நினைவழியாமல் நிலைத்து நிற்பவர் திரு சாந்தன் அவர்கள்.

ஈழத்து பாடகர் சாந்தன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி உலகில் உள்ள ஈழத்தமிழர்கள் எல்லோரையும் வருத்துவதுபோல எனக்கும் மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எல்லோரும் வேண்டி விரும்புவதுபோல அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக.

நடந்து முடிந்த நினைவுகள் எல்லாமே நேற்று நடந்தவைபோல, கவலையுடன் மிகவும் பசுமையாகவும் கலவையாக மனதில் நிழலாடுகின்றன.

1989 ல் இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்டபின், விடுதலைபுலிகள் இயக்கம் பரவலாக நிர்வாக கட்டமைப்புக்களை கிளிநொச்சியில் தொடங்கிய நேரம்.

தமிழ்நாட்டின் பிரபல பாடகர்களால் பாடப்பட்ட களத்தில் கேட்கும் கானங்கள் பாடல் பதிவுக்குபின் ஈழத்தில் உள்ள கலைஞர்களை வைத்து தமிழ் தேசிய புரட்சி பாடல்களை பதிவுசெய்தால் நல்லது என்று தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அப்போது விரும்பியிருந்தார்.

அந்த விருப்பத்தின் அடிப்படையில் புதுவை அண்ணன் சில ஆயத்தங்களை செய்தார். அந்த முயற்சியில் பிறந்தது “இந்தமண் எங்களின் சொந்தமண்” பாடல் தொகுப்பு.

பாடல் பதிவுக்கு தயாரிப்பு புதுவை அண்ணன் தயாரானபோது யாழ் கோட்டைக்குள் இருந்த இலங்கை இராணுவம் புலிகளால் முற்றுகைக்குட்படுத்தப்பட்டு மிகவும் இறுக்கமாக இருந்த நேரம் தெருவில் யாரும் தலைகாட்டமுடியாத விமான கண்காணிப்பு.

ஹெலிகொப்ரர்களின் கண்மூடித்தனமாக கலிபர் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்க சியாமா செற்றி என்னும் இத்தாலிய விமானங்களும், அவ்ரோ சகடை விமானங்களும் சரமாரியாக குண்டுகளை போட்டுக்கொண்டிருந்தன தானியங்கி கண்காணிப்பு வேவு விமானங்கள் இடைவிடாமல் பறந்துகொண்டிருந்த நேரம்.

நான் கிளிநொச்சியில் பிறந்தவன் என்பதால் சாந்தன் அவர்கள் எனக்கு கொஞ்சம் அறிமுகம் என்ற அளவுக்கு இருந்தார். ஒருசில சந்தற்பங்களில் சாந்தன் என்னுடன் பேசும் சந்தற்பம் கிடைத்தது.

போராட்டகாலம் என்பதால் மக்கள் பொரளாதார சிரமங்களில் இருந்த நேரம் சாந்தனும் அதற்குள் அகப்பட்டிருந்தார்.

கோவில் கச்சேரி நிகழ்வுகளில் சாந்தன் அவர்கள் பாடிய பாடல்களை கேட்ட நான் அவரது நிலமையையும் கருத்தில்க்கொண்டு சாந்தனை புதுவை அண்ணன் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அதன்பின்னர் சாந்தன் சில பாடல்களை புதுவை அண்ணருக்கு பாடி காண்பித்தார்.

அப்போ புதுவை அண்ணர் கூறிய ஒரு வசனம் இன்றும் எனக்கு நினைவில் நிற்கிறது.

“உனது குரல் உலகம் முழுவதும் ஒருநாள் ஒலிக்கும்” பொறுத்திரு என்று சொல்லியிருந்தார்.

அதன் பின்னர் சாந்தனை வைத்து “இந்தமண் எங்களின் சொந்தமண்” பாடலை பதிவுசெய்ய புதுவை அண்ணன் விரும்பினார்.

என்னுடன் அதுபற்றி புதுவை அண்ணர் கலந்து பேசினார். ஒரு சில மாதங்களின் பின்னர் ஒலிப்பதிவுக்கு நாள் குறிக்கப்பட்டது.

பாடல் ஒலிப்பதிவுபற்றி கலை பண்பாட்டு கழகத்தின் பொறுப்பாளர் மூலம் சாந்தன் அவர்களுக்கு முன்னரே தெரியப்படுத்தப்பட்டிருத்தது என்று நினைக்கிறேன். ஆனால் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் சாந்தன் ஒலிப்பதிவுக்கு சென்று சேர்ந்திருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்வு என்றால் இரண்டு நாட்களின் முன்னர் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு சென்றால் மட்டுமே சென்று சேர்ந்ததாக உறுதிப்படுத்தக்கூடிய காலம் அப்போ இருந்தது.

சாந்தனை தவிர மற்றய கலைஞர்கள் எல்லோரும் யாழ்ப்பாண குடாவுக்குள் இருந்தனர். சாந்தன் மட்டும் கிளிநொச்சியில் இருந்தார்.

சாந்தன் வந்து சேரவில்லையென்றால். பொன் சுந்தரலிங்கம், தவிர இன்னும் ஒரு இளம் பாடகர் இருந்தார் அவரது பெயர் எனக்கு இப்போ ஞாபகத்தில் இல்லை, அவர்களை வைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருந்தும் புதுவை அண்ணருக்கு திருப்தி ஏற்பட்டிருக்கவில்லை போலும்
திடீரென புதுவை அண்ணரின் மெய்ப்பாதுகாவலர் நல்லதம்பி என்னிடம் வந்து புதுவை அண்ணர் என்னை அழைப்பதாக தகவல் சொன்னார்,

நான் அப்போ தென்மராட்சி மீசாலை என்ற இடத்தில் இருந்தேன்.

அன்று புதுவை அண்ணரை கோண்டாவில் செயலகத்தில் போய் சந்தித்தேன்.
நாளைய மறுநாள் பாடல் ஒலிப்பதிவு என்றும், நாளை சாந்தனை கூட்டிவரவேண்டும் உடனேயே போகும்படி கூறி நல்ல ஒரு மோட்டர் பைக்கும் எனக்கு மாற்றி தரப்பட்டது.

அப்போ இயக்கத்தின் முக்கிய தளபதிகள் தவிர மற்ற வாகன பாவனையாளர்களுக்கு எவருக்கும் பெற்றோல் கிடைக்காது, எரிபொருளாக மண்ணெண்ணைதான் அதிகமாக பாவனையிலிருந்த நேரம்,

மண்ணெண்ணையை எரிபொருளாக கொண்ட வாகனங்கள் பொறுத்த நேரத்தில் ஸ்ராட் பண்ணமுடியாது என்பதால் பெற்றோலுக்கு இணையாக எனது மோட்டர் பைக்குக்கு புல் ட்ராங்க் ரின்னர் நிரப்பி தந்தனர்,

உடனேயே புறப்பட்டு நான் கிளிநொச்சி சென்றடைந்து அன்று மாலை நேரம் கிளிநொச்சி நகருக்கு தென்பகுதியில் அமைந்திருந்த பாரதிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் விசாரித்தேன், சாந்தன் வீட்டில் இல்லை வெளியே போய்விட்டதாக கூறினார்கள்.

நான் வந்த விடயத்தையும் தகவலையும் தெரிவிக்கும்படி சொல்லி சாந்தன் அவர்களை குறிப்பிட்ட ஒரு இடத்தில் காலையில் வந்து என்னை சந்திக்கும்படி சொல்லிவிட்டு திரும்பினேன்.

காலை சாந்தன் வரவில்லை மீண்டும் சாந்தன் வீட்டுக்கு போனேன் முதல்நாள் இரவே அவர் வட்டக்கச்சிக்கு சென்றுவிட்டார் என்று அவரது மனைவி கூறினார்.

அவர் தங்கியிருக்கக்கூடிய விலாசத்தை கேட்டு வாங்கிக்கொண்டு வட்டக்கச்சிக்கு போனேன் குறிப்பிட்ட வீட்டில் சாந்தனின் தாயார் இருந்ததாக நினைவு, சாந்தன் அங்கே இல்லை. அந்த வீட்டில் இருந்தவர்கள் இன்னும் ஒரு முகவரியை கூறி அங்கே போய் பார்க்கும்படி கூறினார்கள்

நேரம் காலை பத்து பதினொரு மணியளவில் இருந்தது.

அங்கு போய் சாந்தனை சந்தித்தேன் அவருக்கு உடனடியாக புறப்படக்கூடிய சூழல் இருக்கவில்லை இருந்தும் நான் விடயத்தை விளங்கப்படுத்தி அவரது சில சிக்கல்களை தீர்த்து மாலை இரண்டுமணியளவில் சாந்தனை அழைத்துக்கொண்டு பூனகரி வாடியடி வழியாக இரவு ஏழு மணியளவில் யாழ்ப்பாணம் சென்று சேர்ந்தோம்.

அன்று மாலை ஐந்துமணியளவில் கோண்டாவில் கலைபண்பாட்டுக்கழகத்தின் அலுவலக வாசலில் அவ்றோ சகடை விமானத்தால் போடப்பட்ட ஆள் உயரக் குண்டு வெடிக்காமல் கிடந்தது.

கோட்டையிலிருந்து இயக்கத்தின் நிலைகளை நோக்கி இராணுவம் ஆட்லெறி ஷெல்களை சரமாரியாக ஏவிக்கொண்டிருந்தது, சாந்தன் சற்று பயந்து காணப்பட்டார்.

புதுவை அண்ணர் மற்றும் தேவர் அண்ணர், இன்னும் சில போராளிகள் கோண்டாவில் கலை பண்பாட்டு கழக அலுவலகத்தில் இருந்தனர், ஒரு மாடி காட்டடம் கீழே சுரங்க அறை ஒன்று இருந்தது அந்த அறைக்குள் சாந்தனை படுக்கை வைத்து குண்டு சத்தம் கேட்காமலிருக்க ஒரு வோக்மன் றைக்கோடர் கொடுக்கப்பட்டது.

மறுநாள் காலை கலைஞர்கள் அனைவரையும் கொண்டுவந்து சேர்த்து கோண்டாவிலுக்கு அருகாமையில் அமைந்திருந்த சுதுமலை என்ற இடத்தில் உள்ள ஒரு ஆட்கள் இல்லாத வீட்டில் ஒலிப்பதிவு நடந்தது.

இசையமைப்பாளர் கண்ணன், ஒலிப்பதிவாளர் நித்தி அண்ணன், பாடகர் பொன் சுந்தரலிங்கம் வீணை காயத்திரி இன்னும் பல வயலினிஸ்ட்டுக்கள் அழைத்துவரப்பட்டு றைகோடிங் நடந்தது.

இந்தமண் எங்களின் சொந்தமண் என்பதுதான் இசை நாடாவின் தலைப்பாக இருந்தாலும் பொன் சுந்தரலிங்கம் அவர்களுக்கு மரியாதை கௌரவம் கொடுக்கும் விதமாக ” வேரோடி மண்ணில் விளைகின்ற பொருளே” என்ற பாடலை முதலாவதாக பொன் சுந்தரலிங்கம் அவர்களின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு முடித்து இரண்டாவது பாடலாக “இந்தமண் எங்களின் சொந்தமண் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

அப்போ நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா காலம் என்பது ஒரு சிறப்பாகவும் இருந்தது.

அன்று தொடங்கிய சாந்தன் அவர்களின் புகழ் என்பது புதுவை அண்ணர் அவர்கள் முன்னர் குறிப்பிட்டதுபோல உலகம்முழுவதும் சென்றடைந்து புகழ் பூத்த பாடகராக அறியப்பட்டு இன்று அவர் எம் எல்லோரையும் விட்டு பிரிந்து இறைவன் காலடியில் சங்கமம் ஆகியிருக்கிறார்.

நேற்றோடு இன்று நாள் நகரும்
அவர் நினைவுகள் என்றும் சங்கமிக்கும்.

ஈழத்தின் பாடகர் சாந்தன் சற்று முன் உயிரிழந்துள்ளார்-http://eeladhesam.com/?p=51357

Posted by Eeladhesam News on Sonntag, 26. Februar 2017

கனகதரன்.

Related posts

Top