சிறிலங்காவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்- ஐ.நா, உறுப்பு நாடுகளுக்கு ஆணையாளர் பரிந்துரை

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், ஐ.நாவுக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை சிறிலங்கா நடைமுறைப்படுத்தியுள்ளதா என்பது குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த அறிக்கையின் முதல்நிலைப் பிரதி இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிறிலங்கா அரசுக்கான பரிந்துரைகள், ஐ.நா முறைமைக்கான பரிந்துரைகள், உறுப்பு நாடுகளுக்கான பரிந்துரைகள் என்று தனித்தனியாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில், ஐ.நாவுக்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில்,

நிலைமாறுகால நீதி பொறிமுறைகளை அபிவிருத்தி செய்வதற்கு, தொடர்ந்து தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவை சிறிலங்காவுக்கு வழங்க வேண்டும். அனைத்துலக தர நியமங்களுக்கு ஏற்ப, நிலைமாறு கால நீதி தொடர்பான ஆதரவை தொடர்ந்து ஒருக்கிணைக்க வேண்டும்.

சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அமைதிகாப்பு, இராணுவ பரிமாற்றங்கள், மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது, கடுமையான ஆய்வு செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, உறுப்பு நாடுகளுக்கான முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில்,

சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருக்கமான தொடர்புகளை பேணுவதுடன், நாட்டின் முன்னேற்றங்களையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும்.

சித்திரவதை, காணாமலாக்குதல், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று குற்றம்சாட்டப்படுபவர்கள், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம், உலகளாவிய அதிகார வரம்புக்குட்பட்ட வகையில். விசாரிக்கப்பட்டு, தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும்.

கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணும் வகையில், பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்க முறைமைகளை உருவாக்கும் சிறிலங்கா மக்களின் முயற்சிகளுடன், தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Related posts

Top