தமிழர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து பிரித்தானிய அரசாங்கத்திற்கு தொழிற்கட்சித் தலைமை அவசர கடிதம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஆகிய விடயங்களில் தமிழர்கள் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சிற்கு அவசர கடிதம் ஒன்றைத் தொழிற்கட்சித் தலைமை அனுப்பி வைத்துள்ளது.

தற்பொழுது ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் பிரித்தானிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 28.02.2017 செவ்வாய்க்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அவசர மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரித்தானிய நிழல் நிதித்துறை அமைச்சர் ஜோன் மக்டொனல், நிழல் வெளியுறவுத்துறை அமைச்சர் எமிலி தோன்பெரி, நிழல் பன்னாட்டு வணிகத்துறை அமைச்சர் பரி கார்டினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிபோன் மக்டொனா, ஜொன் ரையன், மைக் கேப்ஸ், வெஸ் ஸ்ரிறீற்றிங்க், ஸ்ரிவ்வன் ரிம்ஸ், தங்கம் டெபனெயர், லிஸ் மக்இனெஸ் ஆகியோர் தமிழ் மக்களுக்கு எப்பொழுதும் தொழிற்கட்சி உறுதுணையாக நிற்கும் என்று உறுதியளித்திருந்தனர்.

அத்தோடு ஐ.நா. தீர்மானம், ஜி.எஸ்.பி பிளஸ் ஆகிய விடயங்களில் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க பிரித்தானிய அரசாங்கத்திற்குக் காத்திரமான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்திருந்தனர்.

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா அரசாங்கத்தைத் தப்ப வைக்கும் நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா உடந்தையாக இருக்கக் கூடாது என்ற தொனிப்பொருளுடனும், கடந்த 2015ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிலுவையில் உள்ள அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை சிறீலங்கா அரசாங்கத்திற்குக் கிடைப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கும் பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை 01.03.2017 புதன்கிழமை தொழிற்கட்சியின் நிழல் வெளியுறவுத்துறை அமைச்சர் எமிலி தோன்பெரி அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:

”கௌரவத்திற்குரிய பொறிஸ் ஜோன்சன் பா.உ.
அமைச்சர்
வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகம்
King Charles Street
London
SW1A 2AH

எங்கள் மேற்கோள் எண்: DH/HATH/02001/02170922
உங்கள் மேற்கோள் எண்:
1 பங்குனி 2017

அன்புள்ள பொறிஸ்,

பிரித்தானிய தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று நான் மேற்கொண்ட சந்திப்பின் தொடர்ச்சியாக இக்கடிதத்தை எழுதுகின்றேன். ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1 இற்கு உட்பட்டு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் எவற்றையும் சிறீலங்கா அரசாங்கம் காண்பிக்காததையிட்டு எழுப்பப்பட்ட கரிசனைகளே இக்கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுவதற்குக் காலாக அமைந்தது.

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறீலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டிய பிரத்தியேகமான நடவடிக்கைகளை முன்னிறுத்தும் வகையில் தீர்மானம் 30/1 அமைந்திருந்ததை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.

இவற்றில் முக்கியமானது போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து, அவற்றை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தித் தண்டனைகளை அளிப்பதற்கான பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும். எனினும் தீர்மானம் 30/1 நிறைவேற்றப்பட்டு பதினெட்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இவ்வாறான பொறிமுறையை சிறீலங்கா அரசாங்கம் ஏற்படுத்தத் தவறியிருப்பதும், அவ்வாறான பொறிமுறை எப்பொழுது ஏற்படுத்தப்படும் என்பதை வெளிப்படுத்தாது இருப்பதும் கவலைக்குரியதாகும்.

அத்தோடு யுத்தத்தின் பொழுது காணால் போன தமது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான பதில் கிட்டாத நிலையில் இலங்கையில் உள்ள பல பொதுமக்கள் விரக்திக்கு ஆளாகியிருப்பதும் எனது கவனத்திற்கு வந்துள்ளது. இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் விசாரணை தொடர்பான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தித் துயரில் வாடும் தாய்மார் சிலர் பட்டினிப் போராட்டங்களையும் மேற்கொண்டிருக்கின்றனர்.

அதேநேரத்தில் கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களின் படிப்பினைகளின் அடிப்படையில் சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் செயற்படத் தவறியிருப்பதோடு, மனித உரிமைகள் பற்றிய அடிப்படை விழுமியங்களையும் பேணத் தவறுகின்றனர். இதில் கவலைக்குரிய விடயம் யாதெனில், கடந்த மாதம் வெளியாகிய ஐ.நா. மன்றின் விசாரணைப் பீடத்தின் கண்டறிக்கை, சிறீலங்காவின் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைக் கருத்திற் கொள்ளாது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சித்திரவதைகளில் ஈடுபடுகின்றனர் என்பதுதான்.

தான் வழங்கிய வாக்குறுதிகளை சிறீலங்கா அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு அது ஆற்ற வேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. எனவே தற்பொழுது நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வைக் கூடிய அளவிற்கு சாதமாகப் பயன்படுத்தி தீர்மானம் 30/1 ஐ அமுல்படுத்தும் விடயத்தில் சிறீலங்கா அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தும் வகையிலான தொடரித் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன்.

அதிலும் குறிப்பாக தீர்மானம் 30/1 இன் கீழ் நிறைவேற்றப்படாத அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதற்குத் திடமான கால எல்லை ஒன்றைப் புதிய தீர்மானத்தின் ஊடாக விதிப்பதோடு, அது கடந்த கால உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கான நீதிப்பொறிமுறையை நிறுவும் முக்கிய வாக்குறுதிகளையும், 1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதையும் நெறிப்பதாக அமைய வேண்டும் என நான் நம்புகின்றேன்.

மனித உரிமைகள் விடயத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை உரிய கால எல்லைக்குள் நிறைவேற்றி அது விடயத்தில் முன்னேற்றத்தைக் காண்பிக்குமாறு சிறீலங்கா அரசாங்கத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா வலியுறுத்தும் வகையில் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு சகல கட்சிகள் மட்டத்திலும் ஆதரவு உண்டு என்பது எனது அசையாத நம்பிக்கையாகும்.

அத்தோடு சிறீலங்காவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வணிகச் சலுகைகள் வழங்கப்படும் விடயத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டு வருமாறு உங்களை நான் அழுத்தமாக வலியுறுத்துகின்றேன். இச் சலுகைகள் மனித உரிமைகள் விடயத்தில் சிறீலங்கா அரசாங்கத்தின் செய்கைகளை அடிப்படையாகக் கொண்டே மீளப்பெறப்பட்டன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை என்பதோடு, ஏற்கனவே தீர்வு காணப்படாத விடயங்களின் பாரதூரத் தன்மையைக் கருத்திற் கொண்டு இச் சலுகைகளை மீண்டும் வழங்குவதற்கு இன்றைய காலப்பகுதியைப் பொருத்தமான நேரமாக நான் கருதவில்லை என்பதையும் குறிப்பிடுகின்றேன்.

உங்கள் கிரமமான பதிலை எதிர்பார்த்துள்ளேன்.

கௌரவத்திற்குரிய எமிலி தோன்பெரி பா.உ.
இஸ்லிங்க்ரன் மற்றும் பின்ஸ்பெரி தொகுதி
நிழல் அமைச்சர்
வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்கள்”

Related posts

Top