நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் மூடப்பட்டால் இந்தியாவுக்கு நல்லது.

வாடிவாசல் என்ற கிராமத்து மரபுவழி வழக்கு சொல் குறியீட்டு அடையாளத்துடன் தமிழக மக்கள் மத்தியில் பற்றிப்படர்ந்த சல்லிக்கட்டு என்ற உணர்வுமயமானமாபெரும் உரிமைப் புரட்சி, மெரீனா கடற்கரையில் அரச அடாவடி அடக்குமுறையுடன் முடிக்கப்பட்டிருந்தாலும் அந்த மக்கள்புரட்சி வரலாற்று பதிவில் இடம்பெற்ற மிகப்பெரிய வெற்றியாகவே நடந்து முடிந்திருந்தது,

சல்லிக்கட்டு புரட்சியின் அந்த வெப்பம் ஆறுமுன்னரே மக்கள் விரோத மத்திய மாநில அரசுகளின் கயமை திட்டத்தில் நெடுவாசல் என்ற இடத்தில் அமையப்பெற்றிருந்த ஹைட்ரோ கார்பன், மற்றும் மீத்தேன் எரிவாயு வேதியல் அகழ்வு குளாயடியில் மீண்டும் மக்கள் போராட்டம் மையம்கொண்டு, எரிவாயு கிணறு மூடப்படவேண்டும் என்று திரண்ட மக்கள் கூட்டம் மிகப்பெரிய வெகுசன போராட்டமாக உருவெடுத்து இரண்டு வாரங்களை கடந்தும் தொடர்கிறது, நெடுவாசல் மக்களுடன் பல்வெறு அமைப்புக்களும் அரசியற்கட்சிகளும் போராட்டத்தில் குவிந்து வருகின்றனர்.

மக்களின் அறப்போராட்டத்திற்கு முகங்கொடுக்க முடியாத மத்திய மாநில அரசுகள், நெடுவாசல் போராட்டமானது சல்லிக்கட்டுக்கான மெரீனா புரட்சி போராட்டம்போல மாறிவிடக்கூடாது என்ற நோக்கோடு, மக்கள் கோரிக்கைக்கு பணிந்து பின்வாங்குவது போன்ற நழுவல் போக்கை காண்பித்து நீர்த்துப்போகக்கூடிய சில கருத்துக்களை சந்தற்பவாதமாக வெளிப்படுத்தியிருக்கின்றன,

இருந்தும் மக்கள் விரோத பாஜக அரசானது தற்காலிகமாக திட்டத்தை தாமதப்படுத்தி தாமிழக அரசை சமரசம் செய்து மக்களுக்கு ஏமாற்று வாக்குறுதிகளை கொடுத்து திரும்பவும் திட்டத்தை கயமைச் சதியுடன் செயற்படுத்த முனையும் என்பதாகவே தமிழக பாஜகவின் பேச்சாளர்களின் திமிர்த்தனமான பேச்சுக்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, சசிகலாவின் சிறைவாசம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் உடைவு,போன்ற காரணிகளால் மிகவும் பலவீனப்பட்டுப்போய் கிடக்கும் பழனிச்சாமியின் அதிமுக அரசு மக்கள் நியாயத்தின் பக்கம் நிற்கவும் முடியாமல், மக்கள் விரோத பாஜகவின் கட்டளையையும் புறக்கணிக்கமுடியாமல் திரிசங்கு நிலையில் தவிக்கிறது, இருந்தும் மக்கள் நலனை விடவும் மோடி அரசின் கட்டளைக்கு அடிபணியும் நிலைக்கு மாநில அரசு தள்ளப்படும் நிலையே அதிகமாக இருக்கும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அவரது தலைமையில் இருந்த தமிழக அரசால் ஏற்காமல் புறக்கணித்த மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் ஜெயலலிதாவின் மறைவின்பின்னர் தினம் ஒரு திட்டமாக மத்திய அரசு நிறைவேற்றியது அனைவருக்கும் நினைவிருக்கும்.

மத்திய அரசின் கட்டளைக்கமைய மெரீனா கடற்கரையில் நடத்தியதுபோன்ற தடியடி அடக்குமுறை ஒன்றை நெடுவாசல் களத்திலும் கட்டவிழ்த்து விடுவதற்கான ஆயத்தங்களில் தமிழக அரசு இறங்கியிருப்பதாகவே சில அறிவித்தல்கள் அறியக்கிடைக்கின்றன. அதன் முன்னோட்டமாக நெடுவாசல் கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் தவிர வெளியிடங்களில் இருந்து போராட்டத்தில் கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்கள், கணினி மையங்களில் வேலைசெய்யும் இளைஞர்கள் போராட்டத்தில் பங்குபற்றவேண்டாம் என்று ஒரு அறிவித்தலை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியா போன்ற பின்தங்கிய ஏழை நாடுகளின் பொரளாதாரம் உயரவேண்டு மென்றால் உள்நாட்டு உற்பத்தி பெருகவேண்டும், பெருந்தொகையான அன்னிய செலாவணியை ஈட்டித்தரவல்ல பெற்றோலியம் மற்றும் எரிவாயு போன்ற வளங்கள் உள்நாட்டிலேயே இருக்குமானால் அவைகளை கண்டறிந்து அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்கள் வறுமையை போக்க அரசு பாடுபடவேண்டும் என்பது கொள்கைரீதியாக சரியான ஒன்றுதான். அதற்கு இடம் பொருள் ஏவல் என்ற வரைமுறை இருப்பதையும் மத்திய சர்க்கார் நினைவில் கொள்ளவேண்டும்.

மத்திய கிழக்கு வட்டகையில் உள்ள அரபு நாடுகள் அனைத்தும் பெற்றோலியம் மற்றும் எரிவாயு போன்ற வளங்களை மட்டுமே முதற்தர பொருளாதாரமாக கொண்டு செல்வம் கொழிக்கும் நாடுகளாக பரிணமித்து நிற்கின்றன, ஆனால் அந்த நாடுகள் மக்கள் குடியிருப்பு இல்லாத பாலைவனங்கள், கடல்கள் கடற்கரை சார்ந்த இடங்களை மட்டுமே எண்ணெய் அகழ்வுகளுக்கு பயன்படுத்துகின்றன.

மாறாக இந்திய அரசு மக்களின் குடியிருப்பு உள்ள இடங்களில் அணு உலைகளையும், குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் மீத்தேன் வாயு அகழ்வுகள், விவசாய விளை நிலங்கள் குடியிருப்பு பகுதிகள் ஊடாக கெய்ல் நிறுவனத்தின் திரவ எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டம் இப்படி உலகநாடுகளும் சர்வதேச சமூகமும் நகைக்கும் வண்ணம் எதிர்மறையான செயற்பாடுகளை நடைமுறையாக கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நரிமணம் என்ற கிராமத்தில் எரிபொருள் எடுக்கப்படுவதாகவும் அதற்கான நிர்ணயம் செய்யப்பட்ட ( Royalty) உரிமப் பணம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படுவ்வதில்லை என்றும் தொடர்ச்சியான குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
ஏற்கெனவே மீத்தேன் என்ற பெயருடன் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசுகளால் கொண்டுவரப்பட்ட அதே திட்டம்தான் இன்றைய ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றும், மீத்தேன் எனப்படும் திட்டத்தை அப்போதய முதலமைச்சர் ஜெயலலிதாவின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருந்தது அதே திட்டம் இப்போது தந்தரமாக ஹைட்ரோ கார்பன் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு கொண்டுவரப்படுகிறது.

ஹைட்ரோ கார்பன் என்பதற்கும் மீத்தேன் என்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த வேதியல் பொருட்களே. நிலத்துக்கு அடியில் ஒன்று இரண்டு கிலோ மீற்றர் ஆழத்துக்கு துளை போட்டு அங்குள்ள பாறைகளை பக்கவாட்டுக்கு துளைத்து பாறைகளுக்கு அடியில் இருக்கும் கார்பன் எனப்படும் நிலக்கரி படிமங்களில் அடங்கி கிடக்கும் எரிவாயுக்களை குளாய்கால் மூலம் வெளியே எடுக்கப்படும்.

நிலத்துக்கடியில் அமுக்கத்திலிருக்கும் கனம் இல்லாத மீத்தேன் வாயுக்கள் பதிக்கப்பட்ட குளாய்கள் மூலம் தானாக வெளியே வரத்தொடங்கும். இரண்டு கிலோ மீற்றர் ஆழத்திலிருந்து மேலே வந்து சேரும்போது கச்சாய் எண்ணெய் போன்ற திரவங்களும் சேர்ந்து திண்மமாக வருவதனால் மீத்தேன் வாயுவை வெளியே எடுப்பதற்கு செயற்கையான அமுக்கம் ஒன்று தேவைப்படும் அதற்காக குறிப்பிட்ட பொருள் வெளியேறும் குளாய்க்கு பக்கத்தில் இன்னும் ஒரு துளை போட்டு மற்றொரு குளாயை இறக்கி அதன்மூலம் தண்ணீரை அழுத்தமாக உள்ளே செலுத்தவேண்டும். ராட்சத பம்புக்கள் மூலம் தண்ணீரை செலுத்தும்போது தண்ணீரானது கொடுக்கும் அழுத்தம் காரணமாக நிலத்துக்கடியில் இருக்கும் மீத்தேன் வாயுக்கள் வெளியேறும்.

தண்ணீருடன் உப்பும் சேர்த்து சில ரசாயன கலவைகளை உள்ளே சேர்த்து அனுப்பும்போது நிலத்துக்கடியில் பெருத்த வெப்பம் உண்டாகி அழுத்தம் அதிகரிக்கும்போது கீழே பாறைகளில் வெடிப்பு விரிசல் உண்டாகி அங்கே தண்ணீர் உட்புகுந்து ஆக்கிரமிக்கும்போது மீத்தேன் வாயு முழுவதும் மேல் நோக்கி தள்ளப்பட்டு வந்து சேருகிறது.

அமுக்க வீரியம் நிலத்துக்கடியில் குறையும்போது மீண்டும் மீண்டும் அதிகளவு இரசாயன கலவைகளை செலுத்தி நிலத்துக்கடியில் ஒரு பெரும் கொதிநிலையை உண்டாக்கி ஒருவிதமான சிதைவை பாறைகளில் ஏற்படுத்துவார்கள்.

நிலத்தின் மேற்பரப்பில் ஒரு ஏக்கர் அளவில் காணப்படும் ஹைரோ கார்பன் வேலைத்திட்டம் நிலத்துக்கடியில் ஐம்பது அறுபது ஏக்கர் பரப்பளவிலான விஸ்தீரணத்துக்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவிலான எரி பொருளை சுவீகரிக்கவல்லது.

வெளியே கொட்டப்படும் கழிவுகள் பம்ப் பண்ணப்பட்டு திரும்பி வரும் கழிவுநீர் அனைத்தும் சேர்ந்து சுற்று வட்டார நிலத்தை உப்பு களப்புக்கு நிகரான தன்மையை உண்டாக்கும். மீத்தேன் கழிவுகள் கொட்டப்படும் நிலம் தொடர்ந்து பல வருடங்களுக்கு காயாமல் ஈரமாகவே இருக்கும். ஒரு வருடத்திலிருந்து மூன்று வருடங்களுக்கு ஒரு துளை பலனளிக்கும் என்கின்றனர். ஒரு துளை ஓய்வு பெற்றபின்னர் சற்று தள்ளி மீண்டும் துளைபோட்டு குளாய் பதித்து கொள்ளுவார்கள்.

எனவே ஹைரோ கார்பன் எடுப்பதற்கு நிலங்களை கொடுத்தவர்கள் மட்டுமல்ல சுற்றியுள்ள நிலங்களும் பெருமளவுக்கு பாதிக்கப்படும். அத்துடன் குளோறின் எனப்படும் ரசாயனத்தின் மணத்தை ஒத்த ஒரு நெடி காற்றில் பரவுவதால் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு சுவாசப்பை சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயமும் உண்டு.

Asthma எனப்படும் சுவாசக்கோளாறு, மற்றும் தோல் வியாதிகள் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு, நாடு முழுவதும் பல்வேறு இடங்கள் இனம் காணப்பட்டுள்ளன. ஏற்கெனவே நாகாலாந்தில் பணிகள் ஆரம்பித்துவிட்டன. நெடுவாசல் அகழ்வுப் பணிக்கு `ஜெம் லேபரட்ரீஸ்’ என்ற தனியார் நிறுவனத்துக்கும் காரைக்கால் அகழ்வுப் பணிக்கு `பாரத் பெட்ரோ ரிசோர்ஸ்’ என்ற அரசு நிறுவனத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

நெடுவாசலைப் பொறுத்தவரை, அடுத்த 15 ஆண்டுகளில் நான்கு கோடி டன் எண்ணெய் மற்றும் 2,200 கோடி கனமீட்டர் எரிவாயு எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தோண்டி எடுக்கப்படும் வாயுக்கள் மற்றும் எண்ணெயின் விலையை அந்தந்த நிறுவனங்களே முடிவுசெய்துகொள்ளவும், அவர்களே சந்தைப்படுத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஓ.என்.ஜி.சி., ஓயில் இந்தியா லிமிடெட் ஆகிய அரசு நிறுவனங்கள், இந்தியாவில் எண்ணெய் வளம்மிக்க நிலப்பகுதிகளைத் தொடர்ந்து ஆய்வுசெய்து, எண்ணெய் வளம்கொண்ட பகுதிகளைப் பட்டியலிட்டுள்ளன. இப்போது இவற்றை எடுத்து, தனியாருக்கு கொடுக்கிறார்கள். அந்த நிறுவனங்களுக்கு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வேலைகளும் அதற்கான செலவுகளும் மிச்சம். உண்மை இப்படியிருக்க, `ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு அதிக செலவாகும் என்பதால், தனியாருக்கு விடுகிறோம்’ என மத்திய அரசு கூறுகிறது. ஆதாயம் வராத எந்தத் திட்டத்தையும் தனியார் நிறுவனங்கள் எப்போதும் ஏற்காது என்பது யாவரும் அறிவர்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கூடங்குளம் அணுமின் நிலையம், கெய்ல் குளாய் திட்டம் இவைகளால் தமிழகத்து மக்களுக்கு எந்த பலனும் இல்லை மாறாக நஷ்ட்டமும் சுகாதார சீர்கேடுகளும் சுற்றுப்புற சூழல் பாதிப்பும் பெருமளவில் உண்டாகியிருக்கிறது. இருந்தும் ஆட்சியாளர்கள் தம்மை ஏய்க்கிறார்கள் என்பதை காவிரி மேலாண்மை வாரியம் விடயத்திலும், முல்லை பெரியாறு விடயத்திலும், தெரிந்துகொண்ட தமிழக மக்கள் சல்லிக்கட்டு போராட்டத்தின்மூலம் கோபத்தை வெளிப்படுத்தினர் சல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி ஒரு பரிமாணத்தை படிப்பினையாக தமிழர்களுக்கு கொடுத்திருக்கிறது.

அடுத்து நெடுவாசல் போர்க்களம் மூண்டிருக்கிறது ஒருவேளை ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு நெடுவாசல் போராட்டத்தை அடக்கிவிடலாம் என்று நினைத்தால் அது நிச்சியம் இந்தியாவிலிருந்து தமிழகம் பிரிந்து போவதற்கான ஆரம்பமாக நிச்சியம் அமையும்.

ஈழதேசம் செய்திகளுக்காக,
கனகதரன்.

Related posts

Top