சசிகலா பன்னீர்செல்வம் + ஜெயலலிதா.

கிட்டத்தட்ட இருபது வருடங்கள் அரசியற் தலையீடுகளாலும், மிகப்பெரிய ஓட்டைகள் நிறைந்த இந்திய ஊழல் புரையோடி செத்துப்போன நீதித்துறையின் இயலாமையாலும் இழுத்தடிக்கப்பட்டுவந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா குழுமத்துக்கு எதிரான சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கு பெப்,14 ,2017 அன்று சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்று அறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த வழக்கு இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்திருக்கும் என்றோ, அல்லது தீர்ப்பின் தன்மை இப்படி கடுமையாக இருந்திருக்கும் என்றோ எவரும் முடிவுக்கு வர முடியாது. அப்படி நடந்திருக்கவும் வாய்ப்பில்லை.

தற்போதய பாரதிய ஜனதா கட்சியின் எம்பியும் முன்னாள் ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்த சுப்பிரமணியம் சுவாமி அப்போதைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று ஜூன் 14,1996 ல் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு சம்பந்தமான முறைப்பாட்டு மனுவைத்தாக்கல் செய்திருந்தார்.

கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் முதுகெலும்பற்ற ஊழல் நீதி நிர்வாகத்தாலும் பல்வேறு அரசியற் தலையீடுகளாலும் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு 2014 செப் 27 ம் நாள் நீதிபதி குன்ஹாவினால் ஜெயலலிதா மற்றும் சசிகலா குழுவினர் குற்றவாளிகள் என குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தியாவிலுள்ள நீதித்துறையின் சகல ஓட்டைகளின் உதவியுடன் அரசியற் தலையீடுகளும் சேர்ந்து மீண்டும் வழக்கு அப்பீல் செய்யப்பட்டு குமாரசாமி என்ற ஜோக்கரின் பார்வைக்கு வழக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேல் முறையீட்டில் நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை எனக்கூறி ஜெயலலிதா உட்பட அனைவரும் அப்பழுக்கற்ற நிரபராதிகள் என பிரகடனப்படுத்தப்பட்டு உடனடியாக விடுதலை செய்யப்படனர்.

இருபது வருடங்களாக பல்வேறு அரசியற் பின்னணியின் உதவியுடன் இழுக்கப்பட்டுவந்து தரித்து நின்ற கோவில் சகடை போன்ற ஒரு வழக்கை, மற்றுமோர் அரசியல் உள் நோக்க முகாந்திரங்கள் உந்தி தள்ள, 23 ஜூன் 2015 கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, கர்நாடக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது

16 யூலை 2015 ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு
27 ஜூலை 2015 கர்நாடக அரசு மற்றும் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உறுதிசெய்தது.

மத்திய சர்க்காருக்கு அடிபணிய மறுக்கும் ஜெயலலிதா போன்ற தலைமைகளை மிரட்டி பணியவைப்பதற்கான உள் நோக்கங்களுடன் கூடிய பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வழக்கை முடிவுக்கு கொண்டுவராமல் தொடர்ந்து இன்னும் பல பத்து ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன் மத்திய சர்க்கார் கர்நாடக அரசின் மூலம் மீண்டும் வழக்கை விசாரிக்கவேண்டும் என்று நிர்ப்பந்தித்ததன் காரணமாக மீண்டும் வேறு நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட வைத்து விசாரணை தொடர்ந்தது.

சென்ற ஆண்டு ஜெயலலிதாவின் திடீர் உடல்நலக்குறைவு, தொடர் சிகிச்சை ஜெயலலிதா மீண்டு வரமாட்டார் என்பதற்கான சமிக்கையுடன் கூடிய மருத்துவ அறிக்கைகள், அரச புலனாய்வு தகவல்கள் ஆகிய பகுப்பாய்வின் அடிப்படை , தமிழகத்தில் உண்டான அரசியல் ஈடாட்டம் இவைகளை பயன்படுத்தி தலையாட்டி பொம்மை போன்ற ஓ பன்னீர்செல்வத்தை பயன்படுத்த ஆளுனர் மூலம் மத்திய அரசு காய்களை நகர்த்தியது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மத்திய சர்க்கார் எதிர்பார்த்ததுபோல டிச 05/2016 கெடுவாய்ப்பாக ஜெயலலிதா காலமானார்.

சாவீடு முடிந்தால் சசிகலா சுதாகரித்துக்கொள்வார் என்ற தந்தர அடிப்படையில் ஜெயலலிதா மரணமான அன்று இரவே ஐந்து நிமிட இடைவெளிக்கும் இடமளிக்காமல் ஓ பன்னீர்ச்செல்வம் ஆளுனர்முன் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டார்.

ஓ பன்னீர்செல்வம் முன்னரும் இரண்டுமுறை ஜெயலலிதாவால் முதலமைச்சராக பொறுப்பில் வைக்கப்பட்டவர் என்ற தகுதி காரணமாக மக்கள் மன்றத்திலும் கட்சிக்குள்ளும் உடனடியாக எவரும் எதிர்வினையாற்ற முன் வரவில்லை.

பன்னீர்செல்வம் முதலமைச்சராக தொடர்ந்தால், நாளடைவில் பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துவிடும் முதலமைச்சர் பதவியை திரும்ப பெற முயற்சிக்கும்போது பல்வேறு விமர்சனங்களை சந்திக்கவேண்டி வரும் என்ற கணக்குகள் அடிப்படையில் சசிகலா தரப்பு காய்களை நகர்த்தியது.

முக்கிய சில அமைச்சர்களை வைத்து சசிகலா முதலமைச்சராகவேண்டும் என்று முன்னிலைப்படுத்தப்பட்டது. இருந்தும் பன்னீர்செல்வம் அவர்கள் வர்தா புயல் நடவடிக்கையின்போதும் சல்லிக்கட்டு புரட்சியின்போதும் செவ்வனவே சேவையாற்றியதாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பஜகவின் மத்திய அரசும் பின்னணியில் நின்று பன்னீர்செல்வத்துக்கு உதவியாக பெரும் பங்கை ஆற்றியது.

தொடர்ந்து 31 டிச 2016 அன்று சசிகலா அதிமு கழகத்தின் பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து பிப்ரவரி 5/2017 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டது கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அன்றே பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவியை சுய விருப்ப அடிப்படையில் ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி ஒப்பமிட்டு கொடுத்துவிட்டு சிரித்த முகத்துடன் விடைபெற்று சென்றார்.

சசிகலாவை சட்டமன்ற குழுத்தலைவராக முன் மொழிந்தவரே முதலமைச்சராக இருந்த திருவாளர் ஓ பன்னீர்செல்வம் என்பது கூடிய தகவல்.

இன்னும் ஒரு சில நாட்களில் சசிகலா முதலமைச்சராக பதவியேற்கப்போகிறார் என்ற தகவல் மத்திய அரசுக்கு ஒப்புதலாக இருக்கவில்லை.

இடையில் பன்னீர்செல்வத்திற்கும் பாஜகவுக்கும் இடையில் உள்ளூர என்ன நடந்தது என்பது வெளிவராவிட்டாலும், 07/02/2017 மாலை ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்ற முதலமைச்சர் பன்னீர்செல்வம் அரைமணி நேரம் ஜெயலலிதாவின் சமாதியின் வாசலில் தவநிலையில் இருந்து தியானம் செய்து செய்தியாளர்களை சந்தித்தார்.

தான் நிர்ப்பந்திக்கப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் ஒப்பமிட்டதாகவும் மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெற இருப்பதாகவும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார் அந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது.

ஏழம் திகதி இரவு முழுவதும் பன்னீர்செல்வம் உறக்கத்துக்கு செல்லவில்லை, தொடர்ந்து இரவிரவாக மூன்று நான்கு தொலைக்காட்சிகளுக்கு தனது உள்ளக்கிடக்கையை நேர்காணல் வழியாக மக்கள் பார்வைக்கு வழங்கியிருந்தார். இது சசிகலா தரப்பிற்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.

ஆளுனரும் மத்திய அரசும் ஆமை வேகத்தில் அனைத்து இயந்திரங்களையும் இயக்கி ஓடவிட்டு எப்படியான அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றுவது என்று காத்திருந்து. ஆளுனர் மூலம் உடனடியான ஆட்ட களம் நிறுத்தப்பட்டு காலதாமதமும் செய்யப்பட்டது.

அதை அடுத்து பெங்களூர் நீதிமன்றத்தின் மூலம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு 14/02/2017 ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்டது. நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை அப்படியே மேற்கோள் காட்டி ஜெயலலிதா உட்பட நால்வரும் குற்றவாளிகளே என்று அறுதி தீர்ப்பு வழங்கப்பட்டு சசிகலாவுக்கு ஷெக் வைக்கப்பட்டது.

சசிகலா, இளவரசி, சுதாகரன், மூவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும் மூவரும் தலா 10 கோடி ரூபாய்களை தண்டமாக செலுத்தவேண்டும் என்றும் ஜெயலலிதா இறந்துபோனதால் ஜெயலலிதாவை சிறை தண்டனையில் இணைக்க முடியாது என்றும் ஜெயலலிதாவின் தண்டப்பணம் 100 கோடி ரூபாக்களை அவரது சொத்துகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் என்றும் தீர்ப்பு கூறுகிறது.

கடந்த 15/2/2017 மாலை ஐந்து மணியளவில் சசிகலாவும் இளவரசியும் பரப்பன அக்ரஹார சிறைச்சாலை நிர்வாகத்திடம் சரணடைந்திருக்கின்றனர்.

இந்த நிலையிலும் ஏதாவது தில்லாலங்கடி வேலைசெய்து சிறையில் இருந்து விரைவில் வெளியே வரலாம் என்ற நோக்கோடு டில்லி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தம்பித்துரை கூறியிருக்கிறார்.

சிறைக்கு போவதற்கு முன்பதாக சசிகலாதரப்பு எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழுத்தலைவராக நியமித்து முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்திருக்கிறது, அடுத்து ஜெயலலிதாவால் கட்சி அடிப்படை உறுப்புரிமை பறிக்கப்பட்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாவின் அக்கா மகன் தினகரனை அதிமுக கட்சியின் உப பொதுச்செயலாளராகவும் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது.

கூவத்தூர் ரிசார்ட் இப்போ தினகரனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இத்துப்போன இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நாட்டின் சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளவோ, மக்கள் மனநிலைகளை கவனத்தில் கொள்ளவோ தேவையில்லை எம் எல் ஏக்களின் தொகை அடிப்படை மட்டுமே கருத்தில்க்கொண்டு முதலமைச்சர் பதவியை பிரமாணம் செய்யவேண்டும் என்று ஊடகங்கள் வர்ணனை செய்தன.

அதில் ஒரு நியாயம் இருப்பதாகவே பொதுப்புத்தியும் ஏற்றுக்கொள்ளுவதாக அமைந்திருக்கிறது.

பன்னீர்செல்வத்துக்கு நாட்டு மக்களின் ஆதரவு அதிகம் இருப்பது வெள்ளிடை மலையாக தெரிந்தாலும் அவரது பக்கம் எம் எல் ஏக்கள் அதிகம் இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தும் ஆமை வேகத்தில் இவ்வளவு சிகிச்சையையும் செய்துமுடித்த மத்திய அரசு உடனடியாக ஏடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக பிரகடனப்படுத்த ஆளுனருக்கு சமிக்ஞை கொடுத்துள்ளது.

மறைமுகமாக ஒரு நகைப்புக்குரிய விடயத்தை இதுவரை எவரும் கவனத்தில்க்கொண்டதாக தெரியவில்லை. அது என்னவென்றால் புரட்சித்தலைவி மாண்புமிகு இதய தெய்வம் அம்மா என்று கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அதிமுகவின் பிரதானிகள், அதே இதய தெய்வம் அம்மா அவர்கள் இந்திய நீதித்துறையினால் 14/02/2017 அன்று ஊழல் வழக்கில் குற்றவாளியாக பகிரங்கமாக தண்டிக்கப்பட்டவர் என்பதை இன்னும் உணராதவர்களாகவே இருக்கின்றனர்.

15/02/2017 புதியதலைமுறையின் புதுப்புது அர்த்தங்கள் விவாத அரங்கத்தில் பங்குபற்றிய ஆவடிகுமார் என்பவர் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மாமீது பொய் வழக்குப்போட்டு குற்றம் சுமத்தியுள்ளார்கள் என்பது போலவும், மறுபுறத்தே உண்மையான ஊழல் குற்றவாளி ஜெயலலிதா என்று நீதிமன்றம் தீர்வுக்கு வருமானால் உடனிருந்த குற்றத்திற்காக சின்னம்மாவும் சிக்கி வீணான சிரமத்துக்குள்ளாகி சிறைக்கு போய்விட்டதுபோலவும் மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிரான துரோகத்தனமான ஒரு கருத்தை வெளிப்படுத்தினார்.

இப்படியான அபாயகரமான சுயநலவாதிகள்தான் இன்றைய திராவிட துதிபாடும் அரசியலில் ஒட்டுண்ணியாக இருக்கிறார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மையாக இருக்கிறது.

நாளை இந்த விடயம் ஆகப்பெரிய ஊழல் கட்சியான திராவிடமுன்னேற்ற கழகத்தினரால் விமர்சிக்கப்படும்போது சசிகலா தரப்பு ஜெயலலிதாதான் குற்றவாளி என்றும், பன்னீர்செல்வம் தரப்பு சசிகலாவால்த்தான் ஜெயலலிதா குற்றவாளியானார் என்றும், ஒரு சுழற்சியில் பழிசுமத்தும் என்பதும், மக்கள் வழமைபோல் தமது குலதெய்வங்களான தலைவர்களை அரசியல்வாதிகளும் நீதிமன்றங்களும் அவமானப்படுத்திவிட்டதாக கண்ணீர்விட்டு அப்பாவித்தனமாக தமது தலைமையின் வழிபாட்டை தொடருவர்.

அண்ணாவின் பெயரை சொல்லி கருணாநிதியும், எம்ஜீ ஆரின் பெயரை சொல்லி ஜெயலலிதாவும் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி சசிகலா பன்னீர் செல்வங்களும் வாழ்வாங்கே வாழ்வர் அப்படி பயன்படுத்தக்கூடிய தந்தரவாதி ஒருவர்தான் தமிழ்நாட்டு அரசியலில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்பது தவிர வேறு எதுவும் இந்திய அரசியலில் நிகழப்போவதில்லை.

ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

Related posts

Top