நாங்கள் ஏன் தியாகம் செய்யவேண்டும், நீங்கள் தியாகம் செய்ய தயாரா?: இல.கணேசனுக்கு சத்யராஜ் அதிரடி

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் விவசாயிகளும், இளைஞர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த இல.கணேசன், சமீபத்திய பேட்டி ஒன்றில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக தமிழக மக்கள் தியாகம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

இவருடைய இந்த சர்ச்சை பேச்சு பலரது மத்தியிலும் பெரிய எதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இல.கணேசனின் இந்த பேச்சு குறித்து சத்யராஜிடம் கேட்டதற்கு அவர் கூறும்போது, “ஹைட்ரோ-கார்பன் திட்டத்துக்காக நாங்கள் உயிரை விட்டு தியாகம் செய்ய வேண்டும்? என்று சொன்னவர்கள் அவர்கள் அந்த தியாகத்தை செய்வார்களா? தியாகம் என்றால் செத்துப் போக சொல்கிறார்களா? மக்களை பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும், அதைப் பற்றி அறிவித்திருந்தாலும், அந்த பகுதியில் வாழும் மக்கள் அந்த திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தால், கண்டிப்பாக அந்த திட்டத்தை கைவிடவேண்டும்.

நான் பெரிய தொழில்நுட்ப வல்லுநர் கிடையாது. ஆனாலும், இதைப்பற்றியெல்லாம் நான் படித்திருக்கிறேன். பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையும் படித்தேன். அதனுடைய பாதிப்பு என்னவென்று தெரிந்தது. அது கொடுமையான பாதிப்பாக இருக்கிறது. ஆகையால், இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். நெடுவாசலில் போராடும் அனைத்து போராட்டக்காரர்களுக்கும் என்னுடைய முழு ஆதரவு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Top