சசிகலாவை எதிர்நோக்கியுள்ள ஆயிரம் சிக்கல்கள்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் ஸ்தாபகர் எம்ஜீஆர் அவர்கள் நோய் வாய்ப்பட்டு 1987 ம் ஆண்டு டிச 24, அன்று காலமானதை தொடர்ந்து, அன்று அதிமுக கட்சிக்குள் உண்டான உட்கட்சி அரசியல் அதிகார நெருக்கடிபோன்ற ஒரு நிலை முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைந்து சரியாக இரண்டு மாதங்கள் கடந்தநிலையில் இன்று தமிழகத்தில் தோன்றியிருக்கிறது.

அன்று எம்ஜீ ஆர் அவர்களின் துணைவியார் ஜானகி அம்மையார் தலைமையில் ஒரு அணியும், செல்வி ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் அதிகாரத்திற்கான போட்டியில் இறங்கி ஈற்றில் ஜெயலலிதா அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து ஜானகி அம்மையார் அவர்கள் தொடர்ந்து போட்டி அரசியல் செய்ய விரும்பாமல் செல்வி ஜெயலலிதாவின் தலைமையில் கட்சியை நடத்துவதற்கான ஒப்புதலை வழங்கி ஜெயலலிதாவின் தலைமையை வழி மொழிந்து அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

அது அனைவரும் அறிந்த வரலாறு.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களின் பின், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டு எம்ஜீ ஆர் அவர்கள் மறைந்த அதே டிசம்பர் மாதம் 2016, 05,ம் திகதி அப்பல்லோ மருத்துவ மனையில் காலமானார்.

அதே 2016 டிச 05 ம்திகதி இரவு ஓ பன்னீர்ச்செல்வம் அவர்கள் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார், பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராக பொறுப்பற்றுக் கொண்டாலும் சசிகலா குடும்பம் கட்சியை தம்வசப்படுத்துவதற்கான அனைத்து முயற்சியையும் துரிதமாக செய்தது.

ஆரம்பத்தில் கட்சி நிர்வாகிகள் எம்பிக்கள், மந்திரி எம் எல் ஏக்கள் மட்டத்தில் இருந்த ஒருசில மூத்தவர்கள் கட்சியின் தலைமையை கைப்பற்றுவதற்கான விருப்பங்களை மறைமுகமாக வெளிப்படுத்தியிருந்தாலும் எவருக்கும் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கக்கூடிய செல்வாக்கு இருக்கவில்லை, மக்கள் மத்தியிலும் கவர்ச்சிகரமான நட்சத்திர அந்தஸ்து எவருக்கும் இருக்காத காரணத்தால் எதுவும் கைகூடவில்லை.

நெருக்கடியான தருணங்களில் ஜெயலலிதாவால் முன்னிலைப்பட்டவராக காணப்பட்ட படாடோபம் இல்லாத பன்னீர்செல்வம் மட்டுமே ஜெயலலிதாவுக்கு அடுத்து தலைவராக வரவேண்டும் என்பதாகவே அதிகமான எம் எல் ஏக்களும் கட்சியின் அடிமட்ட தொண்டனும் பொது மக்களும் விரும்புவதாகவே பொதுவான நகர்வுகள் சமூக மட்டத்தில் வெளிப்பட்டன இருந்தும் ஈகோ காரணமாக பன்னீர்செல்வத்தை முதன்மை படுத்த கட்சியில் இருந்த மூத்த நிர்வாகிகள் எவரும் விரும்பவில்லை.

இதனிடையே சசிகலா, தான்தான் கட்சியின் தலைவராக வரவேண்டும் என்று அனைத்து இராசதந்திரங்களையும் மேற்கொண்டு காய்களை நிதானமாக நகர்த்தினார். தங்களுக்கு கிடைக்காதது பன்னீர்ச்செல்வத்துக்கும் கிடைக்கக்கூடாது என்றும், சசிகலாவை பயன்படுத்தி தங்கள் பதவிகளை தக்கவைத்துகொள்ளலாம் என்றும் நோக்கம் கொண்ட கட்சி உறுப்பினர்கள் ஜெயலலிதாவையும் விட உயர்ந்த நிர்வாகிபோல சசிகலாவை வானளாவ புகழ்ந்து தள்ளினர்.

வர்தா புயல், சல்லிக்கட்டு பிரச்சினை போன்றவைகள் குறுக்கிட்டபோது மத்திய அரசும் உள் நோக்கத்தோடு முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக நடந்து கொண்டது நாளடைவில் முதலமைச்சரான பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரத்தொடங்கியது.

கட்சிக்குள் பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்தபோதும் பன்னீர்ச்செல்வத்தை முன்னிலைப்படுத்த விரும்பாத ஒரு சில மந்திரிகளை கையுக்குள் வைத்துக்கொண்டு கட்சி நிர்வாகிகள் அனைவரும் சசிகலா குடும்பத்தினரால் பேரம்பேசப்பட்டு வழிக்கு கொண்டுவரப்பட்டனர்.

ஜெயலலிதாவுடன் நெருக்கமான உறவில் ஒன்றாக நீண்டகாலம் இருந்தவர் என்பதனால் சூழ்நிலையும் சசிகலாவுக்கு சாதகமாக இருந்தது.

கட்சியின் அடிப்படை ஆவண யாப்பு பிரகாரம் சசிகலா பொதுச்செயலாளராக வரமுடியாத சட்ட சிக்கல்கள் இருந்தபோதும் பேரம்பேசல் அடிப்படையில் நிர்வாகிகள் வழிக்கு கொண்டுவரப்பட்டு கட்சியின் (தற்காலிக) பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பன்னீர்ச்செல்வத்தை முன்னிலைப்படுத்தி கட்சிக்குள் வளரவிட விரும்பாத சசிகலா தரப்பும் சில மந்திரிமார்களும் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்துவதிலும் தனிமைப்படுத்துவதிலும் குறியாக இருந்தனர்.

அடுத்ததாக பன்னீர்செல்வம் அவர்களிடமிருந்து முதலமைசர் பதவியை விடுவித்து பொதுச்செயலாளரான சசிகலா பொறுப்பேற்கவேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது,

அண்மையில் நடந்த ( சல்லிக்கட்டு) மாணவர் புரட்சி அதன் முடிவுகள் பன்னீர்செல்வத்தை நாட்டின் ஆளுமையான முதல்வராக மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தியது, பன்னீர்செல்வத்தை முன்னிலைப்படுத்துவதில் மறைமுகமாக பாஜக மத்திய அரசு திரை மறைவில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

சரியாக இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் கட்சிக்குள் உண்டான அதிகார போட்டி மற்றும் நெருக்கடி காரணமாக தற்போதய முதலமைச்சராக இருக்கும் பன்னீர்ச்செல்வம் அவர்கள் முதலமைச்சர் பதவியிலிருந்து தான் சுயமாக விடுபடுவதற்கான பதவி விலகல் கடிதத்தை தமிழ்நாடு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு அனுப்பி இருந்தார்.

முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் அவர்களின் பதவி விலகல் ஆளுனர் மாளிகையால் ஒப்புக்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

பதவி விலகல் கடிதத்தை ஆளுனருடம் சமர்ப்பித்து பதவி விலகிய முதலமைச்சர் நேற்றைய முந்தினம் மாலை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அரை மணிநேரம் தியானம் செய்து பின் பத்திரிகை ஊடகங்களை சந்தித்து தான் கட்டாயப்படுத்தப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் ஒப்பம் வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக அதிர்ச்சிகரமான வாக்குமூலம் கொடுத்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.

பன்னீர்ச்செல்வம் அவர்களின் பதவி விலகல் சட்டப்படி ஆளுனரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டுக்கான அடுத்த முதலமைச்சர் பதவி ஏற்கும்வரை காபந்து முதலமைச்சராக ஓ பன்னீர்ச்செல்வம் அவர்கள் தொடர்கின்றார்.

அதுபற்றிய செய்திகள் விவாதங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் பெரும்பாலானவர்கள் அதுபற்றிய தாற்பரீகங்களை நிச்சியம் அறிந்திருப்பார்கள் என்பதால் இந்த செய்தியை நீட்டாமல் ஒருசில முக்கியமான விடயங்களை மட்டும் பார்க்கலாம்.

இன்று 09/02/2017 டில்லியிலிருந்து திரும்பிய தமிழ்நாடு ஆளுனர் வித்யாசாகர் ராவ் மாலை ஐந்து மணியளவில் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை ஆளுனர் மாளிகையில் சந்தித்து அவரது முறைப்பாட்டை பெற்றுக்கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து மாலை ஏழு மணியளவில் சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் நூற்றுக்கணக்கான எம் எல் ஏக்களையும் சந்தித்து சசிகலாவின் பதவி ஏற்புக்கான கோரிக்கை மனுவையும் ஆளுனர் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

நாளை அல்லது இன்னும் ஒருசில நாட்களில் அடுத்த முதல்வர் யார் என்பதை ஆளுனர் வெளிப்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.

அனேகமாக பன்னீர்ச்செல்வம் முதலமைச்சர் ஆவதற்கான சந்தற்பங்கள் இல்லை என்பதே இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்பால் புரியப்படுகிறது.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டு குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட சசிகலா நீதிபதி குன்ஹாவினால் குற்றவாளி என்றும் பின்னர் நீதிபதி குமாரசாமியால் விடுவிக்கப்பட்டதுமான மேல் முறையீட்டு வழக்கு இன்னும் ஒருசில தினங்களில் பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை குறிப்பிட்ட வழக்கில் தண்டனை கிடைக்காவிட்டாலும் மத்திய அரசின் தலையீடு காரணமாக செல்வி ஜெயலலிதாவுடன் குற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரத்தை முன்னிறுத்தி ஒரு சில வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை சசிகலாவுக்கு உண்டாகலாம், அப்படி ஒரு சூழ்நிலை உண்டானால் ஒளிய இன்றைய முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதே யதார்த்தம்.

ஒருவேளை இப்போ இருக்கும் எம் எல் ஏக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சசிகலா முதலமைச்சராக ஆனாலும் பன்னீர்செல்வம் தலைமையில் போட்டி அரசியற் கட்சி உருவாகி கட்சி இரண்டாக உடையும் நிலையை சசிகலாவால் தடுத்து நிறுத்த முடியாமல் போகும் அபாயம் எதிர்நோக்கி இருக்கிறது. உதிரியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பன்னீர்செல்வத்துடன் இணையும் வாய்ப்பும் உள்ளது.

அடுத்து சசிகலா முதலமைச்சர் ஆனாலும் மத்திய பாஜக அரசுடன் அனுசரித்துப்போகவேண்டிய பல்வேறு நெருக்கடிகள் தோன்றி தமிழகத்தில் சீரான ஆட்சியை நடத்தக்கூடிய ஸ்திரத்தன்மையை மழுங்கடிக்கும் அபாயமும் உண்டு, கூடுதல் சிக்கலாக கண்கொத்தி பாம்பாக ஆட்சியை கலைப்பதற்கான தருணத்தை தோற்றுவிக்க காத்திருக்கும் திமுக தன்னாலான அனைத்து நெருக்கடிகளையும் தொடர்ந்து கொடுக்கும் அதனால் மக்கள் மத்தியில் மிகுந்த அசௌகரியங்களை சசிகலா சந்திக்கவேண்டிவரும்.

எனவே இத்துடன் அதிமுக என்ற அரசியற்கட்சி கிட்டத்தட்ட ” மாட்டறையப்படுகிறது” அதாவது முடிவுக்கு வருகிறது என்றே கொள்ள முடியும்.

ஈழதேசம் செய்திகளுக்காக,
கனகதரன்.

Related posts

Top