இலங்கையின் மோசடியும் ஜெ கொடுத்த பதிலடியும்! – புகழேந்தி தங்கராஜ்!

இலங்கையில் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தை அறிய மூத்த வழக்கறிஞர் சகோதரி மனோரி தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கு, மக்களின் கருத்தைக் காட்டி சர்வதேசத்தின் முகத்தில் கரிபூச வேண்டும் என்பதே பிரதான நோக்கம். நல்லிணக்கத்தைக் குறித்து மீண்டும் மீண்டும் பேசுவதன்மூலம் போர்க்குற்ற விசாரணையை மூடி மறைத்துவிட முடியும் – என்கிற மைத்திரி – ரணில் – சந்திரிகா கோஷ்டியின் நம்பிக்கைதான் அதற்கு அடிப்படை! அந்த மூடநம்பிக்கையைத் தகர்த்து அவர்கள் முகத்தில் கரிபூசியிருக்கிறது மனோரி குழு அறிக்கை.

“போர்க்குற்றவிசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளும் இடம்பெறவேண்டும் – என்று மனோரி குழு கருத்து தெரிவித்திருப்பது முறையல்ல! நல்லிணக்கம் தொடர்பான பொதுமக்களின் கருத்தை அறிந்து அதை அரசுக்குத் தெரிவிப்பது மட்டும்தான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை” என்று கடுப்படித்திருக்கிறார் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க. (தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கு அவர்தான் தலைவர்.)
‘போர்க்குற்ற விசாரணைகளில் உள்நாட்டு நீதிபதிகளுடன் சர்வதேச நீதிபதிகளையும் ஈடுபடுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தியதுடன் நின்றுவிடவில்லை மனோரி. ‘போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான சிறப்பு நீதிமன்ற அமர்வுகளில், ஒவ்வொரு அமர்விலும் குறைந்தது ஒரு வெளிநாட்டு நீதிபதியாவது இடம்பெற வேண்டும்’ என்று தெள்ளத்தெளிவாக வரையறுத்திருக்கிறது மனோரி குழு. வழக்கு தொடுப்பதிலும் அதுதொடர்பாக விசாரிப்பதிலும் கூட சர்வதேசத்தின் பிரதிநிதிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் – என்றும் அது வலியுறுத்தியிருக்கிறது. (இதற்குமுன்பே, முதல்வர் விக்னேஸ்வரன் இதை வலியுறுத்தியிருந்தார்.)

போர்க்குற்ற வழக்குகள் தொடர்பான புலனாய்வுகளில் தனது சொந்த புலனாய்வுப் பிரிவை இலங்கை பயன்படுத்துவது, நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும் – என்பதைச் சுட்டிக்காட்டவும் மனோரி குழு தவறவில்லை. ‘சிறப்பு நீதிமன்றங்களுக்கென்று பிரத்யேக புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும்’ என்கிறது அது.

மனோரி குழு வலியுறுத்துகிற வேறு சில அம்சங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
பாலியல் வன்முறை போன்ற கொடிய குற்றங்களில் மன்னிப்பு என்கிற பேச்சுக்கே இடமளித்துவிடக் கூடாது.
காணாது போனவர்களுக்கான அலுவலகப் பணிகளிலும், சர்வதேச பங்களிப்பு அவசியம்.
போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவிடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தப்படக் கூடாது. அந்த நினைவிடங்களில் வேறு கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டிருந்தால், அந்தப் புதிய கட்டுமானங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினரை மைத்திரிபாலா அரசு காட்டிக் கொடுக்காது’ – என்றும், ‘படையினரை விசாரிக்கலாம். ஆனால் அவர்கள் தண்டிக்கப்படக்கூடாது’ என்றும் மைத்திரியின் சகாக்கள் பேசிவருகிற நிலையில், மனோரி குழு அறிக்கை வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மனோரி குழுவின் அறிக்கை, தமிழ்ப் பிள்ளைகளான புனிதவதிகளுக்கும் இசைப்பிரியாக்களுக்கும் நியாயம் கொடுத்தே ஆகவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது. வெறிபிடித்து ஆடிய சிங்கள ராணுவப் பொறுக்கிகளைக் கூண்டில் நிறுத்தித் தண்டித்தே ஆகவேண்டும் – என்று அடித்துச் சொல்கிறது. நல்லிணக்க நாயகி சந்திரிகாவால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தமிழர் தாயகத்திலுள்ள நினைவிடங்கள் தொடர்பான மனோரி குழுவின் கருத்து, பொதுபல சேனா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்குத் தரப்பட்டிருக்கும் அதிர்ச்சி வைத்தியம். தமிழரின் பாதுகாப்பு அரண்களாகத் திகழ்ந்த மாவீரர்களுக்கு வன்னி மண்ணில் எழுப்பப்பட்டிருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களைத்தான் மனோரி குழு அறிக்கை குறிப்பிடுகிறது. சிங்களத் தீவிரவாதிகளால் இதை ஜீரணிக்கவே முடியாது.

உலகின் வேறெந்த விடுதலைப் போராட்ட வரலாற்றிலும், விடுதலை வீரர்களுக்கான நினைவிடங்கள், ஈழத்தைப் போல, விரிவான அளவில் உருவாக்கப்பட்டதில்லை. அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிற வழமையான நடைமுறைகள் இல்லை. தமிழர் தாயகத்தில் மட்டுமே அது சாத்தியமாயிற்று. அதனால்தான், நவம்பர் 27 மாவீரர் நாள் – உலக வரலாற்றில் உன்னதமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

‘மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுமதிக்கவே கூடாது’ – என்கிற குரல், கார்த்திகை நெருங்கும்முன்பே கொழும்பிலிருந்து ஒலிப்பது வழக்கம். ‘கொட்டியா’ என்கிற ஒற்றை வார்த்தையைப் போலவே, சிங்களத் தலைவர்களையும் பௌத்த தேரர்களையும் நடுங்க வைக்கிறது – ‘மாவீரர் நாள்’ – என்கிற வார்த்தை. அவர்களது எதிர்ப்புக்கும், ராணுவ முற்றுகைக்கும் இடையில்தான், 2016 நவம்பர் 27ம் தேதி, தமிழர் தாயகமெங்கும், மாவீரர் நாள் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் கண்கலங்கக் கூடினர். அது, ஒட்டுமொத்த இலங்கையையும் உலுக்கியது.

இப்படியொரு நிலையில், ‘நினைவுச் சின்னங்கள் மீது கை வைக்காதே’ – என்று மனோரி குழு குரல் கொடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மனோரி குழுவின் அறிக்கையை எதிர்ப்பதன் மூலம் ‘நல்லிணக்கத்துக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை’ என்று நல்லிணக்க நாயகி சந்திரிகா தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டிருப்பது அதைக்காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

“பேச இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அப்பாவி மக்களின் குரலாக எங்கள் குரல் ஒலிக்கும், அவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும்” என்று திருமதி.மனோரி மனந்திறந்து குறிப்பிட்டிருப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும். இப்படியெல்லாம் மனசாட்சியுடன் பேசுபவர்கள் மிக மிகச் சிறுபான்மையினராகவும், சந்திரிகா மாதிரி மனசாட்சியில்லாமல் பேசுபவர்களே பெரும்பான்மையினராகவும் இருப்பதுதான் இலங்கைத் தீவின் துரதிர்ஷ்டம்.

போர்க்குற்றமாவது விசாரணையாவது – என்று மனோரி குழுவைச் சாடுகிற மைத்திரியின் முகமாக சந்திரிகாவின் முகம் இருக்கிற நிலையில், சர்வதேசத்தை ஏமாற்றி மோசடி செய்கிற மைத்திரியின் முகமாக நீடிக்கிறது, வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீராவின் முகம்.

‘விசாரணையெல்லாம் கிடையவே கிடையாது’ என்று பேசி சந்திரிகா வாய் மூடுவதற்குள் – “போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்க மாட்டோம்….. அதேசமயம் அந்த விசாரணைகளைத் தொடங்க அவகாசம் கேட்போம்” என்கிற பழைய புளிசாத மூட்டையை மீண்டும் பிரிக்கிறார் மங்கள சமரவீரா. அடிக்கிற துர்வாடையில் எந்த நாடும் இலங்கையின் பக்கம் நிற்கவே முடியாத நிலை.

இதற்குப் பிறகும், மூக்கைப் பிடித்துக் கொண்டு இந்தியா அதனருகிலேயே நின்றுகொண்டிருக்குமா என்பது தெரியவில்லை. அப்படி நின்றால், இதற்குப் பிறகுமா இந்தியாவுடன் நிற்கப் போகிறோம் – என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்கவே முடியாது.

விசாரணையாவது வெங்காயமாவது, வாயை மூடு – என்கிறார் சந்திரிகா. ‘வாய்தா கொடு’ என்கிற பழைய பெட்டிஷனையே மீண்டும் ஜெராக்ஸ் எடுத்து நீட்டுகிறார், மங்கள. சந்திரிகா வைத்திருப்பது, உடனடியாகக் கழுத்தறுக்கும் கத்தி. மங்கள பயன்படுத்துவது நம்பவைத்துக் கழுத்தறுக்கிற உத்தி. இது, நியாயத்தையும் நீதியையும் மெல்ல மெல்லக் கொல்லுகிற விஷம். இரண்டில் எது வேண்டும் என்று நம்மைப்பார்த்துக் கேட்கிறது இலங்கை.

‘போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணை நடக்கும், அது நல்லிணக்கத்தின் முதல்படியாக இருக்கும்’ என்று பேசியவர் மைத்திரி தான்! நாம் அதை நம்பியது தவறில்லை. ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதிக்கு நேர்மாறாக அவர் பேச ஆரம்பித்தபோது கேள்வி எழுப்பாததுதான், நமது முதல் பிழை.

‘மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கையை விடுவிக்க அமெரிக்கா அழுத்தம் தரவேண்டும்’ என்று டிரம்புக்கு மைத்திரி வேண்டுகோள் விடுத்த போதாவது, ‘நீ இலங்கை அதிபரா, ராஜபக்சவின் ஏஜென்டா’ என்று நாம் கேட்டிருக்க வேண்டும். அப்படிக் கேட்காததன் விளைவுதான், சந்திரிகாவின் அதிரடியும், மங்களவின் மோசடியும்!

என்ன நடந்தாலும் சரி, மகிந்த மிருகத்தைப் பாதுகாத்தேயாக வேண்டும் என்பதில் ரணில் – மைத்திரி – சந்திரிகா மூவரும் உறுதியாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம், மகிந்தன் மீதான பாசமோ மரியாதையோ அல்ல! ஒருபாதி, சிங்கள இனவெறி. இன்னொரு பாதி, ராணுவத்தின் மீதும் பௌத்த சிங்கள வெறியர்கள் மீதும் அவர்களுக்கு இருக்கிற இயல்பான அச்சம்.

இனப்படுகொலையில் நேரடியாகத் தொடர்புடைய ராணுவத்தினரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அது பல்லாயிரக் கணக்கில் இருக்கலாம். கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடாத படையினர் மிக மிகக் குறைவு. இது, மைத்ரி கோஷ்டிக்குத் தெரியும். போரின் பெயரால் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும், தமிழ்ப் பெண்கள் சிதைத்துச் சீரழிக்கப்பட்டதும் தெரியும். மகிந்தன் மீது சர்வதேச விசாரணை பாய்ந்தால், அடுத்ததாக அது ராணுவத்தின்மீதுதான் பாயும் என்பதும் தெரியும். அப்படிப் பாய்ந்தால், ஒட்டுமொத்த ராணுவமும் தங்கள் பக்கம் திரும்பும் என்பதும் தெரியும். அப்படியொரு விஷப்பரீட்சைக்கு அவர்கள் தயாரில்லை.

இப்படியொரு நிலையில், முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபையைப் போலவே, தமிழக அரசும் நிலையில் திரியாது நின்றாக வேண்டும். 2011ல் “இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்” என்று சகோதரி ஜெயலலிதா எடுத்த நிலை, 2009ல் தி.மு.க.அரசு செய்த பச்சைத் துரோகத்துக்குப் பிராயச்சித்தமாகவும், சர்வதேச அரங்கில் இலங்கை செய்த பொய்ப்பிரச்சாரத்துக்குப் பதிலடியாகவும் இருந்தது. ‘இலங்கையை நட்பு நாடு என்று சொல்லாதே’ என்று இந்திய அரசையே வலியுறுத்தினார் ஜெ.

2016 ஏப்ரலில் திருச்சி பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா செய்த பிரகடனம், அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. சர்வதேச நீதி கேட்டதுடன் அவர் நின்றுவிடவில்லை. “இலங்கையில் தமிழர்கள் சுய கௌரவத்துடனும் வாழ தனித் தமிழீழம்தான் ஒரே வழி. தமிழீழம் அமையத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்” என்று அந்தக் கூட்டத்தில் ஜெ அறிவித்தார்.

அம்மாவின் கனவுகளை முழுமையாக நிறைவேற்றுவோம், அம்மாவின் வழியில்தான் ஆட்சி செயல்படும் – என்றெல்லாம் இன்று போட்டிபோட்டுக்கொண்டு அறிவிப்பவர்கள் யாராக இருந்தாலும், சகோதரி ஜெ. சொன்ன வார்த்தைகளைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா.மனித உரிமைகள் பேரவை நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்க வேண்டும்.

சுஷ்மா சுவராஜ் பதவியில் இருக்கிற வரை, இலங்கையைக் காப்பாற்றுகிற தேவையற்ற வேலையைத் தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டு திரிவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வாய்ப்பில்லை. மகிந்த ராஜபக்சவைத் தேடிப்போய்ப் பரிசுப் பொருளைப் பெற்றுக்கொண்ட நேர்மையற்ற சகோதரி சுஷ்மா. அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக நீடிக்கிற நிலையில், ‘குற்றவாளி இலங்கைக்குத் துணைபோகாதே’ என்று இந்திய அரசை முழுமூச்சோடு வலியுறுத்த வேண்டியது மிகமிக முக்கியம்.

‘இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை – என்கிற ஒருவரித் தீர்மானத்தை ஜெனிவாவில் இந்தியாவே கொண்டுவரவேண்டும்’ என்று 3 ஆண்டுகளுக்கு முன் மாநிலங்களவையில் அ.தி.மு.க. வலியுறுத்தியதை நாம் மறக்க முடியாது. மீண்டும் அதே நிலையை அ.தி.மு.க. எடுக்க வேண்டும். அப்படியொரு நிலையை, தி.மு.க. கூட எதிர்க்கப் போவதில்லை.

தமிழகத்தின் மிக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மூலம், இலங்கை அரசு தவறான செய்திகளைத் தமிழகத்தில் பரப்பிவருகிறது. ‘மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை உள்நாட்டு விசாரணையாகவே இருக்கலாம் என்கிற கருத்தொற்றுமை இலங்கையில் ஏற்பட்டு விட்டது’ என்று கூசாமல் புளுகுகிறார்கள் அவர்கள். அது பச்சைப் பொய்.

புலம்பெயர் நாடுகளில் மட்டுமல்ல, தமிழர் தாயகத்திலும் எங்கள் தொப்புள் கொடி உறவுகள், ‘இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை’ என்றுதான் முழங்குகிறார்கள். சுற்றிலும் ராணுவம் முற்றுகையிட்டிருக்கும் நிலையிலும் சர்வதேச நீதிக்கான குரலை வலுப்படுத்தத்தான் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் திரள்கிறார்கள் இளைஞர்களும் மாணவர்களும்!

‘நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி பெற முடியும்’ என்பது ஜெயலலிதா மற்றும் விக்னேஸ்வரனின் குரல். கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளுக்கு நீதி கேட்கும் எமது தாயக மக்களின் குரல். தமிழகம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை மூலம், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் என்பது அம்பலமாக வாய்ப்பிருக்கிறது. எனவே, ‘ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதியை இலங்கை நிறைவேற்றத் தயங்குவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்’ – என்று மத்திய அரசை இப்போதே தமிழகம் கேட்க வேண்டும். யார் முதல்வர் – என்பதைக் காட்டிலும், ஜெயலலிதாவின் குரலை அவர் எதிரொலிக்கப் போகிறாரா இல்லையா என்பதுதான் முக்கியம்.

ஜெயலலிதாவுக்குப் பின்னான அரசியல் குழப்பத்தில், அ.தி.மு.க. அரசு கவிழ்ந்து, மீண்டும் தேர்தல் நடந்தாலும் பிரச்சினையில்லை. அடுத்து ஆட்சிக்கு வருவது யாராக இருந்தாலும், ‘இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி தேவை’ என்று ஜெயலலிதா கிழித்த கோட்டில்தான் அவர்கள் நிற்க வேண்டியிருக்கும்.

ஒன்றரை லட்சம் உறவுகள் உயிரிழக்கக் காரணமாக இருந்த தனது துரோகத்தை மூடிமறைக்கத்தான், ‘போர்க்குற்றம்’ என்கிற வார்த்தையை வழிமொழிந்தது தி.மு.க.! அந்தப் போலி வார்த்தை மீண்டும் மனையில் ஏறி அமர்ந்துவிடக் கூடாது. யார் முதல்வர், எது ஆளும் கட்சி என்பதெல்லாம் முக்கியமில்லை நமக்கு! நடந்தது இனப்படுகொலை – என்கிற உண்மைதான் முக்கியம். உரத்த குரலில் அதைப் பேசியாக வேண்டும்.

மகிந்த ராஜபக்ச என்கிற கொலைகாரனைக் காப்பாற்ற. ரணில் – மைத்திரி – சந்திரிகா என்கிற வித்தியாசமெல்லாம் இல்லாமல் ஒட்டுமொத்த சிங்கள இனமும் ஒன்றுபட்டு நிற்கிறது. ‘கொலைக்குற்றவாளி ஒரு சிங்கள பௌத்தன்’ என்பதுதான் அதற்குக் காரணம்! ஒரு கொலைகாரனைக் காப்பாற்ற, அரசியல் விரோதத்தையெல்லாம் மறந்து, அவன் சார்ந்த சமூகம் ஒன்றுபட்டு நிற்க முடியுமென்றால், கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளுக்கு நீதி கேட்பதற்காக நாம் ஒரே குரலில் பேசமுடியாதா? நீதி கொடு, அதைக் கொடுக்க முடியாவிட்டால் நாடு கொடு என்று கேட்க முடியாதா?

Related posts

Top