பிரித்தானியாவுடன் அமெரிக்கா ஜெனிவாவில் பேச்சு – சிறீலங்கா குறித்தும் ஆராய்வு!

சிறீலங்கா, உள்ளிட்ட பூகோள மனித உரிமை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பாக அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையில் ஜெனிவாவில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அனைத்துலக அமைப்புகள் விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் எரின் பார்க்லே தலைமையிலான குழுவினரும், பிரித்தானியாவின், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தில், ஆசிய, பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா தலைமையிலான குழுவினரும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றனர்.

நேற்று முன்தினம் நடந்த இந்தப் பேச்சுக்களில், பூகோள மனித உரிமை விவகாரங்களில் இணைந்து செயற்படுவது குறித்து இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளும் கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்தப் பேச்சுக்கள் ஆக்கபூர்வமானவையாக இருந்தன என்று, பிரித்தானியாவின், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தில், ஆசிய, பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்கா விவகாரம் தொடர்பாகவும், இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

சிறீலங்கா தொடர்பான தீர்மானங்களை அமெரிக்காவே நான்கு தடவைகள் முன்மொழிந்திருந்தது. எனினும், இம்முறை தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியுமா என்பது பற்றிய அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவும், பிரித்தானியாவும், சிறீலங்கா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Top