எழிலன் விவகாரம்: மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன இன்றும் நீதிமன்றில் ஆஜராகவில்லை!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டநிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின்போது, முக்கிய சாட்சியாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன மன்றில் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும் அந்த ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன மன்றில் தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இறுதி யுத்தத்தில் 58 ஆவது படைப்பிரிவிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தனன அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

எனினும் அதனை ஏற்க மறுத்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் குறித்த அறிக்கையானது முழுமையற்ற ஒரு ஆவணமாக காணப்படுவதாகவும் அனைத்து விபரங்களும் அடங்கிய முழுமையான ஆவணத்தை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Top