கிளிநொச்சியில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற இராணுவ வீரர்!

கிளிநொச்சி, சாந்தபுரம், 8ஆம் வீதி பகுதியில் ராணுவ வீரர் என சந்தேகிக்கப்படும் நபரொருவரால் பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 56 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சாந்தபுரம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த குறித்த பெண்ணை, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்த ராணுவ வீரர் என சந்தேகிக்கப்படும் நபர், பற்றைக் காட்டுக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார்.

அப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த நபர் தொடர்பில் சந்தேகம்கொண்டு அப்பகுதிக்கு வந்த குறித்த பெண்ணின் மகன், பற்றைக் காட்டுப் பகுதியிலிருந்து வந்து அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்றுள்ளார்.

அதன்போது குறித்த நபர் பெண்ணின் கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து கத்திக் குத்துக்கு இலக்கான பெண் கிராமத்தாரின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் உடனடியாக ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

Top