்டு வாறன்…
அம்மா : றோட்டில யாரோடையும் அலட்டிக் கொண்டிருக்கிறேல்ல… ஆஞ்சு கொண்டு கெதியெண்டு வரவேணும்…
மகன் : இந்த மனிசியோட… ஓமணை கெதியெண்டு வாறன்…
மகன் : இந்தாணையம்மா… காணுமே…
அம்மா : ஓமோம்…
அம்மா : பிள்ளை… எடி பிள்ளை… தேசிக்காயிலை, தேயிலை போட்டு கொதிக்க வைச்ச தண்ணி கொண்டுவந்திருக்கிறன்… எழும்பி வேது பிடிச்சிட்டு மேலக் கழுவு பிள்ளை… கொஞ்சம் சுகமா கிடக்கும்…
மகள் : பேந்து வேது பிடிக்கிறன்… எனக்கு நித்திரை வருதும்மா…
அம்மா : சூடாற்றதுக்குள்ள நல்லா வேது பிடிக்கோனும்… எழும்படி பிள்ளை… யேய் எழும்பு…
மகள் : இந்த மனிசியோட பெரிய கரைச்சல்… கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளவும் விடாதாம்…
அம்மா : டேய்.. தம்பி… தம்பி…
மகன் : ஓமணை… வாறன்…
அம்மா : தம்பி ஓடிப்போய் ஊர் முட்டை வாங்கியாடா… அக்காக்கு முட்டைக் கோப்பி ஆத்திக்கொடுப்பம்…
மகன் : மேளுக்கு சும்மா தடிமன் பிடிச்சதுக்கு படுற பாட்டைப் பாரன்…
அம்மா : சரி.. சரி.. கெதியா போய் வாங்கியாடா… அப்பிடியே மிச்சக் காசுக்கு உனக்கு என்ன வேணுமோ வாங்கு…

ஈழதேசம் இணையத்திற்காக இரா.மயூதரன்.

Related posts

Top