கூட்டமைப்பில் இருந்து வெளியேறப்போகின்றதா ஈபிஆர்எல்எப்..? சிவ.கிருஸ்ணா

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தில் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான எதிர்பார்ப்பு அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் நம்ப வேண்டிய நிலை 2009 இற்கு பின்னரே ஏற்பட்டிருந்தது. முள்ளிவாய்கால் பேரவலத்துடன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதும், தமிழ் மக்களின் அபிலாசைகளையும், அவர்களது கோரிக்கைகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேல் விழுந்தது. யுத்தம் முடிந்த கையுடனேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த இந்திய உயர்மட்டக் குழு 13 வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வுடன் தமிழ் மக்களை அமைதி காக்குமாறு கோரியிருந்தது. இரா.சம்மந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தலைமை அதனை ஏற்றுக் கொண்ட போதும் அதில் இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும், விடுதலைப்புலிகளால் கூட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்ட சிலரும் அதனை எதிர்த்தனர்.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டளைகளைக் கேட்டு நடந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2009 இற்கு பின்னேரே தாமாவே தமிழ் மக்களது உரிமைப் போராட்டம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் ஒரு தரப்பாக மாறியது. இதன் விளைவாக அக் கட்சிக்குள் கருத்தியல் சார்ந்த முரண்பாடுகள் ஏற்பட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறியது. விடுதலைப் புலிகளால் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டவர்களால் இரா.சம்மந்தன் தரப்பால் ஓரங்கட்டப்பட்டனர். இந்த நிலையில் அதிகாரத்தை கையில் எடுத்த இரா.சம்மந்தனும், தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளின் தயவில் தமது கட்சியைப் பலப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. குறிப்பாக வன்னியைப் பொறுத்தவரை ஈபிஆர்எல்எப் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகளின் தயவிலேயே தமிழரசுக் கட்சி தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டது.

யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஏனைய பங்காளிக் கட்சிகளின் ஆதரவில் தன்னை வளப்படுத்தி இன்று கூட்டமைப்புக்குள் பிரதாக கட்சியாகவும், அதிக மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டதாகவும் தமிழரசுக் கட்சி மாறியுள்ளதுடன், ஏனைய பங்காளிக் கட்சிகளையும் ஓரம் கட்டி ஏதேச்சதிகாரப் போக்கில் செயற்பட்டு வருகின்றது. புதிய அரசியலமைப்பு விவகாரம், இனப்பிரச்சனை தீர்வு, ஐ.நாவிகாரம் என தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சனைகளை தமிழரசுக் கட்சியின் ஒரு சில உறுப்பினர்களே கையாண்டும், தீர்மானித்தும் வருகின்றனர். ஏனைய பங்காளிக் கட்சிகள் கட்சித் தலைவர்களுக்கு கூட இது தொடர்பில் தெரியப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

கூட்டமைப்பைப் பொறுத்தவரை தற்போது ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழரசுக் கட்சி என்னும் நான்கு கட்சிகளின் கூடாரமாகவுள்ளது. 2015 ஆம் ஆண்டு சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையும் ஆதரவளித்திருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் பதவிகளைப் பெற்றுக் கொண்ட கூட்டமைப்பு எதிர்கட்சி என்ற பெயரில் மைத்திரி – ரணில் அரசாங்கத்துடன் இணைக்க அரசியல் செய்து வருகின்றது. சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்திற்கு இருந்த அழுத்தங்களை குறைப்பதற்கும், ஐ.நாவால் கால நீடிப்பு வழங்கப்படுவதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளே காரணம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் செயற்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும், விமர்சனங்களையும் உருவாக்கியிருக்கிறது. பங்காளிக் கட்சிகளுக்கட்சிகள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஈபிஆர்எல்எப் கட்சி தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சி மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது. கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே சம்மந்தனது தலைமைத்துவம் பிழை எனவும் மாற்றுத் தலைமை அவசியம் எனவும் அந்தக் கட்சி வலியுறுத்தி வருகின்றது. புளொட் அமைப்பும் தமிழரசுக் கட்சி மீது அதிருப்தி கொண்டிருக்கின்ற போதும் அது பிரிந்து செல்வதை விரும்பவில்லை. இரா.சம்மந்தனுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து பார்ப்போம் என்ற நிலையிலேயே (இப்பத்தி எழுதப்படும் வரை) இருக்கின்றது. ரெலோவைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சியை விட்டு தாம் வெளியேறினால் தோற்று விடுவோம். வீட்டுக்கே மக்களின் வாக்கு என்ற பழமைவாத மனநிலையில் விடுபடாதவர்களாக அந்தக் கட்சியுடன் ஒட்டி உறவாடியும், ஈபிஆர்எல்எப், புளொட் ஆகிய பங்காளிக் கட்சிகளை அவ்வப்போது ஆசுவாசப்படுத்தியும் வருகின்றது.

தமிழரசுக் கட்சி மீது விமர்சனங்களை முன்வைக்கும் பங்காளிக் கட்சிகள் மூன்றும் ஒன்று சேர்ந்து அந்தக் கட்சியின் ஏதேச்சதிகாரத்திற்கு முடிவு கட்ட முடியாத நிலையிலேயே தடுமாறி வருகின்றன. பங்காளிக் கட்சிகளின் இத்தகைய நிலைப்பாடே தமிழரசுக் கட்சி தடம்மாறுவதற்கும், இன்னும் வளர்ப்பதற்கும், அவர்கள் தமது நிலைப்பாட்டை மக்கள் மீதும் ஏனைய பங்காளிக் கட்சிகள் மீதும் திணிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்திருக்கின்றது.

இந்தவிடத்தில் ஈபிஆர்எல்எப் கட்சி தமிழரசுக் கட்சி தொடர்பில் தீவிரமாக குற்றச்சாட்டை முன்வைத்து மாற்றுத் தலைமை கோரி வரும் நிலையில், மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றது. ஈபிஆர்எல்எப் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றார்களா அல்லது இல்லையா, கூட்டமைப்பில் தொடர்ந்து பயணிக்கப் போகின்றார்களா அல்லது இல்லையா, தமது இருப்புக்காக போடும் வெறும் கூச்சலா அல்லது மக்கள் நலன்சார்ந்து சிந்திக்கின்றார்களா என்ற பல கேள்விகள் எழுந்திருக்கின்றது. இந்த நிலையில் ஈபிஆர்எல்எப் கட்சி மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கியிருக்கின்றது. கூட்டமைப்பு தலைமையை விமர்சித்துக் கொண்டு அதில் தொடர்ந்து இருப்பது என்பது மக்களை குழப்பும் ஒரு செயற்பாடே. தனது செயற்பாடு தொடர்பில் ஈபிஆர்எல்எப் கட்சி ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. தவறான தலைமைக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருப்பதும் பிழையான ஒரு செயற்பாடே.

2015 ஆம் ஆண்டு வரை கூட்டமைப்பின் பேச்சாளராக ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களே பதவி வகித்திருந்தார். அவர் தமிழரசுக் கட்சியின் தலைமையுடன் அப்போதும் முரண்பட்டு இருக்கின்றார். ஆனால் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த நிலை மேலும் தீவிரமடைந்திருக்கின்றது. தமிழரசுக் கட்சியையும், கூட்டமைப்பு தலைமையையும் கடுமையாக விமர்சித்து மாற்றுத் தலைமையை கோரி வருகின்றது. இப்பத்தியாளர் மேலே சொன்னது போல் ஆட்சி மாற்றத்தின் பின் கூட்டமைப்பு தலைமையின் இணக்க அரசியல் என்னும் பெயரிலான சரணாகதி நிலையே அதற்கு காரணம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இரா.சம்மந்தன் அவர்களின் தலைமைத்துவதற்குள் இருந்து கொண்டே மாற்றுத் தலைமை தேவை, சம்மந்தன் பயணிக்கும் பாதை பிழையானது என ஈபிஆர்எப் கூறி வருகின்றது. கூட்டமைப்பு தலைமை பிழையாக செல்கின்றது என்றால் சரியான பாதையை காட்டுவதற்கு ஏன் ஈபிஆர்எல்எப் கட்சியால் முடியாமல் இருக்கின்றது என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது..? தனித் தமிழீழம் கேட்டு, தனித்து தலைமைத்துவம் கொடுத்து போராடிய நிலையில் ஜனநாயக வழிக்கு திரும்பிய கூட்டமைப்பின் பங்காளிகள் சம்மந்தனது அல்லது தமிழரசுக் கட்சியினது தயவில்லாமல் தம்மால் வெல்ல முடியாது எனக் கருதி செயற்படுவதாகவே தெரிகிறது. அதனாலேயே விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து சம்மந்தனது கரங்களை மேலும் பலப்படுத்த உதவி வருகின்றன.

தமிழ் மக்கள் தமது உரிமைக்காகவும், காணிகளை விடுவிக்கப் கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் மேற்கொண்ட போராட்டங்கள் இன்று 7 மாதங்களை எட்டியுள்ளது. அந்த போராட்டங்களை முடித்து வைப்பதற்கோ அல்லது அந்த மக்களது போராட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு காத்திரமான அழுத்தம் கொடுப்பதற்கோ கூட்டமைப்பு தலைமை தவறியிருக்கின்றது. போராட்ட களத்தில் உள்ள மக்களும் தமிழ் தலைமைகள் மீத அதிருப்தி அடைந்தவர்களாக மாற்றுத் தலைமை பற்றிய தேடல்களுடனேயே உள்ளனர். ரெலோ உறுதியற்ற மனநிலையில் கதிரைகளை தக்க வைப்பதற்கு முயல்கிறது. புளொட் என்ன செய்வது என்ன சிந்தித்து வருகிறது. இந்நிலையில் பங்காளிக் கட்சிகள் அதிலும் குறிப்பாக அந்தக் கட்சிக்களுக்கு முன்னுதாரணமாக ஈபிஆர்எல்எப் கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது…? வெறும் விமர்சனங்களுடன் சம்மந்தன் தரப்பு செல்லும் பாதையில் பயணிக்கப் போகின்றதா அல்லது தமிழ் மக்களின் அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் முன்னிறுத்திய புதிய பாதை நோக்கி பயணிக்கப் போகிறதா..?

அடுத்து வரவிருக்கும் தேர்தலின் போது ஆசனப்பங்கீட்டில் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் மத்தியில் முரண்பாடுகள் ஏற்படும். அதில் ஈபிஆர்எல்எப் கட்சி மேலும் பாதிப்புக்களை எதிர்கொள்ளும். இந்ந நிலையில் தமக்கான ஆசனங்கள் போதாத நிலையில் ஈபிஆர்எல்எப் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம். அப்போது ஆசனம் இல்லாமையால் வெளியில் வந்தோம் எனக் கூறப்போகின்றார்களா…? அல்லது தமிழ் மக்களது நீடித்த கோரிக்கையான வடக்கு -கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்ற நிலையில் இருந்து தலமை தவறாக நகர்கிறது என்று கூறி வெளியேறப் போகின்றார்களா…? அல்லது தேர்தல் அரசியலுக்காக மீண்டும் தமிழரசுக் கட்சியிடம் மண்டியிடப் போகின்றார்களா…? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

ஆக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கூடாரம் தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. அந்த கூடாரத்திற்கான தூண்களாக உள்ள மக்கள் இன்று அந்த கூடாரத்தின் மேல் நம்பிக்கையிழந்து வருகின்றனர். இந்த நிலையில் பங்காளிக் கட்சிகள் மக்களது நிலையை புரிய வைத்து தலைமையை வழிக்கு கொண்டு வருவார்களா அல்லது தமிழ் மக்களது உரிமைக்காக பற்றுதியுடனும், நேர்மையுடனும் தொடர்ந்தும் பயணிக்க மக்கள் பலத்துடனான மாற்றுத் தலைமையை உருவாக்குவார்களா என்பதிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பும் தமிழ் மக்களது எதிர்காலமும் தங்கியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்