உடைகிறதா பன்னீர்செல்வம் அணி – முக்கிய இரு நிர்வாகிகள் சசிகலா அணியில் இணைவு!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் இரண்டு பேர் விலகி, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே அதிகாரப்போட்டி காரணமாக அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. பன்னீர்செல்வம் – சசிகலா என இரண்டு அணிகளாக அ.தி.மு.க பிரிந்ததால், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன் மற்றும் 12 எம்.பி-க்கள், 11 எம்.எல்.ஏ-க்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், அ.தி.மு.க நிர்வாகிகள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், பன்னீர்செல்வம் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் இரண்டு பேர் விலகியுள்ளனர். நெல்லை மாவட்டம், செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் செல்லப்பா, கடையநல்லூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் ஆகியோர் இன்று அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட ஐந்து அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related posts

Top